இங்கிலாந்தின் RAF Fairford விமானப் படைத்தளத்திற்கு அருகே நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் முயற்சி தொடர்பான சம்பவத்தில், 22 வயது இங்கிலாந்து இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனார் என பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Gloucestershire அமைந்துள்ள இந்த விமானப்படை தளத்துக்கு அருகே கடந்த செப்டம்பர் 27 அன்று நடந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் 7ஆவது கைது நடவடிக்கை இதுவாகும். இருப்பினும், இதுவரை யார் மீதும் உத்தியோகபூர்வமாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
விமானப்படை தளத்துக்கு அருகில் மூன்று சந்தேகத்துக்குரிய வாகனங்கள் இருப்பது குறித்து பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, அப்பகுதியில் அசாதாரண நிலை அறிவிக்கப்பட்டு, பல டஜன் வீடுகள் காலியாக்கப்பட்டன.
பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸ் பிரிவின் மூத்த தேசிய ஒருங்கிணைப்பாளர் விக்கி எவன்ஸ் கூறுகையில், “இது இன்னும் தீவிரமாக நடைபெற்று வரும் விசாரணையாகும். பொலிஸார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
செப்டம்பர் 27 அன்று அதிகாலையில், விமானப்படை தளத்தை நோக்கி வாகனங்கள் சென்று கொண்டிருப்பதாக முறைப்பாடு வந்ததை அடுத்து, 23 முதல் 25 வயதுக்குட்பட்ட ஐந்து இங்கிலாந்து இளைஞர்கள் தளத்தின் எல்லைக்கு அருகில் கைது செய்யப்பட்டனர்.
வெடிபொருட்கள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர்கள், பின்னர் தீவிரவாதச் செயலுக்குத் தயாரான சந்தேகத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சந்தேகநபர்களுடன் தொடர்புடைய மூன்று வேன்களில் பெட்ரோல் இருப்பதை பொலிஸார் கண்டறிந்தனர். ஆனால், வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதனிடையே, கடந்த வியாழக்கிழமை இலண்டனில் 25 வயதான ஈரான் வம்சாவளி நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள 22 வயது இளைஞரையும் சேர்த்து, இதுவரை கைது செய்யப்பட்ட 7 பேரில் 6 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.