Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சீன அரசாங்கத்தை நோக்கி யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம்

சீன அரசாங்கத்தை நோக்கி யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம்

2 minutes read

வடபகுதி  மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை சீனா நிறுத்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சார்பில் கோரிக்கை முன்வைக்கிறோம்.

வடபகுதியில் சீனா ஆதிக்கத்தை பலப்படுத்துவதற்காக சீனா பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அதில் ஒரு வடிவமாக  யாழ் மற்றும் கிளிநொச்சி பகுதிக் கடல்களில் சீனா முதலீட்டுடன் அட்டைப் பண்ணைகள் செயற்படுவதாக எண்ணுகிறோம்.

குறித்த கடற்பகுதிகளில் சீனா நேரடியாக அட்டைப் பண்ணைகளை அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட போதும் பல்வேறு தரப்புக்களில் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில் சீனா மறைமுகமாக   கொழும்பு நிறுவனங்கள் ஊடாக முதலீடு செய்துவருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

வளமான எமது குடாக்கடலின் பல ஏக்கர் பரவைக் கடல் பகுதிகளை முறையற்ற விதத்தில் அட்டைப் பண்ணைகள் அமைத்து வருவதாக அறிகிறோம்.

இயற்கையாகவே மீனினங்கள் இனப்பெருகத்திற்கேற்ற கண்ட மேடை பிரதேசங்களை தன்னகத்தே கொண்ட எமது குடாக்கடல் இயற்கையாகவே இறால் உற்பத்தி பெருகும் இடங்களாகவும் காணப்படுகிறது.

 இப் பிரதேசங்களில்  அட்டை ப்பண்ணைகளை அமைத்து கடல் நீரோட்டங்களை தடுத்து எமது கடலை நாசப்படுத்தும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

சீனாவின் இத்தகைய செயற்பாட்டினால் மனித உடல் வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் மற்றும் ஊட்டச்சத்து மிக்க கடல் உணவைப் பெற முடியாத சமூகமாக எம்மை அழிப்பதற்கு சீனா முயல்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

அதன் ஆரம்ப புள்ளியாக பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராஞ்சிப் பகுதியில்  சீன முதலீட்டு பிண்ணனியில்  பண முதலைகளினால் ஆரம்பிக்கப்பட்ட பண்ணையால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் அழியும் நிலையில் உள்ளது.

அதுமட்டுமல்லாது  குறித்த பகுதிகளில் பணத்தை வாரி வழங்கி முறையற்ற அட் டை  ப்பண்ணைகளை நிலை நிறுத்துவதற்காக போராட்டங்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை இடம் பெற்று வருகிறது.

இவ்வாறான போராட்டக்காரர்களால் மீனவ சமூகம் இரண்டாகப் பிளவுபட்டு ஒருவரை ஒருவர் மோதிக் கொள்ளும் நிலையை சீனா உருவாக்கி தனது இருப்பை தக்க வைக்க முயல்கிறது.

30 வருட யுத்தத்தின் பின்னர் முழுமையாக பொருளாதார ரீதியாக கட்டி எழுப்பப்படாத வடபகுதி மீண்டும் சீனாவின் அபிவிருத்தி என்ற யுத்தத்தினால் அழிவடையும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

மேலும்  சீனா அரசாங்கத்தால் யாழ் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக வருகை தந்து  வழங்கப்பட இருந்த 4.3 மில்லியன் ரூபாவை ஏற்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தோம்.

இந்நிலையில்  கொழும்பில் இருக்கும் சீனாத் தூதரகம் தந்திரமான முறையில்  பல்கலைக்கழ துணைவேந்தர் சற்குணராஜாவை கொழும்புக்கு அழைத்து  நிதியை வழங்கியமை நாகரிகமற்ற செயற்பாடாக பார்க்கிறோம்.
வடக்கு கிழக்கில் இறுதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள்  பல்கலைக்கழக மாணவர்கள் என பல ஆயிரம் பேர் இன்றும் பொருளாதார ரீதியாக    கட்டியெழுப்புவதற்கு  சீனா உதவி செய்யவில்லை. 

சீனா தற்போது உதவி என்ற போர்வையில்  வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளுக்குள்  ஊடுருவுவது ஏதோ ஒரு சதித் திட்டத்தை தனக்கு சாதகமாக நிகழ்த்துவதற்கு  முன்னகர் வதாகவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகிய நாங்கள் பார்க்கிறோம்.

 எமது கடல் எமக்குச் சொந்தமான நிலையில் அட்டைப் பண்ணை என்ற போர்வையில் மீனவ மக்களையும் எமது கடலையும் சீனா கையகப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே தமிழ் மக்களை பொருளாதார நீதியில் அழிப்பதற்காக ஆயுதம் இல்லாத யுத்தத்தை சீனா மேற்கொள்ளுமாயின் மீனவ  மக்களுடன் சேர்ந்து   எமது கடல் வளத்தை  பாதுகாக்க போராடத் தயங்க மாட்டோம் என கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More