Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை யாழ். பல்கலைக்கழகத்தில் மலையக மாணவி துலாபரணியின் சாதனை | டில்கா

யாழ். பல்கலைக்கழகத்தில் மலையக மாணவி துலாபரணியின் சாதனை | டில்கா

4 minutes read

– டில்கா– யாழ் பல்கலைக்கழகம் –

இம்முறை இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவில் ஊடகக் கற்கைத்துறையில் தங்கப்பதக்கம் பெற்று மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் மாத்தளை சுதுகங்கை தோட்டத்தைச் சேர்ந்த மு.துலாபரணி

தற்காலத்தில் மலையக சமூகத்தின் மத்தியில் கல்வி வழியான வளர்ச்சிகளும் சாதனைகளும் முன்னேற்றம் கண்டு வரும் நிலையானது எமது சமூகத்தின் ஒளிமயமான எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைத்துச்செல்கிறது. இதற்கான ஓர் சான்றாகத்தான் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் ஊடகக்கற்கைகள் துறையில் கற்று சிறப்புச் சித்தியெய்தி நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தினை எமது சமூக  மாணவி முனியப்பன் துலாபரணி சுவீகரித்துள்ளார். அத்தோடு பெருமைப்படவேண்டிய  முக்கிய விடயம் யாதெனில் இவ்வருடம் பட்டம் பெற்ற மலையக மாணவர்களில் எட்டுப்பேர் தற்போது யாழ்ப்பாண பல்கலையில் உதவி விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பதாகும்.

கடந்த 2021.02.24 ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற 35வது பட்டமளிப்பு விழாவில் மாணவி மு. துலாபரணி தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மூன்று வருட  ஊடகக் கற்கைகள் துறையில் பயின்று சிறப்புச் சித்தியெய்தும் மாணவர்களுக்கு இந்த பதக்கம் வழங்கப்படுகின்றது. ஊடகத்துறையில் பணியாற்றி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சனின் ஞாபகார்த்தமாக நிலா நிதியத்தினால் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றது. இந்த தங்கப்பதக்கத்தினை கடந்த இரண்டு வருடங்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயதர்சினி, அனட் கேசிகா ஆகிய இரு மாணவிகள் பெற்றுக்கொண்டனர். இவ்வருடம் முதன் முறையாக மாத்தளை பிரதேச மாணவி துலாபரணி இப்பதக்கத்தினை சுவீகரித்துள்ளமையானது மலையக சமூகத்திற்கு பெருமைச் சேர்ப்பதாகிறது. இத்தகைய பெருமைக்குரிய மாணவி தன்னைப் பற்றி கூறுகிறார்.   

 அறிமுகம்
எனது பெயர் முனியப்பன் துலாபரணி. எனது சொந்த ஊர் மாத்தளை மாவட்டத்திலுள்ள சுதுகங்கை எனும் சிறிய தோட்டமாகும். எனது பெற்றோர்கள் கூலித் தொழிலாளிகள். நான் ஆரம்பக் கல்வியை மாத்தளை இந்து தேசியக் கல்லூரியிலும் தரம் ஆறு தொடக்கம் உயர்தரம் வரை பாக்கியம் தேசியக் கல்லூரியிலும் கல்வி கற்றேன். உயர்தரத்தில் 1ஏ, 2பி பெறுபேற்றை பெற்றுக்கொண்ட நான்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டேன். வரலாறு மற்றும் ஊடகக் கற்கைகள் துறையில் முதலாம் வருடத்தில் பயின்ற நான், இரண்டாம் வருடத்திலிருந்து ஊடகக் கற்கைகள் துறையைச் சிறப்புக்கலையாக பயின்றேன். தற்போது யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் ஊடகக்கற்கைகள் துறையில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றேன்.

ஊடகக்கற்கைகள் துறையின் மீதான ஆர்வம்
எமது பாடசாலைகளில் ஊடகக் கற்கைகள் ஓர் பாட அலகாக இல்லாமையால் புதிய பாடத்தெரிவு என்ற அச்சம் ஆரம்பத்தில் என் மனதில் எழவே செய்தது. ஆனால், விரிவுரையாளர்களின் சிறப்பான கற்பித்தல் முறைகள் அவ் அச்சத்தை போக்கியதால் இலகுவாகவும் விருப்புடனும் இத்துறையைச் சிறப்பாகக் கற்கக்கூடிய வாய்ப்புக்கள் கிட்டியது.

செயன்முறைப் பயிற்சிகள் மற்றும் புகைப்படக்கருவி மீது கொண்ட ஆர்வமே என்னைத் தொடர்ந்தும் ஊடகக் கற்கைகள் துறையைக் கற்கத் தூண்டியது எனலாம். முதலாம் வருடத்தில் ஊடகங்கள், தொடர்பாடல் சார்ந்த கோட்பாடு ரீதியாக கற்ற நாம், இரண்டாம் வருடத்திலிருந்து செயன்முறை ரீதியான கற்றலில் ஈடுபட்டோம். சஞ்சிகை வெளியீடு, புகைப்பட இதழியல், ஆவணப்படத் தயாரிப்பு மற்றும் ஊடகத் தொழிசார் பயிற்சிகள் என்பன ஊடகக்கற்கைகள் துறையால் எமக்கு கிடைக்கப் பெற்றன.  அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்துப் பகிர்வுகள், ஊடகத் தொழில்சார் பயிற்சிகள் மற்றும் ஆளுமை வாய்ந்தவர்களின் விரிவுரைகள் ஆகியன எமக்கான ஊக்கத்தை அளித்தன.

