Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் நான் ஓர் உயிருள்ள பிணம் | ரமேஷ் பிரேதன் நேர்காணல்

நான் ஓர் உயிருள்ள பிணம் | ரமேஷ் பிரேதன் நேர்காணல்

14 minutes read

உரையாடல் – சித்ரன், லஷ்மி சரவணக்குமார், முருகபூபதி, சபரிநாதன், சூர்யதேவ்

லக்ஷ்மி சரவணகுமார்: அதீதனின் இதிகாசம் கிரணத்தில் வந்தபோது அதை நீள்கவிதை என்றே நீங்கள் அறிவித்திருந்தாலும் நூலாய் வாசிக்கையில் அதையொரு நாவலாகவே உணரமுடிந்தது. அந்த வடிவத்திலான நாவல் எழுத்துமுறை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அதீதனின் இதிகாசம் என்பது நானும் பிரேமும்  சேர்ந்து உருவாக்கிய அதி கதை மண்டலம். இதன் சொல்முறையில் உலகக் கலைஞர்கள், போராளிகள்   பலரின் மனச்சிதைவுற்ற வாழ்க்கை மற்றும் படைப்புகளின் தாக்கமுண்டு. குரூர அரங்கின் நிகழ்வுகளை எழுதிப்பார்க்கும் எத்தனம். இதில் பயின்று வரும் கவிதையியல் ஒழுங்கு, உள்நுழைந்த ஒருவரை வெளியேறவிடாமல் கதவை அடைத்துவிடும். அதிலிருந்து வெளியேற உயிர்ப்பலியிடவேண்டும். எனவே, அவ்வாழ்வியக்கப் படைப்பு வெளியிலிருந்து வெளியேற விரும்பிய சக படைப்பாளியான பிரேம் என்னைப் பலியிட்டார். காளியின் கழுத்தில் மாலையாகத் தொங்கும் கழுத்தறுபட்ட மண்டைகள் ஒன்றில் என் முகத்தை அடையாளம் காணலாம்.

சாருநிவேதிதாவும் அமரந்தாவும் கிரணம் இதழில் வெளியிட்ட அனைத்து ஆக்கங்களையும் ஒரே நூலாகத் தொகுக்கும்போது அதன் வடிவவொழுங்கை மாற்றியமைத்தேன். அவற்றின் மீது படிந்திருந்த பிற ஆளுமைகளின் செல்வாக்கை நீக்கினேன். சிலவற்றை நீக்கி, பலவற்றைப் புதியதாகச் சேர்த்து, சமகால பின்நவீனத்துவ வாசிப்புத் தொழில்நுட்ப முறைமையை உள்வாங்கி, அதை பிரதியாக்கத் தொழில்நுட்பத்திற்குப் பயன்படுத்தினேன். செவ்வகப் பாறையைத் தேர்ந்து சிலைவடிக்கும் வேலை. பிரேமின் ஒரு துளி விந்தை உள்வாங்கிக் கருத்தரித்து வளர்த்து ஈன்ற உயிர்த் தொழில்நுட்ப விளைவு. கிரணம் எழுத்துகள், அதீதனின் இதிகாசமாக உருமாற்றமடைந்த முப்பதாண்டுகளின் கதை இது. கவிதையை நாவலாக மாற்றிய ரசவாதம்.

கிரணம் எழுத்துகள் அதீதனின் இதிகாசமாக மாறியிருக்கிறது. இந்த அதீதனின் இதிகாசத்தை இன்று எழுதினால் கதை சொல்லும் முறையும் அதன் வீச்சும் வேறாக இருக்கும். அதுவொரு மூலச் செவ்வியல் பிரதி, அதைத் திருப்பித் திருப்பி எழுதி காலத்தையும் ஆற்றலையும் வீணடிக்க விருப்பமில்லை. ழான் ழெனே தனது முதல் படைப்பான கடுங்காவல் என்ற நாடகத்தைத் தன் வாழ்நாள் இறுதிவரை செப்பம் செய்தபடி இருந்தார். தனது முதல் படைப்பே உயிரோடு வாழ்ந்துபார்த்த இறுதிப் படைப்பாகவும் அமைந்துவிட்டது. அதுபோலவே நானும் பிரேமும் இணைந்து செய்த முதலும் முடிவுமான ஆக்கமாய் அதீதன் முடிந்துவிட்டான்.  இரட்டையரின் வலிநிறைந்த வாழ்க்கையில் விளைந்த இப்பனுவல், சவப்பேழை வடிவில் அமைந்த பனுவல், இது இப்படியாகவே இருக்கட்டும். ஒற்றைச் சவப்பெட்டிக்குள் இரண்டு பிணங்கள். இப்பனுவலின் எழுத்து முறையைத் தன்னியல்பாகச் சிலர் கவினுறப் பின்பற்றுகிறார்கள். படைப்பிலக்கியத்துறையில் அதீதன் செலுத்தும் தாக்கம் அதிகம். ஆனால், விமர்சன அறிவொழுங்கு இல்லாத தமிழில் எந்தவொரு கல்விப்புலமோ இலக்கியப்புலமோ இப்பனுவலைக் குறிப்பிடுவதில்லை. இது, இருவர் கண்ட கிரணம் எழுத்தியக்கம்; இது, இருள் மனவெளியில் நிகழும் மூன்றாமுலகப் பேரரசியல் செயல்பாடுகள் பற்றிய நுண்சொல்லாடல்கள் என்பதைக் கூரிய விமர்சகர்களே விரித்து விளக்கி எழுதவேண்டும்.

