Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வன்முறைகள் அரங்கேற இடமளியேன்! – ரணில் திட்டவட்டம்

வன்முறைகள் அரங்கேற இடமளியேன்! – ரணில் திட்டவட்டம்

9 minutes read

மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறைகள் மற்றும் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அதற்கான முயற்சியில் ஈடுபடும் எத்தரப்பினரையும் முற்றாக ஒடுக்குவதற்கு பாதுகாப்புப் படை பயன்படுத்தப்படும். அவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் இராணுவத்தின் கீழ்நிலை அதிகாரி முதல் பீல்ட் மார்ஷல் வரை அனைவரும் தமது பொறுப்பை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இன்று (24) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த விடயத்தைப் பற்றி பேசுவதற்கு முன், நான் ஏற்கனவே குறிப்பிட்ட இரண்டு விடயங்களை ஞாபகமூட்ட வேண்டும். ஜனாதிபதியின் மனதில் மூன்று வித அச்சங்கள் ஏற்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கூறினார். ஒரு நபருக்கு மூன்று வித அச்சம் ஏற்பட முடியாது என்பதை நான் உங்களுக்குக் கூற விரும்புகின்றேன். விசாலா நகரில்தான் மூன்று வித அச்சம் ஏற்பட்டது. நோய் பற்றிய அச்சம், அமானுஷ்ய அச்சம், மரண அச்சம் என்பன ஒரு சமூகத்தில் ஏற்படலாம். அந்த விடயத்தைத் தெளிவுபடுத்த ரதன சூத்திரத்தைக் கேட்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். ஒரு மனிதனுக்கு எப்போதும் மூன்று வித அச்சங்கள் ஏற்படுவதில்லை. மரிக்கார் பயம் இருந்தாலும், ஹிருணிகா பயம் இருந்தாலும், ரோசி பயம் இருந்தாலும் அது மூன்று வித அச்சம் ஆகாது.

மேலும், போராட்டத்துக்குப் புண்ணியம் கிடைக்க, ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த ரணில் விக்கிரமசிங்க இன்று போராட்டத்தை அடக்குகின்றார் என நண்பர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

போராட்டத்தின் புண்ணியத்தால் அல்ல, இந்த நாட்டின் ஜனாதிபதி போனால், பிரதமர் அந்தப் பதவியை ஏற்க வேண்டும். அதுமட்டுமன்றி சட்டப்படி நான்தான் பதில் ஜனாதிபதியாக இருக்க வேண்டும். இதிலிருந்து வெளியேறுமாறு கூறி எனது வீட்டுக்குத் தீ வைத்தார்கள். ஆனால், நான் விலகவில்லை, அதனால்தான் நான் இங்கே இருக்கின்றேன்.

எமது எதிர்க்கட்சித் தலைவர், நான் இந்த ஜனாதிபதிப் பதவியைக் கேட்டு வாங்கியதாக, இன்று கூறினார். நான் இதைக் கேட்கவில்லை. நாட்டின் சூழ்நிலை காரணமாக இதை ஏற்றுக்கொண்டேன்.

மகாநாயக்க தேரர்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். நானாகப் போய் கேட்கவில்லை. நான் கடிதங்கள் எழுதவில்லை. ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு கடந்த மே மாதம் 12ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பிய கடிதத்தை அவர் இன்று மறந்து விட்டார்.

‘ஜனாதிபதியே, எதிர்க்கட்சியின் பிரதான கட்சியாக மக்கள் சக்தி கூட்டணியின் தலைமையில் குறுகிய கால அரசை அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் என்ற முறையில் பிரதமர் பதவியை ஏற்க நான் தீர்மானிக்கின்றேன்’ என்று அக்கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருந்தார். எனது உரையின் பின்னர், இந்த முழு கடிதத்தையும் ஹன்சார்டில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கோட்டாபய ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டார். வேண்டுமானால் கட்சி யாப்பில் பார்க்கலாம். ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படலாம். என்னைக் குறை சொல்ல வேண்டாம்.

நான் பிரதமராகப் பதவியேற்கும் போது குறைந்தபட்ச காலக்கெடுவுக்குள் தனது ஜனாதிபதிப் பதவியை இராஜிநாமா செய்ய கோட்டாபய ராஜபக்ச ஒப்புக்கொண்டார்.

நான் பிரதமராகச் சத்தியப்பிரமாணம் செய்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் அவர் பதவியில் இருந்து வெளியேறினார். நீங்கள்தான் அவரைப் போகச் சொன்னீர்கள், நான் அல்ல. அதற்கு நான் என்ன செய்வது?

