அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறிய ரக தனியார் ஜெட் விமானமொன்று குடியிருப்புப் பகுதிக்கு அருகில் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஒன்பது பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். தெற்கு புளோரிடாவின் பாம் பீச் கவுண்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.50 மணியளவில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் ‘Learjet 60’ ரகத்தைச் சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின்-பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பஹாமாஸ் தீவுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பரப்பரப்பான வீதியொன்றுக்கு அருகில் விழுந்து நொருங்கிய குறித்த விமானம் உடனடியாக பாரிய தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதன் தாக்கத்தால் நிலத்தில் பாரிய பள்ளம் உருவாகியுள்ளதுடன், பாகங்கள் பல அடி தூரத்திற்கு சிதறி விழுந்துள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 35,000 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது கடுமையான காற்றுக் கொந்தளிப்பு, பனிப்படிவு மற்றும் கடும் மழை காரணமாக விமானத்தை மேலும் 2,000 அடி உயரத்திற்கு உயர்த்துவதற்கு விமானிகள் அனுமதி கோரியிருந்தமை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், சிறிது நேரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து, ஆரம்பத்தில் நிமிடத்திற்கு 10,000 அடி வேகத்திலும், பின்னர் 30,000 அடி வரையிலும் அதிவேகமாகக் கீழ்நோக்கிப் பாய்ந்துள்ளது. இதன்போது விமானம் அதன் வடிவமைப்புக்கான வேக வரம்புகளை மீறியுள்ளதாக ஆரம்பகட்ட தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து விமானியொருவர் அவசரநிலையை அறிவித்த போதிலும், விமானம் வலதுபுறமாகச் சாய்ந்து ஏவுகணை போன்று தரையில் மோதி வெடித்துள்ளது. விபத்து இடம்பெற்ற தருணத்தில் அப்பகுதியில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.
தரைப்பகுதியில் பொதுமக்கள் எவருக்கும் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்பதுடன், உயிரிழந்தவர்களின் விபரங்கள் அல்லது விபத்துக்கான துல்லியமான காரணங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இத்துயரச் சம்பவம் தொடர்பில் அமெரிக்கப் போக்குவரத்துச் செயலாளர் ஷோன் டஃபி இரங்கல் வெளியிட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் முன்னெடுத்து வருகின்றது.