இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் காட்டுத்தீ அபாயம் குறித்து அரசாங்கம் அனுப்பிய அவசரகால தொலைபேசி எச்சரிக்கை, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 07 மணியளவில் மில்லியன் கணக்கான மக்களின் மொபைல் போன்கள் ஒரு “தீவிர எச்சரிக்கை” (Severe alert) செய்தியுடன் ஒலிக்கத் தொடங்கின. “தேசிய அளவில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளது” என்று அந்தச் செய்தி எச்சரித்தது. அரசாங்கம் இது குறித்து முன்கூட்டியே போதுமான தகவல்களை வழங்காததால், மக்கள் இந்த எச்சரிக்கையைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்காக இரகசியமாக இரண்டாவது தொலைபேசியை வைத்திருப்பது வழக்கம். இந்த அவசரகால எச்சரிக்கை சத்தம், அவர்கள் மறைத்து வைத்துள்ள தொலைபேசிகளை வன்முறையாளர்களிடம் காட்டிக் கொடுத்துவிடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
வுமன்ஸ் எய்ட் (Women’s Aid) அமைப்பின் வெளிப்புற விவகாரங்களுக்கான தலைவர் வெரோனிகா ஓக்ஷாட் இது குறித்துக் கூறுகையில், “பாதிக்கப்பட்டவர்கள் உயிர் காக்கும் உதவிகளைப் பெற அல்லது வன்முறையிலிருந்து தப்பிக்க இரண்டாவது போன்களையே நாடுகின்றனர். அந்தச் சாதனங்கள் இரகசியமாக இருப்பது மிகவும் முக்கியம்” எனத் தெரிவித்தார்.
அரசாங்கம் இந்த எச்சரிக்கையை அனுப்புவதற்குச் சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பே (மாலை 06:45 மணி) ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்தது. இது மிகக் குறுகிய கால அவகாசம் என்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய எச்சரிக்கை கிடைக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றும் ‘தி ஹார்பரோ டோவ்ஸ்’ (The Harborough Doves) அமைப்பைச் சேர்ந்த படுவா ஈடன் கூறுகையில், இந்த எச்சரிக்கை சத்தம் கேட்டதும் தான் மிகவும் பதற்றமடைந்ததாகவும், ரகசியமாகப் போன் வைத்திருப்பவர்கள் உடனடியாக வன்முறையாளர்களிடம் சிக்கிக்கொள்ள இது வழிவகுக்கும் என்றும் கவலை தெரிவித்தார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் நேரடி கோரிக்கையின் பேரிலேயே இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டதாக அரசாங்கத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 43 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியிருந்தன. உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கவே இந்தச் செய்தி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவசரகால எச்சரிக்கைகள் ‘சைலண்ட்’ (Silent) அல்லது ‘டூ நாட் டிஸ்டர்ப்’ (Do not disturb) அமைப்புகளையும் மீறி ஒலிக்கக் கூடியவை. இருப்பினும், இரகசியமாகத் தொலைபேசி வைத்திருப்பவர்கள் தேவைப்பட்டால் தங்கள் ஐபோன் (iPhone) அல்லது ஆண்ட்ராய்டு (Android) போன்களின் அமைப்புகளில் (Settings) இந்த எச்சரிக்கைகளைச் செயலிழக்கச் செய்ய முடியும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.