சபரிநாதன் : நீங்கள் எழுதவந்தபோது தமிழ் நவீனக்கவிதை மரபில் எவ்விடத்தில் தங்களை பொருத்திக்கொண்டீர்கள்? அது பற்றி எத்தகைய விமர்சனங்களைக் கொண்டிருந்தீர்கள்? எத்தகைய எதிர்பார்ப்புகள் இருந்தன உங்களிடம்?

பாரதி, பாரதிதாசன் வழியாகத்தான் தமிழின் நவீன இலக்கியத்துக்குள் நுழைந்தேன். இலக்கியம் என்றால் என்னவென்றே அறியாத தமிழ் பொதுப்புத்திக்குள்ளிருந்து வெளியேறி தமக்கான மாற்று வெளியைக் கட்டமைத்துக்கொண்ட சிறு பத்திரிகைத் தளம் என் முகத்தில் கதவை அறைந்து சாத்தியது. இத்தளத்தில் செயல்பட்ட படைப்பாளிகள், விமர்சகர்களின் வாசிப்பும் படைப்பும் வேறாகவும் மனம் என்பது வர்ணாசிரமத்துக்குள் புதைந்தும் இருந்தது. இங்கு சக இலக்கியவாதிகளின் வட்டார அணுக்கம் என்பதை, நுணுகிப் பார்த்தால் அது சாதிய அணுக்கமாக இருந்தது. இன்று சொல்கிறோம், தலித் இலக்கியத்தைச் சாதிய இலக்கியம் என்று; ஆனால், இங்கு தொடக்கம்முதல் எல்லாமே சாதிய இலக்கியம்தான். எடுத்துக்காட்டாக, மெளனி சூத்திரராக இருந்திருந்தால் முதலிடத்தில் வைக்கப்பட்டிருக்கமாட்டார். கால் வைத்து நடந்த இடமெல்லாம் நான்கு வர்ணப் பூணூலில் சிக்கித் தடுக்கிவிழுந்தேன். இங்கு இடதுசாரிகள் மட்டுமே ஒப்பீட்டளவில் சாதியிலிருந்து வெளியேறியவர்களாக இருந்தனர். சக இலக்கியவாதிகள் எனது சாதியைத் தெரிந்துகொள்ள திருட்டு ஆர்வம் கொண்டிருந்தனர். புதுச்சேரிக்காரன், வெளியிலிருந்து வந்தவன், என்னைத் தமிழ்க்கவியாக ஒரு நிலப்பகுதியின் வட்டத்துக்குள் அடைத்து வகைப்படுத்த இயலவில்லை. இப்படியிருக்க, அன்று முதல் இன்றுவரை அந்நியப்பட்டு வெளியில்தான் நின்றுகொண்டிருக்கிறேன். நான் வேளிர் தொல்குடியோன், நவீனத் தமிழிலக்கியன்; ஆனால், இந்தியத் தமிழ்ப் பண்பாட்டு அரசியலை வடிவமைக்கும் பிரம்மனின் உடம்பிலிருந்து வெளியேறியவன். எனக்கு ஐம்பத்தியைந்து வயதாகிறது; இதுவரை, தன் சாதியிலிருந்து வெளியேறிய ஒரு தன்னிலையைச் சந்தித்ததில்லை.

சங்கம் தொடங்கி திருக்குறள், திருமந்திரம் வழியாக வள்ளலாரில் வந்தடையும் சித்தர் மரபிலக்கியம், சமணமும் பெளத்தமும் வழங்கிய பேரிலக்கியங்களை உள்வாங்கி; துணைக்கண்டத்துக்கு வெளியிலிருந்து நவீன – பின்நவீன கலை இலக்கியங்களை எனக்கான அடித்தளமாக்கிக்கொண்டேன். இவற்றிலிருந்து நான் ஆக்கியது மிகக்குறைவானவை; காரணம், என்னை நான் நகலெடுப்பதில்லை. எதிர்பார்ப்புகள் என்று என்னிடம் எதுவும் இருந்ததில்லை. எதிர்பார்த்தல், சாதித்தல் என்பவை அரசியல்வாதிகளுக்கான சொல்லாடல்; இவை கலை இலக்கியவாதிகளுக்கானவை இல்லை. தொடக்கத்தில் மூத்த எழுத்தாளர் பலர் என்னிடம் வாழ்ந்து பெற்ற அனுபவமும் மண் வாசனையும் இல்லை என்றனர்.  நான் வாழ்ந்து பெற்ற அனுபவத்தை எழுதினால் பண்பாட்டுப் பாதுகாவலர்களால் கொல்லப்படுவேன் என்பதை அறிந்தே சொன்னார்கள். மேலும், மண்வாசனை என்பது இங்கு வர்ண வாசனைதானே.

சபரிநாதன் : நவீனக்கவிதை தனிமனித சுயம் சார்ந்த மையம் கொண்டே பெரும்பாலும் இயங்கி வந்துள்ள போது தமிழ், தமிழர் என ஒரு கூட்டுமையம் உங்கள் கவிதைகளில் உள்ளது. ’நான்’,’என்’ இருப்பது போலவே ’நாம்’’எம்’ போன்ற தன்னிலைகளும் உள்ளன. தனியொருவனின் வாழ்வனுபவம் என்பதைத் தாண்டி ஒரு கூட்டுவாழ்வே உங்களுக்கு முக்கியத்துவமுடையதாய்ப் படுகிறது எனலாமா?

