Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை மதிசுதாவின் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” – ஒரு பார்வை: சொர்ணவேல்

மதிசுதாவின் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” – ஒரு பார்வை: சொர்ணவேல்

4 minutes read

அமெரிக்காவின் மெக்சிக்கன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருப்பதுடன் அண்மையில் இயக்குனர் மிஸ்கினை வைத்து ”கட்டுமரம்” திரைப்படத்தை மட்டுமல்லாது வேறு திரைப்படங்களை இயக்கியதுடன் திரைத்துறை சார்ந்த பல நூல்களை எழுதியுமுள்ள இயக்குனர் திரு சொர்ணவேல் அவர்கள் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” குறும்படம் பற்றி ஒரு கட்டுரையை மின்னம்பலம் இதழுக்கு எழுதியிருக்கிறார். அக்கட்டுரையை வணக்கம் லண்டன் மீள் பிரசுரம் செய்கிறது.

மின்னம்பலம்:விம்பம் குறும்பட ...

கடந்த ஏழு வருடங்களாக தமிழீழக் குறும்படங்களை முக்கியமான திரைப்பட வெளிகளில் நண்பர்கள் கிருஷ்ணராஜா மற்றும் ரதன் வாயிலாகக் கண்டுவருகிறேன். எனக்குக் காணக் கிடைத்த படங்களில் சில படங்களை இங்கு ஆராய்கிறேன். முதலில் மதி சுதாவின் முக்கியமான குறும்படத்துடன் தொடங்குவது சரியாக இருக்குமென எண்ணுகிறேன்.

மதி சுதாவின் ‘வெடிமணியமும் இடியன் துவக்கும்’ ஆழமான அனுபவத்தை அளித்து நினைவில் நிற்கும் படமாக உருக்கொண்டுள்ளது. பொதுவாகக் குறும்படங்களுக்கு ஏற்றவாறு உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுக்காமல் ஒரு முழுநீளப் படத்துக்கான உள்ளடக்கத்தைக் குறும்பட உருவில் அடைக்க நினைப்பதிலுள்ள சிக்கல்களைப் பற்றி முன்னர் விரிவாக எழுதியிருக்கிறேன். என்னுடைய அனுபவத்தில் அத்தகைய முயற்சிகள் சீராக ஆரம்பித்து அவசர கதியில் முடியும். அல்லது நேர்க்கோட்டில் சென்ற கதையாடல் தனது லயமிழந்து துரித கதியில் வெட்டுண்டு சடாரென்று முடியும். துண்டு துண்டான அதன் அமைப்பு கோர்வையழகியலைக் கேள்விக்குள்ளாக்கும் நோக்கமோ அரசியலோ அன்றி அமைந்திருக்கும்.

மதிசுதா என்னுடைய அத்தகைய (முன்)முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறார். மூன்று தலைமுறைகளை முன்வைத்து நகரும் கதையாடலைத் தேர்ந்த கதைசொல்லியாகச் செதுக்கி, அற்புதமான குறும்படத்தின் மூலம் போரின் பின்னணியில் தமிழருக்கு இருந்த உறுதியையும் போராட்டத்திலிருந்த பெருமையையும் விரித்தெடுக்கிறார்.

மதி சுதாவின் இயக்கத்தில் முல்லை ஜேசுதாசன், கமலாராணி, சங்கர், ஜசிதரன், கேசவராஜன், தர்சன் போன்றோரின் நடிப்பு இலங்கையில் அன்றிலிருந்து இன்றுவரை இருக்கும் கலைஞர்களின் இயல்பான ஆற்றலுக்குச் சான்றாக இருப்பதுடன் குறும்படம் எனும் சட்டகம் அத்தகைய அரிய கலைஞர்களின் திறமையை ஆவணப்படுத்தும் வெளியாக இருப்பதின் மகத்துவத்தையும் சொல்கிறது. ஜேசுதாசன், கமலாராணி ஆகியோரின் நடிப்பு படத்திற்கு மகுடம். ஜேசுதாசன் தனது பேரனுடன் பழகும் பாங்கு தீவுகளில் வாழும் மக்களுக்கு இயற்கையுடன் இருக்கும் இயல்பான உறவைத் திரையில் கவிதையாக வடிக்க உதவுகிறது.

வெடிமணியமாகத் தமிழ்ச் சமூகத்தின் அன்பையும் ஆணாதிக்கத்தையும் ஒருசேர உருவகித்திருப்பதில் மதி சுதாவின் எழுத்தும் இயக்கமும் மிளிர்கின்றன. எசுத்தரம்மாவாக கமலாராணி வெடிமணியத்தின் சாதித்திமிருக்கு நறுக்கென்று தனது சொல்லால் வெடிவைப்பதும், கணவனாகக் கைப்பிடித்தவனின் வயோதிகத்தில் அவனுக்கு உறுதுணையாக இருப்பதும் தேர்ந்த இயக்குநராக மதி சுதா நடிகர்களைக் கையாள்வதிலுள்ள முக்கியத்துவத்தை அறிவுறுத்தும் காட்சிகளாகப் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

தனது கடைசி காலகட்டத்தில் உடம்புக்கு முடியாமல் படுக்கையில் கிடக்கும் ஒரு தாத்தாவை மையப்படுத்தித் தொடங்கும் கதையாடல் அவரருகிலிருந்து முன்னர் அவரிடமிருந்து விலகிச் சென்ற மகன் வந்து பராமரிப்பது மற்றும் அவரது மனைவியும் மருமகளும் காலமாகிவிட்டதை அவரது கட்டிலின் மேல் சுவரில் பெரிய சட்டத்தில் மாட்டப்பட்டிருக்கும் நிழற்படங்கள் மூலம் சொல்லும் மதி சுதா அந்த மருமகள் போரின் குண்டுவீச்சினால் இறந்துவிட்டதையும் நமக்குச் சொல்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே வெடிமணியத்தின் குழந்தையைப் பாதுகாக்க எசுத்தரம்மா இரண்டாம் தாரமாக அவ்வீட்டில் வந்து குடிபுகுந்தது நமக்கு விவரிக்கப்படுகிறது.

