December 2, 2023 10:10 pm

இருபதுக்கு – 20 இல் நேபாளம் சாதனை மழை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஹங்ஸோ 2022 ஆசிய விளையாட்டு விழாவில் ஆரம்பமான ஆடவருக்கான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் நேபாளம் சாதனை மழை பொழிந்து வரலாறு படைத்துள்ளது.

அதிவேக 50 ஓட்டங்கள், அதிவேக 100 ஓட்டங்கள், மிகப் பெரிய மொத்த எண்ணிக்கை, மிகப் பெரிய வெற்றி, அதிக சிக்ஸ்கள் ஆகிய சாதனைகளை மொங்கோலியாவுக்கு எதிரான ஆசிய விளையாட்டு விழா ஏ குழு போட்டியில் நேபாளம் நிலைநாட்டியது.

அதிவேக 50 ஓட்டங்கள் (9 பந்துகள்)

மொங்கோலியாவுக்கு எதிரான அப் போட்டியில் திபேந்த்ரா சிங் அய்ரீ 9 பந்துகளில் 8 சிக்ஸ்களுடன் அரைச் சதம் குவித்து அதிவேக அரைச் சதம் குவித்த வீரர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரரானார். இது சகலவிதமான இருபது 20 கிரிக்கெட் போட்டிகளுக்குமான அதிவேக அரைச் சதமாகும்.

இதற்கு முன்னர் இந்தியாவின் யுவ்ராஜ் சிங் (எதிர் இங்கிலாந்து – டர்பன் 2007), மெல்பேர்ன் ரெனகேட்ஸ் சார்பாக கிறிஸ் கேல் (எதிர் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் – மெல்பர்ன் 2016), காபுல் ஸ்வானன் சார்பாக ஹசரத்துல்லா ஸஸாய் (எதிர் புல்க் லெஜென்ட்ஸ் – ஷார்ஜா 2018) ஆகியோர் 12 பந்துகளில் அரைச் சதம் குவித்து இணை அதிவேக அரைச் சதத்திற்கான இணை சாதனையைக் கொண்டிருந்தனர். அவர்களில் யுவ்ராஜ் சிங் மாத்திரமே சர்வதேச இருபது 20 போட்டியில் முன்னைய சாதனையை நிலைநாட்டியிருந்தார்.

அதிவேக சதம் (34 பந்துகள்)

இதே போட்டியில் நேபாள வீரர் குஷால் மல்லா 34 பந்துகளில் சதம் குவித்து சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் குவித்த சாதனை வீரரானார்.

தென் ஆபிரிக்காவின் டேவிட் மில்லர் (எதிர் பங்களாதேஷ் – பொச்சேஸ்ட்ரூம் – 2007), இந்தியாவின் ரோஹித் ஷர்மா (எதிர் இலங்கை – இந்தூர் 2017), இலங்கை வம்சாவழியும் செக் குடியரசைச் சேர்ந்தவருமான சுதேஷ் விக்ரமசேகர (எதிர் துருக்கி – இல்ஃபோவ் கவுன்டி 2019) ஆகியோர் 35 பந்துகளில் சதம் குவித்து முன்னைய சாதனைக்கு சொந்தக்காரர்களாக இருந்தனர்.

மிகப் பெரிய மொத்த எண்ணிக்கை (314 – 3 விக்.)

மொங்கோலியாவுக்கு எதிரான ஆசிய விளையாட்டு விழா சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் நேபாளம் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 314 ஓட்டங்களைப் பெற்று  மிகப் பெரிய மொத்த எண்ணிக்கைக்கான உலக சாதனையை நிலைநாட்டியது. சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அணி ஒன்று 300 ஓட்டங்களைக் கடந்தது இதுவே முதல் தடவையாகும்.

அயர்லாந்துக்கு எதிராக தெஹ்ராதுன் அரங்கில் 2019இல் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்களை இழந்து பெற்ற 278 ஓட்டங்களே முன்னைய மிகப் பெரிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

மிகப் பெரிய வெற்றி (273 ஓட்டங்கள்)

மொங்கோலியாவுக்கு எதிரான அப் போட்டியில் நேபாளம் 273 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அணி ஒன்று ஓட்டங்கள் ரீதியில் ஈட்டிய மிகப் பெரிய சாதனை வெற்றி இதுவாகும்.

2019இல் துருக்கிக்கு எதிராக 257 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் ஈட்டிய வெற்றியே முன்னைய மிகப் பெரிய வெற்றியாக இருந்தது.

அதிக சிக்ஸ்கள் (26)

அப் போட்டியில் நேபாளம் 26 சிக்ஸ்களை விளாசி சகலவிதமான இருபது 20 கிரிக்கெட் போட்டிக்கான மற்றொரு சாதனையை நிலைநாட்டியிருந்தது. அயர்லாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் விளாசிய 22 சிக்ஸ்களே இதற்கு முன்னர் சர்வதேச இருபது 20 போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய சிக்ஸ்களாகும்.

போட்டி சுருக்கம்

இந்தப் போட்டியில் நேபாளம் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 314 ஓட்டங்களைக் குவித்தது.

குஷால் மல்லா 50 பந்துகளில் 12 சிக்ஸ்கள், 8 பவுண்டறிகள் அடங்களாக ஆட்டம் இழக்காமல் 137 ஓட்டங்களையும், அணித் தலைவர் ரோஹித் பௌடெல் 27 பந்துகளில் 6 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களையும் திபேந்த்ரா சிங் அய்ரி 10 பந்துகளில் 8 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 52 ஓட்டஙகளையும் குவித்தனர்.

மல்லா, பௌடெல் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 193 ஓட்டங்களைப் பகிர்ந்து அவ் விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனையை ஏற்படுத்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மொங்கோலியா 13.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 41 ஓட்டங்களைப் பெற்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்