ஆம், புவிக்கோளகையில் எந்தவோர் உயிரினமும் தனித்திருப்பதில்லை. தனித்திருப்பதற்கு இனப்பெருக்கம் எதற்கு? குடும்பம், குமுகம், உலகம் என்ற கூட்டமைப்பில் நான் என்பதற்கான இடம் பிறப்பிலும் இறப்பிலும் மட்டுமே ஓர் உடம்பில் பொருள்படுகிறது. எனது வயது என்பது குறைந்த அளவில் ஐயாயிரம் ஆண்டுகள் என்று அறுதியிடப்படுகிறது. இந்த மனிதவுலகின் வரலாறே எனது சொந்த உடம்பின் வரலாறாக இருக்கும்போது, இறப்பற்ற எனது மரபணுக்களின் மூலம் மரணமற்ற பெருவாழ்வில் நான் கட்டமைந்திருக்கிறேன். சுயம் என்ற இயங்கியல் மறுத்த அபெளதிகத்துக்குள் சுருக்கிக்கொள்ளும்போது பரிணாமமற்ற கவிதையியலைக் கண்டடைகிறோம். எழுத்து, சொல், பொருள். எழுத்து பலவாகும்போது சொல்லாகிறது, ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது என்னும்போது, சொற்களின் பெருக்கம் கவிதையாகிறது. ஒரு கவிதை இறப்பற்ற பனுவலாகிப் பெருகுவதற்கு ஓயாத பொருள்கூறலுக்கு வழிவைத்திருத்தல் வேண்டும். கவிதை என்பது கூட்டுப் பிரக்ஞையின் விளைவு; அது தனி ஒரு நசிவில் உருவாவதில்லை. சிறகிலிருந்து பிரிந்த இறகு காற்றின் தீராத பக்கங்களில் தன்னை உதிர்த்த பறவையின் வாழ்வோடு சேர்த்து தன்னையும் எழுதிச்செல்வதே பொருள் இயங்கியல். இப்படிமத்தை மொழியிலிருந்து ஒலி ஊடகத்திற்கு மாற்றி சிம்ஃபோனி இசைக்கோர்வையில் கட்டமைத்தால், பியானோவின் ஒலிக்கட்டைகள் மீது நடக்கும் புறாவைக் காணலாம். சொற்களின் பேரியக்கமே கவிதை முதலான மொழிக்கலை வடிவங்களைக் கட்டமைக்கிறது. காலந்தோறும் மாறி நின்று பொருளுரைப்பதே கவிதையின் இயங்கியல். விதைக்குள் காடு என்பதே உயிரியங்கியல். நான் என்பது ஒருமை எனச் சொல்வது மொழி இலக்கணம்; நான் என்பது ஒருமை இல்லை அது பன்மை எனச் சொல்வது சமூக இயங்கியல். வாழ்க்கை என்பது சமூகத்தால் கட்டமைக்கப்படும் தனிமனித இயங்கியல். இதுவரையான இந்தப் பூமியின் மொத்தக் காலமும் மனித மூளைக்குள் சேகரமாகி இயங்கிக்கொண்டிருக்கிறது; அது தனியுடம்பின் மண்டைக்குள் இருந்தாலும் உலகச் சமூகங்களின் தொகுக்கப்பட்ட அறிவுக் களஞ்சியமாக இருக்கிறது. மூளையால் உருவான எல்லாம் சமூக இயங்கியலின் கூட்டு விளைவே.

முருகபூபதி : நாடக நிலத்தில் நடிகனின் மன உடலும், அதற்கு வெளியே இயங்கும் பொது உடலும் ஒன்றையொன்று சந்தித்துகொள்ளும் இடத்தில் நிகழ்வதென்ன? இன்றைய நடிகனுள் சூல் கொள்ளும் நடிப்புக்கலையின் பாதைகள் எங்கெல்லாம் அலையுறுகின்றன, எங்கிருந்து எடுத்துக்கொள்ள முடியும்?

