Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை தனிநாடு கோருகிறாரா விக்கினேஸ்வரன்? | தீபச்செல்வன்

தனிநாடு கோருகிறாரா விக்கினேஸ்வரன்? | தீபச்செல்வன்

3 minutes read

இலங்கையின் புதிய பாராளுமன்றத்தில் வடக்கின் முன்னாள் முதல்வரும் நீதியரசருமான விக்கினேஸ்வரனுக்கு எதிராக கடும் அலை வீசுகின்றது. ஆனால் இந்த எதிர்ப்பு என்பது விக்கினேஸ்வரனுக்கு எதிரான எதிர்ப்பல்ல. ஈழத் தமிழ் மக்களுக்கும் அவர்களின் கோரிக்கைகளுக்கும் அபிலாசைகளுக்கும் எதிரான எதிர்ப்பு. காலம் காலமாக இலங்கை பாராளுமன்றத்திலும் சிங்களப் பேரினவாதிகளின் மனங்களிலும் மண்டிய இனவாத்தின் எதிர்ப்பே. இலங்கைப் பாராளுமன்றம் என்பது தமிழர்களுக்குமான இடமாக இருந்தால் இந்த எதிர்ப்பலை எழுந்திருக்காது. அது சிங்களப் பாராளுமன்றமாக இருப்பதனால்தான் இத்தனை எதிர்ப்பும் வன்மமும்.  

அப்படி என்ன தான் பேசிவிட்டார் விக்கினேஸ்வரன்? அல்லது அப்படி என்னதான் செய்துவிட்டார் அவர்? தனி ஈழத்தை கோரிவிட்டாரா? அல்லது தனி ஈழத்தை பிரகடனம் செய்து விட்டாரா? இலங்கை பாராளுமன்றம் எப்போது தமிழர்களின் குரலுக்கு செவி சாய்த்திருக்கிறது என்பதைதான் நாம் முதலில் கேட்க வேண்டியிருக்கிறது?  விக்கினேஸ்வரன் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு முன்னரே, ஈழத்தின் தொன்மை குறித்து ஆதாரபூர்வமான விசயங்களைப் பேசி வந்திருக்கிறார். ஈழத்தின் தொன்மை பற்றிய அவர் மாத்திரமல்ல, பலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர்.

ஈழத்தின் தொன்மை குறித்தும் தமிழின் பழமை குறித்தும் இலங்கைக்கு வெளியில் பெரிய உரையாடல்களும் ஆராச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சிங்கள மொழிக்கும் சிங்கள இனத்திற்கும் அது போன்ற அனுபவம் இல்லை. ஆனாலும்கூட சிங்கள இனத்தையோ, சிங்கள மொழியையோ நாம் எவரும் குறைவாக மதிப்பிடவும் இல்லை. ஆனால் தமிழரின் பெருமை பற்றியும் தமிழின் பெருமை பற்றியும் நாம் பேசுகின்ற போது நமது வாயை மூடிக் கட்டி விட நினைப்பது எப்படியானது? இதுவே இனவாத ஒடுக்குமுறையின் குரூரமல்லவா?

இலங்கையின் ஆதிக் குடிகள் தமிழர்கள் என்றும் உலகின் பழமையான மொழி தமிழ் என்றும் விக்கினேஸ்வரன் பாராளுமன்றத்தில் பேசியிருந்ததே சிங்கள இனவாதிகளுக்கு பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைக்கு தமிழகத்திலே கீழடியில் இருந்து வரும் சான்றுகள், தமிழின் தொண்மையை இந்த உலகத்திற்கு பறைசாற்றுகின்றது. உலகமே கீழடியைக் கண்டு வியக்கிறது. தமிழ் ஒரு செம்மொழி என்ற அந்தஸ்தையும் பெற்றிருக்கிறது. உலகின் பல நாடுகளில் தமிழ் மொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அதைப் போலவே, ஈழம் என்ற சொல்லுக்கும்கூட இலங்கைக்கு வெளியிலும் மிகப் பெரிய மரியாதையும் அது பற்றிய நெகிழ்ச்சியும் இருக்கிறது. இலங்கை, ஸ்ரீலங்கா, இந்தியா முதலிய நாடுகளின் சொற்கள் போல ஈழம் என்ற சொல் சில நூறு ஆண்டுகளின் முன்னரோ, சில பத்தாண்டுகளின் முன்னரோ தோன்றியதல்ல. அதற்கு இரண்டாயிரம் வருடப் பழமை இருக்கின்றது. ஈழத்தில் தமிழ் இனமும் சைவமும் தழைத் தோங்கியிருக்கிறது என்பதற்கும் மிகப் பெரிய சான்றாதாரங்கள் சிங்கள இனவாதிகளால் அழித்து துடைக்க முடியாதளவில் வியாபித்திருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், விக்கினேஸ்வரன் பேசிய பேச்சை பாராளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று மனுஷ நாணக்கார என்ற பாராளுமன்ற உறுப்பினர் கோரியிருந்தார். அத்துடன் இவ் உரையை ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் வேறுபாடின்றி எதிர்த்திருக்கிறது. விக்கினேஸ்வரன் இலங்கைக்குள் பேசுவதை தடுக்க முனைகின்ற இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைக்கு வெளியில் இந்த விடயங்கள் குறித்து பேசப்படுவதை எப்படி தடுக்கப் போகிறார்கள்? அல்லது ஈழத்தின் தொன்மையும் தமிழின் பழமையும் இப்படி பேசுவதால் இல்லாமல் போகுமா?  

