Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை 1996 உலக கோப்பை | ஜூட் பிரகாஷ்

1996 உலக கோப்பை | ஜூட் பிரகாஷ்

8 minutes read

1996ல் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இந்திய உப கண்டத்தில் அரங்கேற ICC ஒத்துக் கொண்டதே ஒரு பெரிய கதை. கிரிக்கெட், அதுவும் உலகக் கோப்பை, ஏதோ தன்னுடைய பாட்டன் வீட்டு சொத்து என்று நினைத்து, ICCஐ ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த இங்கிலாந்திற்கு, இந்தியாவின் Dalmiyaவின் தலைமையில் ஆசிய நாடுகள் வைத்த Checkmate தான் இந்தியா-பாக்கிஸ்தான்-இலங்கையில் நடைபெற்ற 1996 Wills World Cup.

1987 உலக கிண்ணப் போட்டிகளை வேண்டா வெறுப்பாக இந்தியாவிற்கும், பிறகு 1992ஐ ஒஸ்ரேலியாவிற்கும் விட்டுக் கொடுத்து விட்டு, எப்படியும் 1996 உலக கிண்ணம் கிரிக்கெட்டின் தாய் மடிக்கு திரும்பி விடும் என்ற நப்பாசையில், இருந்த இங்கிலாந்திற்கு, Test கிரிக்கெட் விளையாடும் ஆசிய நாடுகள் மூன்றும் இணைந்து வழங்கிய அதிர்ச்சி வைத்தியத்தை, The Times பத்திரிகை “Asian Tigers twists Lord’s by tail” என்று வர்ணித்தது.

காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்த கிரிக்கெட்டிற்கு விடுதலை கிடைத்ததும், கிரிக்கெட் வர்த்தக மயமானதும் (commercialised), 1996 உலக கிண்ணத்தோடு தான். உலக கிண்ணத்தை, மூன்று நாடுகள் இணைந்து அமைத்த PILCOM (Pakistan India Sri Lanka Organising Committe) ஒழுங்கமைத்தது.

கிரிக்கட் வரலாற்றில் முதல் தடவையாக TV rightsஐ ஏலம் விட்டு, சுளையாக USD 14 மில்லியன்களை கறந்தது PILCOM. சப்பிற chewing gum முதல் குடிக்கிற coco cola வரை எல்லாவற்றிற்கும் official sponsor அந்தஸ்து கொடுத்து, பண மழையில் நனைந்தது PILCOM.

உலக கிண்ணத்தை நடாத்திய PILCOM USD 50 மில்லியன் இலாபம் ஈட்ட, அதில் பங்கு வகித்த இலங்கைக்கு எந்தவித பங்கும் கிடைக்கவில்லை. போட்டிக்கான செலவுகளை ஆரம்பத்தில் underwrite பண்ண இலங்கை மறுத்ததால், போட்டியில் கிடைத்த இலாபத்தில் பங்கு கொள்ள முடியாமல் போய் விட்டது.

1996 உலக கிண்ணத்தில் நடந்த Coke vs Pepsi விளம்பரச் சண்டையை, ambush marketing strategy, மறக்க முடியாது. பின்னாட்களில் Marketing பாடங்களில் அருமையான ஒரு case studyயாகவும் அந்த சம்பவம் இடம்பிடித்தது. மில்லியன் கணக்காக பணத்தை வாரி இறைத்து coke உலக கிண்ணத்தின் official sponsor பட்டத்தை வாங்க, திறமையான “nothing offical about it” என்ற சுலோகங்களுடன் Pepsiயின் விளம்பரங்கள் மக்கள் மனங்களில் கோலோச்சிக் கொண்டிருந்தன.

Pepsi TV ad

Pepsiயின் விளம்பரங்களில் தோன்றிய
Sachin, Azhar, Holding, Akram, Waqar, Donald போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள், Pepsiயின் விளம்பரங்களில் கலக்கினார்கள். இன்னொரு விதமான விளம்பரத்தில், Offical Fine leg என்று கிரிக்கெட் fielderஐ காட்டி விட்டு, unofficial fine leg என்று கட்டை சட்டை போட்ட பெட்டையை Pepsiகாரன் காட்டுவான்.

1996 உலக கோப்பையை இந்தியா, பாக்கிஸ்தான், ஒஸ்ரேலியா இல்லாவிடில் தென்னாபிரிக்கா அணிகள் தான் வெல்லும் என்று போட்டிகள் ஆரம்பமாக முதல் கணிக்கப்பட்டது. உலகம் போடும் கணக்குகளை மாற்றிப் போடும் வல்லமை படைத்த ஒரு சக்தி, இலங்கைத் தீவின் வடக்கில் நிலை கொண்டிருந்ததை, கணக்கு போட்ட வித்துவான்கள் கணக்கில் எடுக்கத் தவறியிருந்தார்கள்.