இராணுவம் பற்றிப் பேசும் போது இராணுவத்தின் செலவு அதிகரித்துள்ளது என்று சிலர் கூறினர். சிலரது கருத்துப்படி இராணுவத்தின் செலவை 24 மணி நேரத்தில் குறைக்க முடியாது. ஒரே நேரத்தில் 25 ஆயிரம் இராணுவ வீரர்களை வீதியில் விட முடியாது. நாங்கள் இப்போது ஒரு திட்டத்தை உருவாக்குகின்றோம்.

அதன்படி செயற்பட வேண்டும். இம்முறை அதிக செலவுகளை இராணுவம் ஏற்க வேண்டியிருந்தது. அதை நம்மால் தடுக்க முடியாது. படையினரின் எண்ணிக்கை குறைந்தாலும் பதவி உயர்வுகள் அதிகரித்துள்ளன. இது போன்ற விடயங்களும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளன.

இப்போது உணவுப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக இராணுவத்தை நாம் களமிறக்கியுள்ளோம்.

அத்துடன் இராணுவப் பண்ணைகள் மூலம் எமக்கு நிறைய வருமானம் கிடைக்கின்றது. அந்தப் பொருட்களின் போக்குவரத்துக்குத் தேவையான அளவு இராணுவத்தைப் பயன்படுத்துமாறும் கூறியுள்ளேன். இராணுவத்தின் எதிர்காலம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதற்காக ‘பாதுகாப்பு 2030’ என்ற அறிக்கையின்படி செயற்படுகின்றோம். நமது பாதுகாப்பை நாம் திட்டமிட வேண்டும்.

உலகில் அச்சுறுத்தல் இல்லை என்று சொல்ல முடியாது. இந்த நிலைமைகள் மாறி வருகின்றன. 1971 இல் இருந்த அச்சுறுத்தல் அல்ல, 1980 களிலும் ஈஸ்டர் ஞாயிறன்றும் நடந்தது. இந்த அச்சுறுத்தல்கள் வெவ்வேறு வழிகளில் நடக்கின்றன என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

மேலும் பூகோள அரசியல் எம்மை மையப்படுத்தியுள்ளது. அதில் அனைத்து பெரும் வல்லரசுகளும் தலையிட்டுள்ளன. எனவே நாம் இந்து சமுத்திரம் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 2030 க்குள் நமது கடற்படையை அதிகரிக்க வேண்டும். இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைவடையக்கூடும். விமானப்படையை அதிகரிக்க வேண்டும். ட்ரோனர் தொழில்நுட்பம் தேவை. 2040 இல் இந்தத் தேவை இன்னும் அதிகரிக்கும். இதை எப்படி தொடர்வது என்று நாம் பார்க்க வேண்டும்.

நமது பாதுகாப்புச் செலவைக் குறைத்து அதனை 3 வீத – 4 வீத அளவில் பராமரிக்க வேண்டும். நம்மால் முடிந்தால், நமது பொருளாதார வளர்ச்சியை 8 வீதத்துக்குக் கொண்டுவர வேண்டும். அப்போது எம்மிடம் போதுமான நிதி இருக்கும். சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக 8 வீத பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைத்திருந்ததன் காரணமாகவே அவர்களால் இந்த நிலைமைக்கு வரமுடிந்துள்ளது. நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். பழைய முறையில் சிந்திப்பதால் இவற்றைச் செய்ய முடியாது.

அத்துடன் இராணுவத்தில் இருந்து வெளியேறுபவர்கள் சமூகப் பணிகளுக்குப் பங்களிக்க வாய்ப்பளிக்க வேண்டும். தொழில்துறை சார்ந்தோர் இன்று நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள்.

நமது இராணுவத்தில் உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை அந்த இடங்களுக்கு அனுப்புவதன் மூலம் அதனால் உருவாகும் இடைவெளியை நிரப்ப முடியும். அதனால்தான் இராணுவப் பணியில் ஓய்வுபெறும் வயதைக் குறைத்துள்ளோம். மற்றவர்களுக்கு இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் இவற்றைப் புதிதாக திட்டமிட வேண்டும். நாம் புதிதாகச் சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் புதிய போர்க்கப்பலைத் தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். அந்தப் பலம் நம்மிடம் உள்ளது. பணத்தை மட்டுமே திரட்டிக்கொள்ள வேண்டும்.

பிரித்தானியா 2035 வரை தமக்கு அவசியமான திட்டங்களை வகுத்திருப்பதைக் கண்டேன். நாம் புதிய சட்டங்களைக் கொண்டு வர வேண்டும். நாம் பாதுகாப்புச் சபையை சட்டப்படி நிறுவுவோம். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி மற்றும் தேசிய பாதுகாப்புச் செயலகம் ஆகியவற்றையும் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, அந்த அதிகாரிகளுக்காக முப்படைக் குழுவொன்றையும் நியமிப்போம். இவற்றை கலந்துரையாடி இந்தச் சபையில் முன்வைக்கிறேன்.

புதியதாக நல்லதொரு இராணுவத்தை இலங்கையில் உருவாக்க விரும்புகின்றோம். இதைச் செயற்படுத்த, வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரம் ஒன்று தேவப்படுகின்றது.

அதேபோன்று, நாம் பொலிஸ் பிரிவு தொடர்பாகவும் கவனம் செலுத்தியுள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளில் பொலிஸ் பிரிவை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை அறிய ‘பொதுப் பாதுகாப்பு அறிக்கை’ ஒன்றை பெற்றுக்கொள்ளவுள்ளோம். அது குறித்து அமைச்சரிடம் தெரிவித்தேன்.

தற்போது பொலிஸ் கட்டளைச் சட்டம் அருங்காட்சியகத்துக்கு அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளது.

தற்போது கட்டளைச் சட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக நாம் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றோம்.

போதைப்பொருள், ஆட்கடத்தல் போன்ற பல பிரச்சினைகள் இன்று உள்ளன. இவற்றிலிருந்து நாட்டைப் பாதுகாத்தபடி நாம் முன்னேற வேண்டும்.

அன்றைய தினம் இந்த நாடாளுமன்றத்தை வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாக்க உழைத்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நான் குறிப்பாக நன்றி கூற விரும்புகின்றேன். அன்று அவர்கள் இல்லாவிட்டால் இன்று இந்த நாட்டில் நாடாளுமன்றமே இருந்திருக்காது. இப்படி உட்கார்ந்து கலந்துரையாட முடியாமல் போயிருக்கும்.

இறைமை மக்களுக்கே உரியது என்று எமது அரசமைப்பின் 3 ஆவது சரத்து கூறுகின்றது. சட்டம் இயற்றும் அதிகாரம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை அதிகாரம், சமயம், அடிப்படை உரிமைகள் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை 4 ஆவது பிரிவு விளக்குகின்றது.

மேலும், மக்கள் நேரடியாகப் பங்கேற்கும் ஒரே வாய்ப்பு தேர்தல்தான். யாருக்கும் வீதியில் இறங்கிப் பிரச்சினைகளை ஏற்படுத்த முடியாது. வன்முறைக்கு இடமில்லை. இராணுவம் இருப்பது இந்தச் சட்டங்களைப் பாதுகாக்கவே ஆகும்.

அரசைக் கவிழ்க்க வரும்போது இராணுவம் ஒதுங்கி நிற்க முடியாது. எமது மகாநாயக்க தேரர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும்போது எம்மால் அமைதியாக இருக்க முடியாது.

அரசமைப்பின் 9 ஆவது சரத்தின் பிரகாரம் அவர்களைத் தடுக்கும் அதிகாரம் இராணுவத்தினருக்கு உண்டு. இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமளிக்க முடியாது.

மதகுருமார்களை வைத்து குழப்பத்தை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும். இதை அனுமதிக்க நான் ஒருபோதும் விரும்பவில்லை.

இன்று சில தேரர்களை முன்னிறுத்திப் போராட்டங்களை நடத்துகின்றனர். பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். தேரர்களுக்கு மதச் செயற்பாடுகள் உண்டு. அந்த நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட வேண்டும். இதில் பொதுமக்கள் ஈடுபடுகின்றார்கள் என்பது வேறு விடயம்.

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கூட தடுப்புக்காவலில் இல்லை என்பதை கல்வி அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். வசந்த முதலிகே 8 – 9 வருடங்களாகப் பல்கலைக்கழக மாணவர்.

நான் 21 வயதில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினேன். வசந்த முதலிகேவுக்கு வயது 31 என்றாலும் அவர் இன்னும் பல்கலைக்கழக மாணவரே. ஒரு மாணவருக்கு ஒரு வருடமே மேலதிகமாக வழங்க முடியும். அதன் பிறகு நீங்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும்.

நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். நானும் மனித உரிமைகளைப் பாதுகாக்க விரும்புகின்றேன்.

அராஜகமும் வன்முறையும் மனித உரிமைகளை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது. மனித உரிமைகளைப் பயன்படுத்தி வன்முறை மற்றும் அராஜகத்தை உருவாக்கவும் முடியாது. மனித உரிமைகள் என்ற பெயரில் வன்முறையை ஏற்படுத்துபவர்களை பாதுகாக்க முடியாது.