நாடக நிலத்தில் நடிகரின் உடம்பு ஒரு பிரதியாகிறது; அது குறியீடுகளாகவும் உருவகங்களாகவும் பொருள்கொள்ளப்படுகிறது. நடிகரின் உடம்பானது மேடையில் குவிந்திருக்கும் அரங்கப் பொருட்களில் உயிருள்ள ஒரு பொருள். ஒரு நடிகர் தன்னளவில் தன்னுடம்பிலிருந்து வெளியேறி நின்று அதன் அங்கங்களைத் தனித்தனியாகப் பிரித்துப்போட்டு வெவ்வேறு வடிவங்களில் கோர்த்து  அதன் இயல் ஒருமையைக் குலைக்கிறார். மேடைக்கு வெளியே ஒற்றைப் பொருள்கோளால் நிலைநிறுத்தப்பட்ட உடம்பு, மேடையில் தன்னை வெவ்வேறாகப் பொருள்கொள்ள அனுமதிக்கிறது. நிகழ்த்துப் பிரதிக்கேற்ப ஓர் உடம்பு ஒரு கலைப்பொருளாகிறது. நிகழ்கலை மேடையில் கலைப்பொருளாகும் உடம்பு, போர்க்களத்தில் ஒரு கொலைக்கருவியாகிறது. ஒரு சமூக உடம்பு தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து வெளியேறி, தன்னை வேறாக பொருள்படுத்துவது நிகழ்த்துக்கலைகளில் மட்டுமே சாத்தியப்படுகிறது. நடிக்கும் உடம்பு சமூக அதிகாரத்துடன் கண்ணாமூச்சி விளையாடுகிறது. இயல்பில் ஒவ்வோர் உடம்பும் ஒரு புனைப்பனுவல். ஒவ்வொருவர் வாசிப்பிலும் வெவ்வேறாகப் பல்கிப்பெருகும் பனுவலுக்கு முற்றான ஒற்றை வாசிப்பு வரலாற்றில் ஒருபோதும் சாத்தியமில்லை. சமூக அதிகாரம் உடம்பின் வாசிப்பை நேர்ப்படுத்தி வகைப்படுத்தி தனது அறிதலின் எல்லைக்குள் அடக்கிக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. எனவே, நாடகமேடையில் இயங்கும் ஒரு பனுவல் ஒற்றைப் பொருள்கோளிலிருந்து நழுவி தனக்கான பன்மைத்துவத்தை ஆர்ப்பாட்டத்தோடு கத்திக் கதறித் தெரிவிக்கிறது. யாரொருவராலும் எந்தவோர் உடம்பையும் அறுதியிட்டு வாசித்துப் பொருள்கொள்ள முடியாது. தனியுடம்பின் விடுதலையே ஒரு நிலப்பகுதியின் விடுதலை; நாடகமேடை என்பது விடுதலையடைந்த ஒரு நிலம். இந்திய விடுதலைப் போராட்டக்காலத்தில் அதிகாரத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தமிழ் நாடகவெளி ஒடுக்கப்பட்டது. முன்கூட்டியே தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நாடகப்பிரதி, மேடையில் நிகழ்த்தப்படும்போது நடிகர்களின் உடல்மொழி புதிய பரிமாணங்களைப் பல்கிப்பெருக்கி பார்வையாளர்களுக்கு அதை வேறொன்றாகப் பொருள்படுத்தியது. நிகழ்த்துக்கலைகள் பெரிதும் மொழியைச் சார்ந்து இயங்காமல் உடம்பைச் சார்ந்து இயங்குவதால்; அதிகாரத்தின் கண்காணிப்பு மொழிமேல் குவியும்போது நடிகரின் உடம்பு, பிரதியை வேறொரு தளத்திற்குக் கடத்திவிடுகிறது. ஓர் உடம்பு மொழியின் அதிகாரத்தைக்கூட ஏமாற்றி பிரதியை வேறொன்றாகப் பொருள்படுத்திவிடும் தன்னிச்சையான இயக்கம்கொண்டது. ஒரு நாடகத்தின் ஆசிரியர் பிரதி, இயக்குநர் பிரதி, நடிகர் பிரதி, இவை மூன்றும் வெவ்வேறாக இயங்கக்கூடிய சாத்தியமுள்ளவை. நாடகவெளி எதற்குள்ளும் அடைபடுவதில்லை; அதற்குள் எந்தவொன்றும் அடைபடுவதுமில்லை. ஆக்டோபஸ்களின் நடனத்தின் உட்பொருள், ஐம்புலன்களின் ஐம்புலங்களின் விடுதலை.

சூர்யதேவ் : ஆங்கில இலக்கியத்தில் மில்ட்டனின்   இழந்த சுவர்கத்தில்  கடவுளின் கையைவிட  சாத்தானின் கை ஓங்கியுள்ளதாக விமர்சனம் ஒன்று உண்டு. தாங்களோ பைசாசத்தைத் தேடி வரித்துக்கொண்டீர்கள். நன்மை என்று பேசுவதே தன்னை ஏமாற்றிக்கொள்ளும் தந்திரம் என்று உணர்ந்தீர்கள். மேலும் பைசாசத்தைத் தங்களின் படைப்பூக்க உத்தியாகவும் பயன்படுத்தினீர்கள். பைசாசத்தின் மீதுள்ள ஈர்ப்பே இனிவரும் தலைமுறையினருக்கும் உங்கள் படைப்பை நிலைத்திருக்கச் செய்யும் என்று நம்புகிறீர்களா?

“நடுநிசி மதியம்’’ என்ற கவிதையே உங்கள் கேள்விக்கான பதிலாக அமையலாம். தாய்மை திரிந்த பேய்மையின் கவிதையியலை நாட்டார் மரபு, காப்பிய மரபு, பக்தி மரபில் தொடர்ந்து வருவதைத் தடங்காணலாம். நாட்டார் கதைவெளியில் நடமாடும் நீலியின் நீட்சியைக் கண்ணகியிடம் காணலாம். வளர்த்தெடுக்கப்பட்ட கண்ணகியின் கதையாடலைப் புனிதவதியிடம் காணலாம். நல்லத்தங்காள் கதை ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஏதேனுமொரு தமிழ்க் குடும்பத்தில் நிகழ்ந்துவிடுகிறது. பேய் என்பது தமிழ் நிலத்தில் பெண்ணாலான மனப்பிறழ்வின் இருப்பு. எனது கவிதைகள், கதைகள், நாவல்களில் பேய்களின் நடமாட்டத்தைக் காணலாம். 

பெண்பேய் வாழும் தொல்தமிழ்க் கதைக்குள்
பேயைப் புணரும் இச்சையில் அலைந்து
பைத்தியம் பிடித்துத் தற்கொலை செய்த
எளிய கவிஞனைப் பற்றிய நினைவுகள்
வாழும் இன்றைய தலைமுறைக் கில்லை.

“பனுவல் வெளியே பேய்கள் இல்லை
புணர்ச்சியும் இல்லை கொலையு மில்லை
நீலி திரியும் ஆலங் காட்டில்
பேயைப் புணர்ந்த முக்கண் சடையன்
ஆட்டம் பார்த்தால் பித்தம் தெளியும்
போய்வா கவியே பேயின் யோனி
பெளர்ணமி இரவில் வான்தலை சுடரும்”.

ஆலங் காட்டில் நடுநிசி மதியம்
எலும்பும் தோலும் பேன்தலை விரிசடை
சடலம் எரியும் வாடை குமைந்திட
காரை பேய்மகள் எதிரில் வந்தாள்
தாய்மை பிசகிய பேய்மையின் தரிசனம்
புழுக்கள் நெளியும் சொற்களின் கவித்துவம்
மாயம் செய்யும் மந்திரம் மொழிந்தாள்
தலைகள் சுழற்றி விழுதுகள் விசிறி
ஆடும் ஆலம் ஓசை அடங்கிட
காட்டின் அமைதி இரவின் விளிம்பில்
ஒற்றை விழுதைக் கழுத்தில் சுற்றிய
கவிஞனின் சடலம் அந்தர நடனம்
கலைத்துவம் செறிந்த தற்கொலை மரணம்
காரை காற்பேய் கவிஞனைக் கொன்றது.

