பிரபல சர்வதேச தொழிலதிபர் எலான் மஸ்க்கை ‘ஒரு மேதை’ என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பகிரங்கமாகப் பாராட்டியுள்ளார். அத்துடன், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையக் கட்டமைப்புக்கு நிகராக, ரஷ்யா தனது சொந்த செயற்கைக்கோள் இணையத் திட்டத்தை தற்போதுதான் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கட்டமைப்பை, உக்ரைன் இராணுவம் ரஷ்யாவுடனான போர்க்களத்தில் தனது ஆளில்லா விமானச் செயற்பாடுகள் மற்றும் தொடர்பாடல் நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாகத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றது. இவ்வாறானதொரு தீவிர களச்சூழலுக்கு மத்தியில், ரஷ்ய ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.
ஸ்டார்லிங்க் முறைமைக்கு நிகரான சொந்தக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இதற்கென இதுவரை 30க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு டிஜிட்டல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மக்ஸுத் ஷடாயேவ் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் இந்த விவரங்களை வெளியிட்டுக் கொண்டிருந்த வேளையில் அவரை இடைமறித்துப் பேசிய ஜனாதிபதி புட்டின், இது ரஷ்யாவின் ஆரம்பக்கட்ட நடவடிக்கை மட்டுமே என்பதைத் தாம் சுட்டிக்காட்ட விரும்புவதாகக் கூறினார். மேலும், எலான் மஸ்க் உண்மையிலேயே ஒரு மேதை எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.