இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கான பிரெக்ஸிட் எல்லைப் பரிசோதனைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளை நீக்குவதற்கான உத்தேச உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் தாவர நலன் சார்ந்த 200 பக்கங்களைக் கொண்ட இந்த உத்தேச ஒப்பந்த ஆவணம், பிரெக்ஸிடில் உள்ள உறுப்பு நாடுகளின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், உமிழ்வு வர்த்தகத் திட்டம், இளைஞர் பரிமாற்றத் திட்டம் தொடர்பான ஆவணங்களும் இரு தரப்பு தலைவர்களுக்கான 15 பக்க வரைவு கூட்டு அறிக்கையும் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய சந்தையிலிருந்து இங்கிலாந்து வெளியேறிய பின்னர் வர்த்தகர்களைப் பாதித்த கடுமையான நடைமுறைகளை நீக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் உறவு மீளமைப்பில் இந்த உணவு ஒப்பந்தம் மிகவும் முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.
இந்த உடன்படிக்கையின் மூலம் ஏற்றுமதிக்கான 200 பவுண்கள் பெறுமதியான சுகாதாரச் சான்றிதழ்கள், 25 பவுண்கள் பெறுமதியான தாவர நலச் சான்றிதழ்கள், பரிசோதகர் கட்டணங்கள், துறைமுக மற்றும் மாதிரிப் பரிசோதனைக் கட்டணங்கள் போன்றவை நீக்கப்படவுள்ளன.
இதன் வாயிலாக இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 5.1 பில்லியன் பவுண்கள் வரை நன்மையளிக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் புதிய சொசேஜஸ், பர்கர்கள், உள்ளூர் நீர்நிலைகளிலிருந்து பெறப்படும் சிப்பி மீன்கள் மற்றும் விதை உருளைக்கிழங்கு ஆகியவற்றின் ஏற்றுமதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதுடன், செல்லப்பிராணிகளுக்கான பயண ஆவண அனுமதியும் இங்கிலாந்து சுலபமாகவுள்ளது.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாவரங்கள், விலங்குகள் மற்றும் உணவு வர்த்தக நியமங்கள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு அமைவாகச் செயற்பட இங்கிலாந்து இணக்கம் தெரிவித்துள்ளது.