செம்மொழிப் பனுவலில் ஆண்பேய் வாழ்ந்திட
அனுமதி இல்லை; பெண்பேய் ஃபாசிசம்
புதுவைக் கவிஞன் செத்தும் தரிக்க
இடமற் றலைந்தான் பனுவல் வெளியே
பேயுடன் வாழ்பவன் கவிதை செய்வான்
பேயைப் புணர்ந்தவன் கடவுள் ஆவான்
செம்மொழி, கவிஞன், கடவுள், பெண்பேய்
சொற்களைத் தின்று தற்கொலை பட்டேன்.

(நடுநிசி மதியம் / புது எழுத்து / 2019.)

பைசாசம், பேய்மை யாவும் எதிர்ச்சமூகச் சொல்லாடலில் கட்டமைவது. பொதுவாக, சமூகத்திலிருந்து விலகிய தன்னிலையே பைத்தியம், பைசாசம் போன்ற மனப்பிறழ்வின் நாடகங்களை நிகழ்த்துகிறது. எனது இலக்கியம் யாவும் எதிர்ச்சமூகச் சொல்லாடல்களால் கட்டமைவது. பொதுச்சமூகம் தனது உள்ளடக்கமாகத் தாய்மையின் அரசியலைக் கொண்டியங்கும்போது; எதிர்ச்சமூகனான நான் பேய்மையின் அரசியலைக் கொண்டியங்குகிறேன். உலகப் பெருமதங்கள் பெண் அறிவாளிகளைப் பேயாக்கிவிடும்; புனிதவதியாரைப் போல. தமிழ் இலக்கியத்தில் பேய்க் கதையாடல்களைத் தொகுத்துப் பார்த்தால் இது துலங்கும். பேய்களாலானவன் பேய்களால் நினைவுகூரப்பட்டால் மகிழ்ச்சிதான். பேயைப் புணராத கவிஞன் முழுமையடைவதில்லை.

தாய்வழிச் சமூகம், தந்தைவழிச் சமூகமாகத் திரியும்போது கூட்டுச் சமூக மனத்தின் தாய்மையின் அரசியல் திரிந்து பேய்மையின் அரசியல் கட்டமைந்தது. சமூக உற்பத்தி உறவுகளில் தாய்மையின் அரசியலும் சமூக அதிகாரக் கட்டமைப்பில் போரியல்சார் பேய்மையின் அரசியலுமாக இனம் பிரிந்தன. தாய்மை, பேய்மை என்பவை ஆண் – பெண் என்ற பால்நிலை எதிரிடை இல்லை. ஆண் நிலை, பெண் நிலை என்ற தனித்த பால் நிலை அரசியல் திரிந்த ஆபெண் கவிதையியலை முன்னெடுப்பதாக எனது பனுவல்கள் கட்டமைகின்றன.

லக்ஷ்மி சரவணகுமார்: உங்கள் கதைகளில் மனநலம் பாதித்தோரின் அக உலகம் பற்றிய பாதிப்புகளை நிறைய காணமுடிகிறது. ஒரு கதையில் பொம்மையை வைத்து எல்லோரிடமும் பிள்ளைக்குப் பால் கொடுக்க வேண்டுமென பிச்சையெடுக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருநாள் நிஜமான குழந்தையுடன் அவ்வாறு பிச்சையெடுப்பாள். அந்தக் கதையில் அவள் மீதான கரிசனமே மிகுதியாய் வெளிப்பட்டிருக்கும்.  அதேபோல் சமீபத்திய நாவல்களிலும் மனப்பிறழ்வின் பதிவுகளை அனேகமாய்க் காணமுடிகிறது. மனப்பிறழ்வைக் குறித்தும் மனப்பிறழ்வு கொண்டவர்களைக் குறித்துமான உங்களது பார்வையென்ன? படைப்பாளிகளிடம் இருக்கும் எக்ஸன்றிக் தன்மைகளையும் நாம் பிறழ்வின் கூறுகளாய் எடுத்துக் கொள்ளலாமா?

மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞனிடம் கேட்கவேண்டிய கேள்விதான் இது. பொம்மை – குழந்தை என்ற சிறுகதையை முன்வைத்துத் தொடங்கும் இக்கேள்வி என்னுடைய அனைத்துவகைப் புனைவெழுத்துகளிலும் மனம் பிறழ்ந்த மனிதர்களின் இருப்பு பற்றி தொட்டுக்காட்டுகிறது. ஆம், பொம்மை – குழந்தை கதையில் இடம்பெறும் இயல்பு பிழன்ற மனிதர் அனைவரையும் தொட்டுப் பழகி நழுவியிருக்கிறேன். என் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் யாரேனுமொரு மனம் பிழன்றவரிடம் சிக்கிச் சின்னாபின்னமாகியிருக்கிறேன். கடவுள் என்ற உருவகமே மனிதமனத்தின் சிக்கலான பிறழ்வின் உச்சம்; அதிலிருந்து ஒருக்காலத்திலும் மனித இனம் தெளிவடையமுடியாது. எந்தவொரு மதத்திலும் எந்தவொரு நாட்டிலும் கடவுளை வழிபடும் தலம் என்பது மனநல மருத்துவமனையாகவே விளங்குகிறது. மனப்பிறழ்வு ஒவ்வொருவருக்குமுண்டு; அதன் விழுக்காடு மட்டுமே ஆளாளுக்கு வேறுபடும். போர்க்களத்தில் ஒருவரையொருவர் கொல்ல ஆயுதமுனையில் உறையும் இருவேறு தன்னிலைகளின் மனம் ஒரே புள்ளியில் திகைத்து நிற்கும் கணமே சூன்யம்; சூன்ய மனத்தின் விளைவே கொலையும் தற்கொலையும். மனிதயினத்தில் கடைசியாய் மீந்து நிற்கும் இருவரில் ஒருவர் மற்றவரைக் கொன்ற பிறகு தற்கொலை செய்துகொள்வார். உடம்பு மட்டுமே ஒருவருக்குச் சொந்தம்; அதில் வினையாற்றும் உள்ளம் என்பது சமூகக் கூட்டு வடிவம்; இரண்டாம் உலகப்போரைத் தொடங்கி முடிவுக்குக் கொண்டுவந்த அரசியல் மனமும் இயற்பியல் மனமும் கொலையின் இறையியல் தன்மைகொண்டவை. இறையியலே மனப்பிறழ்வின் உச்ச பாவனை. உயிரியல் உலகில் மனிதவிலங்கு இறுதியில் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். அணு ஆயுதம் என்பது மனநோயின் ஆகப்பெரிய எதார்த்தம். சக படைப்பாளர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது; நான் கொலையையும் தற்கொலையையும் தள்ளிப்போடவே கவிதைகளையும் கதைகளையும் எழுதுகிறேன். அற இலக்கியம், நீதி இலக்கியம் என்பவை; குறிப்பாக தமிழின் மூத்த பனுவலான திருக்குறளின் ஆகப்பெரிய சமூகப்பணி, கொலையையும் தற்கொலையையும் தள்ளிப்போடுவதே. கண்ணகிக்கு நேரெதிரிடை மணிமேகலை; பேய்மையின் அரசியலைத் தாய்மையின் அரசியல் எதிர்கொள்ளும் புள்ளி. பைத்திய உள்ளம் வெற்றில் ஒடுங்கும். வெறுமையின் கவிதையியலை எழுதிப்பார்க்கிறேன்

லக்ஷ்மி சரவணகுமார்: உங்கள் புனைவுலகின் தொன்மமானது புதுச்சேரியை அதன் மனிதர்களை மீண்டும் மீண்டும் சுற்றி வருகிறது. நிலத்தின் மீதான இந்தத் தொன்ம மீட்டுருவாக்கத்தை நீங்கள் திட்டமிட்டே உருவாக்குகிறீர்களா?

வர்ண, வர்க்கப் படிநிலையாலமைந்த எந்தவோர் இந்திய நிலப்பகுதியும், அதில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் காட்சியாகும். அதுபோலவே புதுச்சேரியும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையில் புலப்படும். எனக்குப் புதுச்சேரி என்பது கொடுங்கனவுகளாலான நகரம்; இங்கு கடலும் அதுசார்ந்த நிலமும் இடுகாடுகளும் சுடுகாடுகளும் தவிர, சிறுவயதிலிருந்த காடும் கழனியுமே நான் பயமற்று இளைப்பாறும் இடங்களாகும். நூலகத்தலங்கள், வழிபாட்டுத்தலங்கள், சாராயக்கடைகள் யாவும் விலங்குகளைக் கொன்று இறைச்சி பதனிடும் கூடங்களாகவே என்னுள் மனப்பதிவாகியுள்ளன. இன்று இந்நிலத்திலிருந்து சொந்தம்கொண்டாட மனிதர் ஒருவருமில்லை. என்னை நானே நினைவில் நிறுத்திய காலம் முதலாகக் கிழக்குக் கடல் மட்டுமே என்னுடன் இருக்கிறது; பிறந்த ஈரம் இன்னும் காயாத அம்மாவின் பனிக்குட நிணநீர் நெடிபோல இறுதிவரை உடனிருப்பது. புதுச்சேரியிலிருந்து நான் பெற்றுக்கொண்டது எதுவுமில்லை. எனது கவிதைகளிலும் கதைகளிலும் ஒரு பெயர்ச்சொல்லாக இடம்பெறுவதால் இந்த நிலத்திற்கு ஓர் அடையாளமும் மரியாதையும் கிடைக்கிறதே தவிர; இதனால் எனக்கு எதுவும் இன்றுவரை கிடைத்ததில்லை. சுப்ரமணிய பாரதி என்ற கவி இங்கு பத்தாண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தார், பெரும் படைப்புகளை யாத்தார் என்பதைத் தவிர, பெருமிதம்கொள்ள எனக்கு இங்கு எதுவுமில்லை. முன்னோடிகளான பாரதிதாசனையும் பிரபஞ்சனையும் என்னால் கொண்டாடமுடியவில்லை; அவர்கள் எனக்கானவர் அல்லர். எனது எழுத்துகளில் வரும் இந்நகரம் ஒரு பாசாங்கு. Pondichéry: trilogy of French India என்ற நாவல்களின் முத்தொகையைப் படித்தால் இது விளங்கும்; இந்தக் கேள்விக்கான பதிலும் கிடைக்கும். பொந்திஷேரி தனி நாடாக இருந்திருந்தால் நான் வேறாக இருந்திருப்பேன்; நான் பிறப்பதற்கு முன்பே இந்திய அரசியல்வாதிகள் என்னைக் கொன்றுவிட்டனர். எனது புனைவுகளில் வெளிப்படும் தவிப்பும் ஏக்கமும் இம்மண்ணின் மைந்தர்களின் ஆழ்மன வெளிப்பாடு. பிரேதன் ஓர் உயிருள்ள பிணம்.