பாடத்திட்டத்தில் கற்ற விடயங்களை ஊடக நிறுவனங்களில் நாம் பயிற்சிக்காகச் சென்ற காலங்களில் அனுபவத்தினூடாகப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் கிட்டியது. இதனூடாகவே ஊடகத்துறைக்குள் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பும் அதிகமானது என்றே கூறலாம். ஊடகத்துறையில் எழுத்துத் துறைச் சார்ந்து சாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய அவாவாகும். அன்று எனக்கு வழிகாட்டிகளாக இருந்த எமது ஊடகக் கற்கைகள் துறை சகோதர சகோதரிகள் பலர் இன்று இலங்கையில் பல ஊடக நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றமை,  எங்களுக்கும், எமக்கு அடுத்தபடியாக உள்ள சகோதர சகோதரிகளுக்கும் பெரும் நம்பிக்கையளிப்பதாகவுள்ளது.

 துறைத்தலைவருக்கு கோடான கோடி நன்றிகள்
கற்றலில் மட்டுமின்றி பல வழிகளிலும் எமக்கான வாய்ப்புக்களை உருவாக்கி எம்மை செதுக்கிய ஊடகக் கற்கைகள் துறையின்  தலைவர் கலாநிதி எஸ்.ரகுராம் விரிவுரையாளர்களான யூட் தினேஸ், திருமதி. பூங்குழலி சிறீசங்கத்தனன் மற்றும் அனுதர்ஷி லிங்கநாதன் ஆகியோருக்கும் மற்றும் எனது கல்விக்கு உற்ற துணையாக இருந்த எனது குடும்பத்தார் மற்றும் எனது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகின்ற தங்கப் பதக்கத்தினை எனக்களித்துக் கௌரவித்த நிலா நிதியம் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவிக்கிறார் துலாபரணி.

கலாநிதி எஸ்.ரகுராம் ( ஊடகக்கற்கைகள் துறைத்தலைவர்– யாழ். பல்கலைக்கழகம்)
ஊடகக்கற்கைகள் துறையை பொறுத்தவரையில் மலையகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் ஆர்வமாகவும் முனைப்பாகவும் தொடரக்கூடியதை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. மிகப் பெருவாரியான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்று வரும் போதே ஊடகத்துறையில் ஏதாவது சாதிக்க வேணடும் என்ற ஆர்வம் அவர்களிடத்தில் இருப்பதை  எங்களது விரிவுரை மண்டபங்களிலே கண்டிருக்கின்றோம். அந்த ஆர்வம் அவர்களை போராட தூண்டுகிறது. அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம், புதிய ஊடகம் என எதனையும் விட்டுவைக்காது அந்த துறையில் புதியவற்றை தாங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும் என முனைப்போடு செயற்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அந்தவகையில் இவ்வருடம் ஊடகக் கற்கைகள் துறையில் தங்கப்பதக்கத்தினை பெற்ற மாணவி   துலாபரணியும் கூட ஆரம்பத்திலிருந்தே தனது முனைப்பான ஆர்வத்தினால் இன்று இந்நிலையை எய்திருக்கிறார்.

அவரது இவ் உயர்வு நிலையானது பாராட்டுக்குரியதாகும்.  அவரை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய மலையக ஊடகத்துறை மாணவர்களும் நிச்சயமாக ஊடகத்துறையில் பிரகாசிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைகழக ஊடகக்கற்கைள் துறை என்றும் உறுதுணையாகவிருக்கும். எனினும் இம்மாணவர்கள் பட்டதாரிகளாக வெளியே வரும் போது பேரூடகங்களோ அல்லது மாற்று ஊடகங்களோ அவர்களுக்குரிய வாய்ப்பினை வழங்க முன்வரவேண்டும். ஊடகத்துறை மாணவர்கள் பல்வேறுப்பட்ட பயிற்சிளைப்பெற்று உயர்வடைந்து வரும்போது குறித்த இத்துறையை விட்டு வேறு துறைகளுக்குச் செல்வதை தவிர்ப்பதற்காக மலையகத்திலிருந்து வெளிவந்துக்கொண்டிருக்கக் கூடிய ஊடகங்களாயினும் சரி, கொழும்பினைத் தளமாகக் கொண்டு இயங்கக் கூடிய ஊடகங்களாயினும்  அல்லது மலையகத்திலிருந்து முகிழ்த்தெழும்பி வந்திருக்கக்கூடிய ஊடக தொழில்வாண்மையினரும்  இவ் இளைய சமூதாயத்தை ஊக்குவிக்க வேண்டும். அது அவர்களுக்குரிய வரலாற்றுப் பொறுப்பாகும். இவ்வாறு நாங்கள் இங்கிருந்து மலையக மண்ணுக்கு உருவாக்கித்தரக் கூடிய நல்ல ஊடகவியல் பட்டதாரிகளை மலையகம் மிகச் சரியாக பயன்படுத்தவும் அவர்களை ஊக்குவிக்கவும் தயாராக வேண்டும். இந்தப்பொறுப்பு மலையகத்துக்கும் மலையக முக்கிய அரசியல்வாதிகளுக்கும் ஆளுமைகளுக்குமான பொறுப்பாகும் என்றார்.

பல தடைகளை தாண்டி  சாதித்துக்காட்டியிருக்கும் மாணவி துலாபரணியைப் போன்று ஏனைய மலையக மாணவர்களும் ஒரு இலக்கை நோக்கி பயணிக்க இன்றே தயாராகவேண்டும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More