அக்காட்சியின் தனித்துவம் என்னவென்றால் அது வெடிமணியத்தின் உயர் சாதிவெறியை அடிக்கோடிடுகிறது. அத்தகைய வன்முறை நிறைந்த இருண்மையான காலகட்டங்களில்கூடத் தமிழனது ரத்தத்தில் ஓடும் சாதியெனும் விஷம் / புற்றுநோயை மதி சுதா இயல்பாக ஆயினும் ஆழமாகச் சுட்டிச் செல்கிறார். கதாநாயகன் தமிழ்ச் சூழலிலுள்ள சாதிய, ஆணாதிக்கத் திமிருக்கு அடிமையாகத்தான் இருக்கிறான். அதற்கு எதிர்வினையாக எசுத்தரம்மா தனக்குக் குழந்தையைப் பராமரிக்க ஆள் வேண்டிய தருணத்தில் சாதி பற்றிய திமிர் வெடிமணியத்திற்கு எங்கு போச்சென்று வினவி வெடிமணியத்தின் கையாலாகாத்தனத்தையும் சூழ்நிலைக்கேற்ற சூழ்ச்சியையும் தாக்கி தான் கொண்டுவந்த சூடான தேநீரைத் தூக்கி எறிந்துவிட்டுச் செல்கிறார். மதி சுதா காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அவரது தேர்ந்த இயக்கத்தைப் படத்தின் தொடக்கக் காட்சிகளிலேயே நமக்குச் சொல்லிவிடுகிறது.

வயோதிக காலத்தில் வெடிமணியம், எசுத்தரம்மாவின் உறவின் இயல்பான நெருக்கம், வெடிமணியம் இவ்வுலகை விட்டுப் பிரியக் காத்திருக்கும் காலகட்டத்துடன் அருமையாக இணைக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய இணைவிற்கும் பிரிவிற்கும் ஊடாக வெடிமணியத்திற்குத் தனது பேரனின் மீதான அன்பும் வேட்டையாடுவதிலிருக்கும் ஈடுபாடும் கவிதைபோல ஓடுகின்றன. துப்பாக்கியைப் பராமரிப்பதிலிருந்து வேட்டையாடக் “குறி” பார்ப்பது, இலக்கைத் தப்பவிட்டால் மீண்டும் தன் கண்களை மூடி விரித்து ஆயத்தப்படுத்திக்கொள்வது போன்ற தாத்தாவிற்கும் பேரனுக்குமான வெளிப்புறங்களிலேயே சட்டகப்படுத்தப்பட்டிற்கும் இயல்பான இணக்கமான உறவு தமிழ் சினிமாவிற்குப் புதிது.

அத்தகைய வேட்டையாடுவதில் வெடிமணியத்திற்கு இருந்த தேர்ச்சியைப் பெறுவது அவரது பேரனின் காலகட்டத்தில் (2007இல்) தன்னை அரசு எனும் இன அழிப்பு இயந்திரத்துடைய வன்முறையிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் துணிந்து எதிர்க்கவும் மட்டுமல்லாது, தனது தாத்தாவின் அல்லாடிக்கொண்டிருந்த உயிர் இவ்வுலகை விட்டு இனிதே பிரியவும் வகை செய்கிறது.

நல்லதொரு சிறுகதையைப் போல மதி சுதாவின் படத்தின் முடிவும் கச்சிதமாக அமைந்துள்ளது. சிறுகதையின் இறுதித் தருணம் முக்கியமானது. முடிவு என்பது எதிர்பார்க்காத திருப்பமாக இருக்கலாம் அல்லது கவித்துவ அல்லது தத்துவ உச்சமாக இருக்கலாம். அல்லது மதி சுதாவின் இப்படத்தைப் போல அலகுகளின் நுண்ணிய ஒத்திசைவாக இருக்கலாம். போரின் ஈரமற்ற பேரிரைச்சலின் பின்னணியில் அன்பின் ஏக்கத்திற்கான ஆன்மாவின் பெருமூச்சாகவும் இருக்கலாம்!

நடிப்பு மட்டுமல்லாமல் திரைக்கதையமைப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, தொகுப்பு, இசையமைப்பு எல்லாம் காத்திரமாக இணைந்து மதி சுதாவின் ‘வெடிமணியமும் இடியன் துவக்கும்’ என்ற இக்காண்பியல் மொழிக் கவிதையைத் தமிழ்க் குறும்பட வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக்குகின்றன. திரைக்கதையில் கவனம் செலுத்தினால் விரிந்த ஒரு காலகட்டத்தில் மூன்று தலைமுறையினரை வைத்துப் பின்னப்பட்ட கதையை லாவகமாகத் தேவையான காட்சிகளின் கோர்வையாகச் சிக்கன சுருக்க அழகியலின் ஆற்றலைக் கொண்டு ஒரு அருமையான குறும்படமாக உருவாக்க முடியும் என்று நமக்கு நம்பிக்கையை அளித்திருக்கும் மதி சுதா குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

#மதிசுதா #குறும்படம் #சினிமா #mathisutha #shortfilm #cinema

படத்தின் தொடுப்பு இதோ – https://youtu.be/JOMh6lX45J4

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More