வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட மீன் சந்தைக்கட்டிடத்தினை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ..வி.விக்கினேஸ்வரன் அவர்கள் திறந்து வைத்தார்.
வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் செயலாளர் ஜெலிபன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் அவர்களின் 20 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புதிதாக அமைத்த மீன் சந்தையை முதலமைச்சர் நாடாவை வெட்டி திறந்து வைக்க சந்தைக்கட்டிடத்தின் பெயர்ப்பலகையை வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் திரைநீக்கம் செய்து வைத்தார்.
கோப்பாய் பிரதேசம் அதிக அளவான மக்களை கொண்டிருந்த போதும் கோப்பாய் பகுதிக்கான ஒரு மீன் சந்தை இதுவரை அமைக்கப்படாத நிலையில் அந்தப்பகுதி மக்கள் தமது தேவைகளுக்காக பல கிலோமீற்றர்கள் தூரம் சென்று பொருட்களை கொள்வனவு செய்யும் நிலை காணப்பட்டது. இந்த விடயத்தைக் கருத்தில் கொண்டே இந்த புதிய மீன்சந்தையை தான் அமைத்துக்கொடுத்திருப்பதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தனது உரையில் குறிப்பிட்டார்.