கிரிக்கெட் உலகக் கோப்பை, Valentines Day ஆன 14 Feb 1996 இன்று தொடங்க இருந்தது. அதற்கு சரியாக இரண்டு கிழமைகளிற்கு முதல், 31 ஜனவரி 1996 அன்று பகல் பத்தே முக்கால் அளவில், இலங்கையின் மத்திய வங்கியை குறி வைத்து விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதல், உலகக் கிண்ணத்தின் போக்கையே மாற்றி விட்டது.

Feb 17 1996ல் கொழும்பில் இலங்கை அணியை எதிர்த்து விளையாட இருந்த ஒஸ்ரேலிய அணியும், Feb 25 1996ல் விளையாட இருந்த மேற்கிந்திய அணியும், பாதுகாப்புக் காரணங்களை காரணம் காட்டி, இலங்கைக்கு வர மறுத்து விட்டன. கொதித்துப் போன கொழும்பு அரசாங்கமும், PILCOMம் எவ்வளவு முயன்றும் இரு அணிகளும் வர மறுத்து விட்டன.

இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய PILCOM, வரலாற்றில் முதற்தடவையாக, இந்தியா-பாக்கிஸ்தான் அணி வீரர்கள் இணைந்த ஒரு combined அணியை கொழும்புக்கு practice match விளையாட அனுப்பியது. இலங்கை வந்த Wills XI அணியில், Sachin, Anwar, Sohail, Azhar (C), Ijaz, Jadeja, Latif, Waqar, Wasim, Kumble, Kapoor ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள்.

இலங்கை அணி இடம் பிடித்திருந்த Group Aயில், இந்தியா, ஒஸ்ரேலியா, மேற்கிந்திய தீவுகள், கென்யா மற்றும் ஸிம்பாவே அணிகள் இடம் பெற்றிருந்தன. முதல் சுற்றில் விளையாட வேண்டிய 5 ஆட்டங்களில் 2 ஆட்டங்களில் walk over முறையில் இலங்கை அணிக்கு வெற்றிகள் மடியில் தானாக வந்து விழ, வேறு இரு போட்டிகளிலும் இலங்கை அணி எப்படியும் வெல்லும் என்று தெரிய, உலக கோப்பையில் முதலாவது பந்து வீச முதலே இலங்கை அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதி கண்டு விட்டது.

ஸிம்பாவே அணியுடனான முதலாவது போட்டியில் போட்டியில், அரவிந்த அடித்த 91 ஓட்டங்களின் பலத்தில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் இலகுவாக வெற்றியீட்டியது. இலங்கையின் அடுத்த ஆட்டம், பத்து நாட்கள் கழித்து இந்தியாவோடு டெல்லி Ferozha Kotla மைதானத்தில் நடைபெற்றது.

இந்த matchஐ யாரு மறந்தாலும் இந்தியாவின் சகலதுறை ஆட்டக்காரரான Manoj Prabakhar மறக்கவே மாட்டார். Test போட்டிகளிலும் ODIகளிலும் இந்தியாவின் opening batsman – opening bowler எனும் தனிச்சிறப்பு பெற்றவர் Manoj Prabakhar. அன்றைய இலங்கைய அணியுடனான ஆட்டத்தில் வழமையாக Open பண்ணும் Jadejaவை விட்டு Sachin ஓடு Prabakhar களமிறங்கினார். Prabakhar 7 ஓட்டங்கள் மட்டும் பெற்று ஆட்டமிழக்க, Sachinம் (137) Azharம் (72*) இணைந்து 3rd wicket partnership ஆக அடித்த 175 ஓட்டங்கள் கண்களிற்கு விருந்து.

இந்தியா அடித்த 273 ஓட்டங்களை Sanath Jayasuriya (79) அடித்து நொறுக்கினார். Prabakhar வீசிய 4 ஓவர்களில் 47 ஓட்டங்கள், அதுவும் கடைசி இரண்டு ஓவர்களையும் Azhar, Prabakharஐ offspin போட வைத்தத்தும், டெல்லிக்காரனான Prabakharற்கு டெல்லிச் சனமே கூ அடித்ததும், அந்த ஆட்டத்தோடு Prabakhar ஆடாமலே போனதும் 1996 உலக கிண்ணத்தில் நடந்தேறிய சிறப்பான சம்பவங்களில் ஒன்று.

