செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 22 | மு. நியாஸ் அகமது

மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 22 | மு. நியாஸ் அகமது

5 minutes read

வழக்கமான திங்கட்கிழமை காலைப் பொழுது அது.  கல்விச் சுற்றுலா வந்த மாணவர்கள், மிகவும்  உற்சாகமாக தமிழக தலைமைச் செயலகம் இயங்கும்  புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தனர். கோட்டைக்கு வந்த ஜெயலலிதா, பள்ளி மாணவர்கள் வந்திருப்பதை அறிந்து, அவர்கள் அனைவரையும் அழைத்து மகிழ்வாக உரையாடி, இனிப்பு வழங்கினார்.  முதல்வரைச் சந்திக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சிக்காரர்கள் என பலர் காத்துக் கொண்டிருக்கும் போது, அவர் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். குழந்தைகளுடன் மகிழ்வாக சிறிது நேரத்தைச்  செலவிட்டார்.  இது முதல் நிகழ்வு அல்ல… அவர் எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறார். குழந்தைகளுடன் பேச, அவர்களுடன் நேரம் செலவிட அதிகம் விரும்புவராக ஜெயலலிதா இருந்திருக்கிறார்.

 

1980-களில் அவர் மதுரையில்  நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சென்றார். கூட்டம் முடிந்ததும், மறுநாள்  மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இயங்கி வரும் சில குழந்தை நல மையத்தை பார்வையிட்டு, அவர்களுடன் நேரம் செலவிட்டிருக்கிறார். இது குறித்த நிகழ்வுகளை அவர் பின்னர் எழுதும் போது, “குழந்தைகளுக்கு வழங்குவதற்காக நிறைய இனிப்புகளை என்னுடன் எடுத்துச் சென்றிருந்தேன்.  ஒவ்வொரு மையத்திலும் இருந்த குழந்தைகளுக்கு சாக்லெட்டுகளை பரிமாறினேன்… சாக்லெட்டைக் கண்டதும் முகம் மலராத குழந்தை இவ்வுலகில் உண்டா…?”

உண்மைதான். சாக்லெட்டுகளைக் கண்டு குழந்தைகள் முகம் மலர்வார்கள்தான். அது  போலத்தான் அவரும்… குழந்தைகளைக் கண்டால், இவரும் முகம் மலர்வார்.  எப்போது யார் நம்மை கவிழ்ப்பார்கள்? யார் நமக்கு எதிராக சதி திட்டம் தீட்டுவார்கள் என்று மனதளவில் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் ஒருவர்…குழந்தைகளிடம் மட்டும்தானே எதையும் யோசிக்காமல்  மனதிலிருந்து பேச முடியும்…?

‘அதிகாரங்களை கைப்பற்றுதல்’

1989, தேர்தலில் ஜெயலலிதா அடைந்த வெற்றி அவரை மிகுந்த உற்சாகம் கொள்ள வைக்கிறது. ஆட்சியைப் பிடிக்கவில்லைதான்.. ஆனால், கட்சியில் தாம்தான் எம்.ஜி.ஆருக்கு அடுத்து என்று தொண்டர்களிடத்தில் உறுதிப்படுத்தியாகி விட்டது. இனி கட்சியை முழுவதும் தனதாக்க வேண்டும் ‘இரட்டை இலை’ சின்னத்தைத் திரும்பப் பெறவேண்டும். இதுவும் நிகழ்ந்து விட்டால், தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து விடலாம் என்பதை உணர்கிறார். அவர் விரும்பியதும் அவரை விரும்பியதுபோல. ஆம், அவர் விரும்பியதுபோலவே, எல்லாம் நிகழ்ந்தது.  தேர்தலில் அடைந்த படுதோல்வி ஜானகியிடம் மனமாற்றத்தைக் கொண்டு வருகிறது. அவர் அரசியலில் இருந்து விடை பெறுவதாக அறிவித்துவிட்டு, அவர் அணியையும், ஜெ. அணியுடன் இணைக்கிறார். ஜெயலலிதா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகிறார்.  இழந்த இரட்டை இலை சின்னத்தையும் மீண்டும் பெறுகிறார்.

அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்த நிருபர்கள்,  “மோரில் விஷம் கலந்து  எம்.ஜி.ஆரை ஜானகிதான் கொன்றுவிட்டார் என்றீர்கள். இப்போது அவருடன் இணைந்து விட்டீர்களே..” என்கிறார்கள். ஜெயலலிதா கிஞ்சிற்றும் அலட்டிக் கொள்ளவில்லை. “எனக்கு அப்போது வந்த தகவலை வைத்து நான் அப்படிச் சொன்னேன்” என்று அந்த கேள்வியை சுலபமாக கடந்து செல்கிறார்.