கடந்த காலத்தில் இலங்கை அரசுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. சர்வதேச அரங்கில்கூட விட்டுக் கொடுப்புக்களை செய்தது. இப்படி செய்வதனை புரிந்து கொண்டு தமிழர்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்தது. ஆனால் ஒரு சிறு நகர்வுக்குகூட சிங்களப் பேரினவாதிகள் அனுமதிக்கவில்லை. விட்டுக் கொடுப்பைக்கூட தமிழீழம் அமைகின்றனர் என்றும் இலங்கையில் இன்னொரு நாட்டை உருவாக்குகின்றனர் என்றும் இன்றைய ஆட்சியாளர்களும் அன்றைய எதிர்கட்சியினரும் திரித்து போர்க்களம் செய்திருந்தனர்.

தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதி மொழியை வழங்கிய பிறகும், அவர்கள் தனிநாடு கோருகிறார்கள் எனச் சொல்லிக் கொண்டிருப்பது ஏன்? இப்படி பொய்யுரைத்தே தமிழர்களுக்கு எந்த ஒரு உரிமையையும் கொடுக்க அனுமதிக்க கூடாது, குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று கருதினால், அந்த சிங்கள பேரினவாத மனநிலை தமிழீழம் என்ற தீர்வுக்கு தமிழர்களை தள்ளுவதுடன் அதுவே தமிழீழத்தையும் தோற்றுவிக்கும். ஆக தமிழீழத்தை தோற்றுவிப்பதும் திணிப்பதும் அன்று முதல் இன்றுவரை சிங்களதேசமே தவிர, தமிழர் தேசமல்ல.

விக்கினேஸ்வரன் அவர்கள், ஈழத்தின் தொன்மை பற்றி நினைவுபடுத்தியதை கண்டு, அவர் பிரிவினை கோருவதாக மகிந்த ராஜாபக்ச போன்றவர்கள் திரிக்க முற்படுகிறார்கள். உண்மையிலே நாங்கள் எதைப் பேசினாலும் பிரிவினையா? எங்கள் உரிமையை தாருங்கள் என்றால் பிரிவினை. எங்கள் மொழியின் பழமை பற்றி பேசி பெருமையடைந்தால் பிரிவினை. எங்கள் இனத்தின் தொன்மை பற்றி பேசினால் பிரிவினை.. எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதியை தாருங்கள் என்றால் பிரிவினை. காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுவியுங்கள் என்றால் பிரிவினை. அரசியல் கைதிகளை விடுவியுங்கள் என்றால் பிரிவினை.

நாங்கள் வாய் திறந்தாலும் வாழ்ந்தாலும் பிரிவினை என்பதும் தமிழீழம் கோருகிறோம் என்பதும்தான் சிங்கள பேரினவாத அகரதியின் பொருளா? உண்மையில் தமிழீழம் என்பதை தமிழ் மக்களும் தமிழ் தலைவர்களும் அதிகம் உச்சரிப்பதில்லை. சிங்களத் தலைவர்களும் சிங்கள இனவாதிகளுமே அதிகமதிகம் உச்சரிக்கின்றனர். விக்கினேஸ்வரன் அவர்கள் அவ்வாறு பேசுவதனாலும் இவ் விடயம் பற்றி இதுபோல் ஒரு கட்டுரையாளர் எழுதுவதனாலும் தமிழீழம் தோன்றிவிடாது. ஆனால் எதை எடுத்தாலும் தமிழீழம், தமிழீழம் என்று பேசி அரசியல் செய்ய முனைகின்ற பேரினவாத முட்டாள்தனமே தமிழீழத்தை தோற்றுவிக்கும்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள் தேர்வு செய்திருப்பது, தமது அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் முன் வைப்பதற்கே. முதலில் சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களின் குரல்களுக்கு செவி சாய்க்க வேண்டும். தந்திரமாக தங்கள் கற்பனைகளை சொல்லி தமிழ் மக்களின் குரலை நிராகரிப்பதை முதலில் நிறுத்த வேண்டும். இந்த தீவில் தனித்துவமாக தமக்கான இறைமையுடன் வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களை அவர்களின் தாயகத்தில் அவர்களின் தலைமையில் வாழ விட வேண்டியதுதான் இத் தீவின் இனச் சிக்கலை தீர்க்கும் உபாயம். விக்கினேஸ்வரன் போன்றவர்களின் குரல் அதனையே வலியுறுத்துகிறது. இந்த விடயத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விக்கினேஸ்வரனின் குரலை வலுப்படுத்தல் அவசியமானது.

கவிஞர் தீபச்செல்வன்

நன்றி – தமிழ்க்குரல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More