இலங்கையின் கடைசி முதல் சுற்று ஆட்டம், கென்யாவுடன் இலங்கையின் சொதி வளவான கண்டியில் நடந்தது. இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை கென்யாவின் பந்து வீச்சாளர்களை “வச்சு செஞ்ச” இந்த ஆட்டத்தில் இலங்கை அணி அடித்த 398 ஓட்டங்கள் என்ற புதிய உலக சாதனை பத்தாண்டுகள் நிலைத்து நின்றதும் வரலாறு.

காலிறுதிப் போட்டியில் இலங்கை அணியிடம் சிக்கி இங்கிலாந்து அணி சின்னாபின்னமாகியது. தட்டுத்தடுமாறி இங்கிலாந்து அடித்த 238 ஓட்டங்களை rampaging இலங்கை அணி 40 ஓவர்களில் அடித்து முடித்து விட்டு, வீடு வந்து சேர்ந்தது. Faisalabadhல் மீண்டும் Sanath (82 runs in 44 balls) ருத்ர தாண்டவம் ஆடினார்.

அரையிறுதிப் போட்டியில் இந்தியாவோடு, கொல்கொத்தாவில் மோதலிற்கு நாள் குறித்தாகி விட்டது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள், ஓமோம், அவ்வாறான ஒரு புதன்கிழமையான 13 March 1996 அன்று தான் அந்த அரை குறையில் நிறுத்தப்பட்ட அரையிறுதிப் போட்டி அரங்கேறியது.

அன்று இந்தியாவிற்கு என்ன நடந்தது, ஏன் தோற்றார்கள் என்பதற்கான பல்வேறு ஊகங்களும் வதந்திகளும் உலாவினாலும், Aravida de Silva எனும் ஆளுமை ஆடிய அதி சிறந்த ஓரு innings தான் இலங்கையை வெல்ல வைத்தது என்பதை உண்மையான கிரிக்கெட் ரசிகன் ஒத்துக் கொள்வான்.

Match தொடங்க முதல் இந்திய பிரதம மந்திரியின் அலுவலகத்தில் இருந்து அஸாருக்கு அழைப்பு வந்தது என்பார் சிலர், இறுதியாட்டம் பாக்கிஸ்தானில் நடைபெற இருந்ததால் இந்திய உளவுத்துறை தலையிட்டது என்பார் வேறு சிலர், ஆண்டுகள் கழிந்து அஸார் match fixingல் மாட்டுப்பட “இப்ப விளங்குதடா” என்பார் இன்னும் சிலர். என்ன தான் சொன்னாலும் இலங்கை அணி அன்று ஆடிய அதிசிறந்த ஆட்டமும், இந்திய ரசிகர்களின் கேவலமான செயலும், காம்ப்ளி விட்ட கண்ணீரும் யாராலும் மறக்க முடியாது.

கொல்கத்தாவில் Toss வென்றால் முதலில் bat பண்ண வேண்டும் என்பது எழுதப்படாத நியதி. இரவில் அங்கு dew விழும், pitch மாறும், chase பண்ணுவது கஷ்டம் என்பதை 1993 Hero Cup finalல் இந்திய அணி கண்கூடாக கண்டிருந்தது. அப்படியிருந்தும் Tossல் வென்ற அஸார் ஏன் முதலில் bat பண்ணவில்லை என்பது அஸாருக்கு மட்டும் தான் தெரியும். முதலாவது ஓவரில் சனத்தையும் களுவையும் எதிர்பாராத விதமாக சிரிநாத் out ஆக்கி விட, அரவிந்த spinக்கு நன்றாக விளையாடுவார் என்று தெரிந்தும் ஏன் இரண்டாவது overஐ Kumble போட்டார் என்பதுவும் அஸாருக்கு மட்டும் தெரிந்த உண்மைகள்.

அரையிறுதி ஆட்டத்தின் தான் face பண்ணிய
முதலாவது பந்திலேயே களு ஆட்டமிழுந்து மைதானத்தை விட்டு அகல முதலே, batஐ சுழற்றிக் கொண்டு சண்டியா மாதிரி அரவிந்த நடந்து வந்த விதமே “இன்றைக்கு இருக்கு கச்சேரி” என்று கட்டியம் கூறியது.