அ.தி.மு.க-வின் அனைத்து அதிகாரங்களையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்தார். எம்.ஜி.ஆர் ஏற்படுத்தி வைத்திருந்த வாக்கு வங்கியை பாதுகாக்க 37 பேர் கொண்ட அரசியல் விவகாரக் குழுவை ஏற்படுத்தினார். அந்தக் குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை தன் கைக்குள் வைத்துக் கொண்டார். ஒரு ஆக்டோபஸாக அனைத்து அதிகாரங்களையும் ஜெயலலிதா கட்டுப்படுத்துவது சில முன்னணி நிர்வாகிகளை கோபம் கொள்ளச் செய்தது.  கட்சிக்குள் முணுமுணுப்பு கேட்கத் துவங்கியது. ஆனால், ஜெயலலிதா அது எதையும் கண்டு கொள்ளவில்லை.

‘சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது’

இப்போது தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா, சட்டமன்றத்துக்குள் முதன்முதலாக எம்.எல்.ஏ -வாக நுழைகிறார், அதுவும் எதிர்க்கட்சித் தலைவர்.  பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின் சட்டமன்றத்துக்குள் முதல்வராக நுழைந்த கருணாநிதிக்கு, துவக்கத்திலேயே புரிந்து விட்டது. ஜெயலலிதாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று. ஜெயலிதாவை முடக்க நினைத்தாரோ என்னவோ… ஜெயலலிதா மீதும் அந்த சமயத்தில் அவருக்கு உற்ற நண்பராக இருந்த நடராஜன் (சசிகலா கணவர்) மீதும் வழக்கு தொடுக்கிறார்.  தேர்தலில் சீட்டு வழங்குவதாக கட்சிகாரர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், ஏமாற்றப்பட்டவர்கள் பணத்துக்காக முறையிட்ட போது, கொலை மிரட்டல் விட்டதாகவும் வழக்கு. போலீஸ் வழக்கை விசாரிக்கத் துவங்குகிறது.

ஜெயலலிதா கிளர்ந்தெழுந்தார். இது புனையப்பட்ட வழக்கு என்றார். ஒரு கட்டத்தில் இது அடக்குமுறை, நான் என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று, சபாநாயகருக்கு கடிதம் எழுதுகிறார்.  ஆனால் பின் என்ன நினைத்தாரோ, அந்த கடிதத்தை அவர்  சபாநாயகருக்கு அனுப்பவில்லை. நடராஜன் வசம் அந்த கடிதம் இருந்தது, ஆனால் போலீஸ்,  மேற்கூறிய வழக்குக்காக நடராஜன் வீட்டில் நடத்திய ரெய்டின்போது இந்த கடிதம் சிக்க, கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அதனை கைப்பற்றி பத்திரிகைகளுக்கு வெளியிட்டுவிட்டது.

ஊடகங்களில் இந்த விஷயம் வெளியானவுடன், ஜெயலலிதா ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். இப்போது கருணாநிதி மட்டும் கோபமில்லை, நடராஜன் மீதும்தான். ஏன் நடராஜன் அந்த ராஜினாமா கடிதத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்…? தனக்கு எதிராக அவர் ஏதேனும் சதித்திட்டம் தீட்டுகிறாரா என ஜெயலலிதாவின் சந்தேகம் வலுக்கிறது.

இந்த புள்ளியில்தான் நடராஜனும் ஜெயலலிதாவும் பிரிகிறார்கள். நடராஜனை வேதா இல்லத்தைவிட்டு வெளியே அனுப்பினாலும், சசிகலாவை தன்னுடனேயே வைத்துக்கொண்டார்.

ஜெயலலிதா, தனது கடிதத்தை திமுக அரசு  திருடி வெளியிட்டுவிட்டதாக குற்றம் சுமத்துகிறார். இதனையடுத்து திமுக அரசு மீது விமர்சனங்கள் எழுகின்றன.   உடனடியாக சபாநாயகர் இந்த விஷயத்தில் தலையிட்டு, ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக தொடர்வார் என்று அறிவிக்கிறார்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இப்படியாக துவங்கிய உராய்வுகள், அடுத்த சில தினங்களிலேயே  மோசமான கட்டத்தைக் எட்டியது.

 

தொடரும்…

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-13-02-23-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-14-03-03-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-15-03-18-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-16-04-02-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-17-04-25-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-18-05-28-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-19-07-19-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-20-08-10-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-21-08-17-17/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.