பொந்திஷேரிக்கான தொன்மத்தை நான் மீட்டுருவாக்கவில்லை; முதன்முதலாக, புதிதாக உருவாக்கியிருக்கிறேன்; OUI, PONDICHÉRY, C’EST MON MACONDO.

சபரிநாதன் : தமிழ் தொன்மவியல் உங்கள் கவிதைகளின் சூழமைவாகவே உள்ளது. உங்கள் சிந்தையும் கற்பனையும் அதனால் கட்டமைக்கப்பட்டது என்று சொல்லலாமா அல்லது அது ஒரு வரலாற்று நினைவேக்கம் மட்டும் தானா?

என்னை ஒருபோதும் ஒருமையாய் உணர்ந்ததில்லை; நான் பன்மையின் தொகுப்பு. சமூகம் என்பது தனிமனிதர்களின் தொகுப்பு. சமூக இயங்கியலின் பொருண்மைப் பொருளுரைப்பே வரலாறு. வார்த்தைகளையும் வாக்கியங்களையும் வரலாற்றிலிருந்தே தேர்ந்து தொகுத்து இலக்கியம் செய்கிறேன். இது என்னுடையது என்று நான் எழுதியதில் எந்தவொன்றையும் சொந்தம்கொள்ள முடியாது. கல் மண் சுண்ணாம்பு மனித உழைப்பு என்பதெல்லாம் பூமியிலிருப்பவை; வெளியிலிருந்து எந்தவொன்றையும் கொண்டுவந்து ஓர் இருப்பிடத்தை என்னால் கட்டிக்கொள்ள முடியாது. அதுபோலவே, சமூகத்துக்கு வெளியே கலை இலக்கியம் தத்துவம் கடவுள் என எதுவுமில்லை. எளிமையாகச் சொன்னால் தமிழ், தமிழர் இவற்றிற்கு வெளியே நான் இல்லை. இந்த மண்ணில் வேர் தைத்து வெளியில் திசையெட்டும் வழியெல்லாம் கிளைப்பரப்பி எனது தனித்துவத்தைக் கட்டமைத்துக்கொள்கிறேன். என்னுடைய நிலா தமிழ் நிலா. வங்காள விரிகுடாவிலிருந்து மேற்குத்தொடர்ச்சி மலைவரை எனது புனைவு வெளியைத் தோராயமாக வரையறுத்து எழுதுகிறேன். ஆப்ரிக்கப் பழங்குடிகள், ஆஸ்திரேலிய அபாரிஜின்கள், பப்புவா நியூகினி இனக்குழுக்கள், மாயன் தொல்குடிகள் என எங்கெல்லாம் என் மொழியுயிரிகள் பரவியிருக்கின்றனவோ அங்கெல்லாம் நான் பயணப்படுகிறேன். உலகின் எல்லா இனக்குழுக்களும் வரலாற்றில் ஓரிடத்தில் தேங்காமல் இடம்பெயர்ந்துகொண்டே இருக்கின்றன. எனக்கு வரலாற்றுக் காலம், இடம் சார்ந்த ஏக்கமில்லை. நான் செத்துவிட்ட பிறகும் இடம்பெயர்ந்துகொண்டேயிருப்பேன். கண்ணகி, புனிதவதி, நீலி, நல்லத்தங்காள், இதன் வழி தொடரும் ஒரு புனைவுச் சரடையே தமிழ்த் தொன்மம் எனத் தடம் காண்கிறேன். கொற்றவை, கண்ணகி, காளி என இதன் நீட்சியே இத்துணைக்கண்டத்தில் ஒரு தாய்வழிச் சமயத்தைக் கட்டமைக்கிறது. அதன் வழி, என் உள்ளக் கட்டமைப்பு சாக்தேயத்தாலானது. என்னுடைய ஆதியினத் தேவதைகளின் தலைமறைவுக் காலம் என்ற நெடும் புனைவின் வழி விளங்கும். தாய்மைத் திரிந்த பேய்மையே எனது கவிதையியல்.

லக்ஷ்மி சரவணகுமார்: தத்துவச்செயல்பாடுகள் ஒரு சமூகத்தில் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பாசிசம் முன்னெப்போதையும்விட பெருமளவில் ஆக்ரமித்திருப்பதாகத் தோன்றுகிறது. முக்கியமாக இந்தப் போக்கு அதிகமும் அச்சுறுத்துவது கலைஞர்களைத்தான். சுதந்திரமாகச் சிந்திக்க முடியாத செயல்பட முடியாத இந்தக் காலகட்டத்தை ஒரு கலைஞனாய் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

