இங்கிலாந்தின் மென்செஸ்டர் (Manchester) நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்று வெளிப்பட்டதைத் தொடர்ந்து, அதில் கலந்துகொண்ட பலருக்குத் திடீரெனச் சுகவீனம் ஏற்பட்டுள்ளதுடன், அரங்கில் கூடியிருந்த 12,000 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மென்செஸ்டரிலுள்ள ‘கோ-ஆப் லைவ்’ (Co-op Live) உள்ளரங்கில் நடைபெற்ற அமெரிக்க ராப் பாடகர் டான் டோலிவரின் (Don Toliver) இசை நிகழ்ச்சியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரங்கிற்குள் குறித்த மர்மப் பொருள் வெளியேற்றப்பட்ட பின்னரே அங்கிருந்த பலர் சுகவீனமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுகவீனத்திற்கு உள்ளானவர்களில் சிலருக்குச் சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், சிலர் கண் எரிச்சல் உள்ளிட்ட கண் தொடர்பான உபாதைகளை எதிர்கொண்டதாகவும் அம்புலன்ஸ் சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் பொலிஸ் அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, வெளிப்பட்ட மர்மப் பொருள் எதுவென்பது குறித்துத் தீவிர ஆய்வுகளையும் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, பொலிஸாரின் விசாரணைகளுக்குத் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகக் குறித்த அரங்கத்தின் நிர்வாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
