2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
இவ்வாறு பல்வேறு இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் கட்டங்கட்டமாக குடியமர்ந்தும் மீண்டும் பாதுகாப்பான இடங்களை தேடி ஓடுவதுமாக இருந்தது. பல மாதங்களாக பல்வேறு இடங்களில் இருந்து வந்தவர்களும் கிளிநொச்சி நகரிலும் அதை சூழவுள்ள பிரதேசங்களிலும் செறிவாக மக்கள் குடியேறியிருந்தார்கள். ஆனால் கிளிநொச்சி நகரமும் அண்டிய பிரதேசமும் இடம்பெயர வேண்டும் என்று ஒரு சிக்கலான நிலை ஆரம்பித்து. வைத்தியசாலைகள் நகரமயமாகாப்பட்ட ஏனைய வசதிகள் என்பவற்றில் இருந்து விளக்கப்பட்டு புதியதோர் இடத்துக்கு செல்வது பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சவாலனதாகவும் வேதனையானதாகவும் பெரும் பீதியாகவும் இருந்தது. இதனால் மக்களுக்கு இனம்புரியாத அச்ச உணர்வு ஏற்பட்டது. பலரது எண்ணங்களில் பயமும் சோர்வும் குடிகொண்டிருந்தது.
கிளிநொச்சி நகரில் இருந்து மக்கள் இடம்பெயரும்போது இன்னுமோர் இடத்துக்கு குடியேறுவதுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து சென்றனர். அஸ்ரா கூரைத்தகடுகளில் அமைந்திருந்த வீடுகளில் அநேகமான வீடுகளிலிருந்து கூரைத்தகடுகள் கழட்டி புதிய இடத்துக்கு கொண்டு சென்றனர். இவ்வாறு எடுத்து சென்ற கூரைத்தகடுகளை ஒன்றோடு ஒன்று சாய்வாக வைப்பதன் மூலம் உடனடியான தங்குமிட வசதியினை ஏற்படுத்தி கொண்டார்கள். அத்தோடு சிலர் மரத்தடிகளின் உதவியுடனும் தற்காலிக வீடுகளை அமைத்து கொண்டனர். மேலும் சிலர் அவற்றை மரங்களில் சாய்வாக வைத்து அதன்கீழ் படுத்துறங்கும் வாழ்விடங்களை ஆக்கி கொண்டனர்.
சொந்த வீடுகளை விட்டு வெளியேறும்போது அநேகமானவர்கள் வீட்டின் பெறுமதியான கதவுகள் ஜன்னல்களை திருடர்கள் தொல்லையில் இருந்து பாதுகாத்து கொள்ள அவற்றை கழட்டி கொண்டு சென்றார்கள். இவ்வாறு பதட்டத்துடன் வெளியேறும் பலரது வீடுகளில் கட்டடப்பொருட்களும் ஏனைய பொருட்களும் திருடப்பட்டு கொண்டு இருந்தன.
ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கு தேவையான பொருட்களையும் முழுமையாக எடுத்து செல்ல முயற்சித்தார்கள். வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களை. வாகனங்களில் ஏற்றி அதன்மேல் அமர்ந்து பிரயாணித்தனர். மீண்டுமோர் தொழில் முயற்சிக்காக தங்களுக்கு தேவைப்பட்ட தொழிலுக்கான உபகரணங்களையும் எடுத்து சென்றனர், முழங்காவில் மேற்கு கரையில் இருந்து பல நூற்றுக்கணக்கான மீன்பிடிப்படகுகள் A-9 பாதையை கடந்து கிளிநொச்சி கிழக்கு பகுதியை சென்றடைந்தன. இவற்றுள் பல கிழக்கு கடற்கரையை சென்றடையுமுன்னர் தற்காலிக குடில்களாகவும் பாதுகாப்பு அரங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. பின்னாளில் முள்ளிவாய்க்கால் மாத்தளன் பிரதேசத்தில் இலகுவாக தோண்டப்பட்ட குழிகளில் பல சுற்றுக்கு கீழ் அமைந்த பாதுகாப்புடன் கூடிய வாழ்விடமாகவும் காணப்பட்டது.
கிளிநொச்சி நகரப்பகுதியில் இருந்து வெளியேறும் போது கால்நடைகளை வளர்த்தவர்கள் அனைத்தையும் இடம்பெயரும் பகுதிகளுக்கு கொண்டு சென்றனர். சிலர் தங்களது கால்நடைகளை கொண்டு செல்ல முடியாததனால் தாங்கள் இருந்த இடங்களில் கால்நடைகளை அவிட்டு விட்டார்கள். அந்த கால் நடைகள் சிறுபோக செய்து கைவிடப்பட்ட வயல்கள் எங்கும் மேய்ந்து திரிந்தன. இவ்வாறு பெரும்பாலன கால்நடைகள் இடம்பெயர்ந்த பகுதிகளுக்கு கொண்டு சென்றமையினால் அவை பின்னாளில் அவர்களது உணவுத்தேவையை பூர்த்தி செய்வதில் மிகப்பெரிய பங்கை வகித்தது.
இடம்பெயர்ந்து பல துன்பங்களின் மத்தியில் அவர்களது பொருட்களை புதிய இடங்களுக்கு நகர்த்தினார்கள். புதிய இடங்களுக்கு செல்லும்போது. ஏற்கனவே இடம்பெயர்ந்த இடங்களில் சில பொருட்களை விட்டு சென்றனர், கடின உழைப்பில் பெற்ற உடைமைகளையும் உணவு உடை என்பனவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்பான உறையுளுக்கு தேவையானவற்றை கொண்டு ஏனையவற்றை கைவிட்டு சென்றனர்.
மக்கள் தங்களுடைய பொருட்களுடன் நகர்ந்து சென்று கொண்டு இருக்கையில் வைத்தியசாலையை பொறுத்தவரை மருந்துகள், உபகரணங்கள், தளபாடங்கள் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு நகர்த்தி வைத்து இருக்க வேண்டிய தேவை காணப்பட்டது. கிளிநொச்சி நகரில் அரச கட்டடங்களின் கூரைகள் மற்றும் கதவுகள் ஜன்னல்கள் என்பன கழட்டி எடுத்து செல்லப்பட்டன. மாறாக கிளிநொச்சி பொது வைத்தியசாலை அமைந்த பகுதி ,சுகாதார வைத்திய பணிமனை அமைந்த பகுதி ஆகியவற்றின் அனைத்து கட்டடங்களையும் மார்கழி 30ந் திகதி வரை இடர்கள் மத்தியல் பாதுகாத்தோம். மருந்து பொருட்கள் உபகரணங்கள் தளபாடங்கள் இடம்பெயர்ந்த இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தாலும் கட்டடங்கள் பாதுகாக்கப்பட்டன. (இதன் காரணமாக மீள குடியமர்ந்தபோது பொது வைத்தியசாலை சேவைகள் விரைவாக ஆரம்பிக்க கூடியதாக் இருந்தது).
தொடரும்……….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/