மொஹான் பீரிஸிற்கு ஐ.நாவில் முக்கிய பதவி

ஆயுதப்பரிகரணம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஆகிய விவகாரங்களைக் கையாளும் ஐக்கிய நாடுகள் தலைமைச்சபையின் தலைவராக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியும் தூதுவருமான மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் 6 பிரதான சபைகளின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் முதலாவதாகத் திகழும் தலைமைச்சபையானது ஆயுதப்பரிகரணத்தையும் சர்வதேச சமூகத்தைப் பாதிக்கக்கூடியவகையில் சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் உலகளாவிய சவால்களையும் கையாள்வதுடன் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலைத் தோற்றுவிக்கக்கூடிய விவகாரங்களுக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்திச் செயற்பட்டுவருகின்றது. 

இச்சபையானது ஐக்கிய நாடுகள் ஆயுதப்பரிகரணக்குழு மற்றும் ஆயுதப்பரிகரணம் தொடர்பில் ஜெனிவாவைத் தளமாகக்கொண்டியங்கும் பேரவை ஆகியவற்றுடன் மிகநெருக்கமாகப் பணியாற்றிவருகின்றது.

அந்தவகையில் ஐக்கிய நாடுகள் தலைமைச்சபையானது அதன் பணிகளை எதிர்வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 3 ஆம் திகதி) ஆரம்பிக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே அச்சபையின் தலைவராக மொஹான் பீரிஸ் நேற்று முன்தினம் (செப்டெம்பர் 29 ஆம் திகதி) நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டார். இலங்கை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதியரசரான அவர், அதற்கு முன்பதாக இலங்கையின் சட்டமா அதிபராகவும் பதவிவகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஆசிரியர்