அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை பிரதேச பகுதிகளில் வாழும் மக்கள் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த மழை வெள்ளம் காரணமாக பெரியநீலாவணை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று பகுதிகளில் பல குடும்பங்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதுடன் தற்போது அங்குள்ள மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் மழை நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பகுதிகள் ஒவ்வொரு வருடமும் மழையாலும் அதனால் ஏற்படும் வெள்ளத்தாலும் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சில வேளை இப்பகுதிகளில் வாழும் மக்கள் இடம்பெயரும் நிலைமை ஏற்படுகின்றது.
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அன்றாட உணவுகளைச் சமைத்து உண்ண முடியாத நிலையில் மக்கள் காணப்படுகின்றனர்.
தற்போது வெள்ள நீர் வடிந்தோடுவதற்காகச் சில முகத்துவாரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் வெள்ளம் தேங்கிக் காணப்படுகின்ற நிலையே தொடர்கதையாகவுள்ளது.