ஆரியம் இத்துணைக்கண்டத்துக்குள் ஊடுருவிய காலம் முதலாய் சனாதனம் என்ற பூதம் இம்மண்ணின் மக்களைக் கொன்று குருதி குடித்துக் கொழுத்துப் பெருத்து நிலையாக நிற்கிறது. இந்து சனாதனமே இந்தியப் பாசிசம். சமூக ஓட்டத்தில் ஒரு தத்துவம் நின்று நிலைபெற்று காலப்போக்கில் பொதுப்புத்தியை வடிவமைத்து அதிகாரமாய் உருத்திரளும்போது அது மெல்ல மெல்ல பாசிசமாக எழுகிறது. மாறாக, சனாதனம் திட்டமிட்டு வடிவமைத்த மனுநீதிச் சமூகம் பாசிசத்தையே மாறாத தத்துவமாக முன்வைத்தது. சனாதன் என்றால் மாறாதது, நிலையானது என்று பொருள். மாற்றம் ஒன்றே மாறாதது எனச் சொல்லும் இயங்கியல் பொருள்முதல் கருதுகோளுக்கு நேரெதிரானதே எதுவும் மாறாது என்னும் சனாதனம். இந்தியக் குடிமை அமைப்புகள் சனாதனத்தை அடிப்படையாகக்கொண்டே கட்டப்பட்டுள்ளன. இதைத் தகர்ப்பதற்கே சனாதன வைதீக மரபிற்கு மாற்றாக அவைதீக மரபில் புத்தர், அம்பேத்கர், அயோத்திதாசர், ஈ. வே. ரா. பெரியார், தொல். திருமாவளவன் போன்ற சமய தத்துவ அரசியல் மேதைகள் வரலாறு நெடுகிலும் எதிர்ச்சொல்லாடல்களை உருவாக்குகிறார்கள். இருபது நூற்றாண்டு ஆரியத்திற்கு எதிரான ஒரு நூற்றாண்டு திராவிடத்தின் சொல்லாடல்கள் பெளத்தம், மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் இவற்றை உள்வாங்கி ஒன்று திரண்டு சனாதனப்பூதத்திற்கு எதிர் பூதமாய் நிற்கிறது. மொகலாய, ஐரோப்பிய காலனியாதிக்கத்திற்கு இத்துணைக்கண்டம் ஆட்பட்டிருந்தபோதும் சனாதனம் அதற்குத் தகத் தன்னை உருமாற்றி நிலைப்படுத்திக்கொள்ளும் அரசியற்றன்மை கொண்டிருந்தது. இன்று, இச்சூத்திரத் துணைக்கண்டத்தில் என்றும் காணாத ஆர்கச உச்சச் சிலிர்ப்பில் பார்ப்பனப் பாசிசம் உடம்பு சிலிர்த்துத் திளைக்கிறது. கொலை வாளினை எடடா – மிகு கொடியோர் செயல் அறவே என அன்று ஒலித்த அதே குரல் இன்னும் உரக்கக் கூட்டுக்குரலாக மீண்டும் ஒலிக்கிறது. ஆரியப் பாசிசத்தை எதிர்கொள்ளும்போது தவிர்க்கவே முடியாமல் திராவிடமும் பாசிசமாய் உருப்பெருகும். அறத்தின் மயானவெளியில் பிணத்தைத் தின்று உயிர்வாழும் கலைச் செயலை பின்நவீனத்துவத் தன்னிலை விலகி நின்று வேடிக்கை பார்க்கும்.

லக்ஷ்மி சரவணகுமார்: உங்கள் ஆரம்பகாலப் புனைவுகளான முன்பு ஒருகாலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன, கனவில் பெய்த மழைபற்றிய இசைக் குறிப்புகள் உள்ளிட்ட கதைகளிலும் சொல் என்றொரு சொல் நாவலிலும்  வெளிப்பட்ட மைக்ரோ பாலிடிக்ஸ் தற்போதைய நாவல்களான அவன் பெயர் சொல்,  ஐந்தவித்தான் போன்ற நாவல்களில் அதே போன்றில்லாமல் நேரடித்தன்மை வந்துவிட்டதாகத் தோன்றுகிறதே, இந்த மாற்றத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள் என்ற நூல் ஐந்து குறு நாவல்களையும், முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன என்ற நூல் பத்து சிறுகதைகளையும் கொண்டது.  சொல் என்றொரு சொல் என்ற நூல் மட்டுமே முழு நாவல். பொதுவாக எனது சிறுகதைகளெல்லாம் அவற்றின் உள்ளடக்கத்தில் நாவல் தன்மை கொண்டவை. வாழ்க்கைமுறை, அன்றிலிருந்து இன்றுவரை என்னைத் திறம்படச் செயல்பட அனுமதிக்கவில்லை, எனவே என்னால் எந்தவொன்றையும் விரித்து எழுத இயன்றதில்லை. சொல் என்றொரு சொல் என்ற நாவலே பல நாவல்களுக்கு எழுதப்பட்ட குறிப்புகளாகவே தொகுக்கப்பட்டுள்ளதைப்போல் இருக்கும். அதீதனின் இதிகாசம் தொடங்கி இறுதியாக வெளிவந்துள்ள ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து என்ற மீபுனைவுவரை தமிழிலக்கியப் பொதுப்புத்தியிலிருந்து விலகி, தம்மை வெளிப்படுத்திக்கொண்டவையே. என்னை நான் நகலெடுப்பதை அனுமதியேன். என்னைப் பிரிதொருவர் பின் தொடர்ந்தால் அப்பாதையிலிருந்து விலகி புதுப் பாதையொன்றை உருவாக்கிக்கொள்வதும் எனது கவிதையியல் இயல்பு. எனது பனுவல்கள் பேரரசியலை நுண் விவரணையாலும் நுண்ணரசியலைப் பெரு விவரணையாலும் எழுதிப்பார்த்தவை. குறுங்கதைகளின் குவியலால் மகாகாவியம் கட்டமைவதைப்போல் அதன் எதிர்ப் போக்கில் கதைகளின் குறுஞ்சொல்லாடல்களால் வரலாற்றின் பெருங்கதையாடல்களைக் கட்டுடைக்கிறேன். தனிமனித உளவியல் கட்டமைக்கும் வரலாறையும் வரலாறு கட்டமைக்கும் தனிமனித உளவியல் நாடகங்களையும் வெவ்வேறு பின்புலத்தில் வெவ்வேறு மொழிநடையில் எழுதிப் பார்க்கிறேன். கவிதையும் கட்டுரையும் கட்டுக்கதையும் கலந்த ஒன்றை எழுதித் தொகுத்ததுதான் ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து என்ற மீபுனைவு. பல நாவல்களையும் பல திரைப்பிரதிகளையும் அதில் கண்டெடுக்கலாம். உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் சாக்கில் என்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் அபத்தத்தைச் செய்துகொண்டிருக்கிறேன்.

நன்றி – யாவரும் டொட் கொம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More