இறுதிப் போர்க் காலப் பகுதியில் இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப்புலிகள் எவரும் சரணடையவில்லை என்று தகவல் அறியும் ஆணைக்குழு முன்பாக இராணுவம் சாட்சியம் வழங்கியது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் முன்வைத்திருந்த மேன்முறையீடு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியது.
“எங்களிடம் புலிகள் சரணடையவில்லை” என்று கூறி ஊடகவியலாளரின் தகவல் அறியும் விண்ணப்பத்தை 2019ஆம் ஆண்டும் இராணுவம் மறுத்திருந்ததது.
இது தொடர்பான மேன்முறையீடு மூன்று வருடங்களுக்குப் பின்னர் இன்று பரிசீலிக்கப்பட்டது.
“போர் இடம்பெற்ற பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் புலிகளா? பொதுமக்களா? என்பது எமக்குத் தெரியாது. நாம் பொறுப்பேற்று கொண்டபோது பதிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. எம்மிடம் வந்தவர்களை ப் பஸ்களில் ஏற்றி புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் கட்டுப்பாடுகளில் இருந்த உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் சேர்த்தோம். அதன் பின்னர் புனர்வாழ்வு பணியகமே அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்” என்றும் இராணுவம் சாட்சியம் வழங்கியது.
ஆனால், ஊடகவியலாளர் பா. நிரோஸ் சார்பாக ஆணைக்குழுவில் முன்னிலையான சட்டத்தரணி அ.ஸ்வஸ்திக்கா இதை மறுத்ததோடு இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப்புலிகள் சரணடைந்தமைக்கான ஆதாரங்களை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தார்.
மேலும், புனர்வாழ்வு பணியகத்திடம் இராணுவத்தினம் கூறும் தகவல்கள் இல்லை என்று புனர்வாழ்வுப் பணியகம் வழங்கியுள்ள தகவல்களையும் சட்டத்தரணி அ.ஸ்வஸ்திக்கா ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஆணைக்குழு, “அரசே இந்த விடயங்களை சர்வதேச அமைப்புக்களுக்குப் பல்வேறு முறை வழங்கியுள்ளது. எனவே, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இப்போது மறைப்பதற்கு ஒன்றுமில்லை” என்று இராணுவத்திடம் அறிவித்தது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தமைக்கான எழுத்துமூல சமர்ப்பணங்களை 10 நாட்களுக்கு இராணுவத்துக்கு ஊடகவியலாளர் நிரோஸ் வழங்க வேண்டும் என்றும், அதேபோல் இராணுவமும் எழுத்துமூல சமர்ப்பணங்களை விண்ணப்பதாரருக்கு வழங்கவும் என்றும் ஆணைக்குழு உத்தரவிட்டது.
மனு மீள எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி ஆணைக்குழு முன்பாக விசாரிக்கப்படவுள்ளது.