அந்த matchஐ, அரை நாள் லீவு போட்டு விட்டு, கிரிஷாந்தனின் வீட்டில் பார்த்த ஞாபகம் இன்றும் நினைவில் நிழலாடுகிறது. TV பார்க்காத நேரங்களில் சீத்தை துணி போட்டு மூடி வைக்கப்படிருக்கும் அந்த 21’ Sony TVயில் நண்பர்களோடு இருந்து இந்திய-இலங்கை அணிகளிற்கிடையிலான அரையிறுதிப் போட்டியை பார்த்ததை வாழ்க்கையில் மறக்க முடியாது. “அந்த TV மச்சான், nineteen eighty two வில வாங்கினது” என்று இன்றும் அந்த TVயையும் அந்த நாளையும் கிரிஷாந்தன் ஞாபகப்படுத்தினான்.

உலக கோப்பையின் இறுதியாட்டம் ஞாயிற்றுக்கிழமை 17 March 1996ம் அன்று கராச்சியில் இடம்பெற்றது. அந்த ஞாயிற்றுக்கிழமை மத்தியானத்திலிருந்து, ஊரடங்கு போட்டதைப் போல, கொழும்பு நகரமே வெறிச்சோடியது. என்றுமே கிரிக்கட் ஆட்டங்களை பார்க்காத பல இலங்கையர்கள் பார்த்த முதலாவது கிரிக்கெட் ஆட்டமாகவும் இந்தப் போட்டி அமைந்தது.

ஏற்கனவே முறுகுபட்டிருந்த ஒஸ்ரேலிய – இலங்கை அணிகள் மோதிய மோதல், உண்மையிலேயே scripted by god தான். முரளியை no ball call பண்ணியதில் தொடங்கிய சண்டை, ரணதுங்க “Waugh brothers are overrated” என்றும் “Warne is a crap bowler” என்றும் பகர்ந்த கருத்துக்களால் உரமேறியிருந்த சூழ்நிலையில் தான் அந்த இறுதியாட்டம் நடந்து முடிந்தது.

மீண்டும் Aravida de Silva (107*) களமிறங்கி இலங்கை கிரிக்கெட் அணியின் வரலாற்றை புரட்டிப் போட, அவருக்கு பக்க பலமாக Gurusingheவும் Ranatungaவும் நின்றார்கள். கடைசியில் winning runsஐ Ranatunga third man நோக்கி தட்டி விட்டு எடுத்த கணத்தில் கொழும்பில் பட்டாசுகள் அதிரத் தொடங்கியது.

Dec 5, 1995ல் யாழ்ப்பாணம் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட போது வெடித்த பட்டாசுகளை விட பன்மடங்கு பட்டாசுகள் அந்த ஞாயிறு இரவில் வெடித்தது. வீதியில் இறங்கிய சனம், ஜெயவேவா என்று கத்திக் கொண்டு கட்டித் தழுவிக் கொண்டார்கள்.

அடுத்த நாள் வேலைக்கு போனால், cake வெட்டி, இலங்கையின் வெற்றியை கொண்டாடினார் எங்களது Group FCயாக இருந்த Lalith Wijeyaratne என்ற முன்னால் first class Cricketer. பூட்டோ அம்மையாரின் கையால் வாங்கிய உலக கிண்ணத்தையும் இலங்கை அணியையும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கொழும்புக்கு அழைத்து வர சுமார் ஆறு மணித்தியாலங்கள் எடுத்தது.

Sanath Jayasuriyaவிற்கு கிடைத்த Audi A4 காரை, அவர் வேலை செய்த Singer நிறுவனத்தில் அவரிற்கு முதலில் Parking கொடுத்திராத படியால், அவரது அலுவலகத்திற்கு முன்னால் இருந்த YWCA வளாகத்தில் தான் நிறுத்தி வைத்திருப்பார். YWCAக்கு மத்தியானம் சாப்பிட வாற சனம், சனத்தின் காரை தொட்டுப் பார்த்து விட்டு போகும்.

இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் அந்த உலக கோப்பை வெற்றியை கொண்டாட, சிறுபான்மையானோர் கறுவிக் கொண்டு இருந்தார்கள். தாங்கள் பிறந்து வளர்த்த நாடு உலக கோப்பையை வென்று வந்திருக்கும் மகிழ்சியிலும் பெருமையிலும் இணைந்து கொள்ள அந்த சிறுபான்மையினரின் மனதில் இருந்த ஏதோ ஒரு உறுத்தல் தடையாக இருந்தது, இன்னும் இருக்கிறது.

1996 உலக கோப்பை, சிரிலங்காவின் லோக குசலான.

ஜூட் பிரகாஷ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More