அரசமைப்பின் 14 ஆவது பிரிவு நமது அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுகின்றது.

அரசமைப்பின் பாதுகாப்பு உள்ளிட்ட உட்பிரிவுகள் உட்படப் பொதுப் பாதுகாப்புக்காகச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவை குறிப்பாக செயற்படுத்தப்படலாம். இவை அனைத்தும் 15/1, 15/2 சரத்துகளில் உள்ளன. இந்த வரம்புகளை மீற முடியாது.

மனித உரிமைகளை காப்பவர்கள் நாங்கள் என்று ஒரு சிலர் இன்று கூறுகின்றார்கள், அவர்கள் என்ன செய்தார்கள்? குறைந்த பட்சம் இவற்றை நாம் நடைமுறையில் செய்துள்ளோம். நாங்கள் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியுள்ளோம்.

இவர்கள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று வாழ்கின்றனர். அதுதான் யதார்த்தம். யாராவது ஒருவர் சரி எழுந்து நின்று என்னிடம் சொல்லுங்கள் நான் அப்படிச் செய்யவில்லை என்று. இவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். நான் தான் அவர்களைப் பாதுகாத்தேன். ஆனால் அவர்கள் இன்று என்னைப் பார்த்தே கூச்சலிடுகின்றார்கள். இவ்வாறு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது.

சட்டத்துக்கு உட்பட்டு எதையும் செய்யுங்கள். நான் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். நான் ஒத்திவைக்க மாட்டேன். நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க எனக்கு உரிமையும் இல்லை. வீதியில் கூச்சலிடுவதால் நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை. கூச்சலிடுபவர்களுக்குப் பெரும்பான்மையும் இல்லை. பெரும்பான்மை உள்ளவர்கள் மௌனமாக உள்ளனர். அவ்வாறு அமைதியாக இருக்கும் மக்களுக்கு வாழவும், அவர்களின் உரிமைகளைப் பெறவும் உரிமை உண்டு. அந்த உரிமைகளின்படியே செயற்பட வேண்டும்.

இப்போது மனித உரிமை என்ற போர்வையில் பொலிஸ் அதிகாரிகளைக் கைது செய்ய முயல்கின்றார்கள். பொலிஸார் மனித உரிமைகளை மீறியிருக்கலாம். அவ்வாறு செய்தவர்கள் இருந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்போம்.

அவசரகாலத்தை உருவாக்கி, கலவரம் போன்றவற்றை ஏற்படுத்தி, அதைத் தடுக்கப் பொலிஸாரிடம் செல்லும் போது, பொலிஸார் மீது மனித உரிமை வழக்குகள் தொடரப்படுகின்றன. இது மனித உரிமைகளுக்காகச் செய்யப்படுவதில்லை, மாறாக பொலிஸாரின் தலையீட்டை நிறுத்துவதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே, இது தொடர்பில் ஆராயுமாறு நான் சட்டமா அதிபரிடம் கூறினேன். அப்படிச் செய்தால் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். இந்த விளையாட்டை எப்போதும் தொடர அனுமதிக்க முடியாது.

இராணுவ அதிகாரியாக இருந்தாலும் சரி, பொலிஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி அனைவரையும் நாம் பாதுகாக்க வேண்டும். மனித உரிமைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, எனது தலைமைப் பாதுகாப்பு அதிகாரியையும் பணி நீக்கம் செய்ய முயன்றனர். எனது வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது.

இதன் முக்கிய ஊடகம் ‘சிரச’ ஆகும். நான்தான் அவர்களுக்கு எதிராகச் செயற்பட வேண்டும். ஆனால், எனது முக்கிய மெய்ப்பாதுகாவலரை நீக்குமாறு அவர்கள் மனித உரிமைகள் ஆணையத்திடம் கேட்கின்றனர். அவர் என்ன தவறு செய்தார்? எனது பிரதான பாதுகாப்புப் பணிப்பாளரையும் நீக்கச் ‘சிரச’ விரும்பியது. அவர் அந்த இடத்தில் சம்பந்தப்படவில்லை. எம்மிடம் இருப்பவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

இது தொடர்பில் நான் அறிக்கை விடுத்த பின்னர் ‘சிரச’ ஊடக நிறுவனம் என்னைத் தாக்க ஏழு பேரை அனுப்பியது. ஒவ்வொரு நபரிடமிருந்தும் அறிக்கைகள் எடுக்கப்படுகின்றன. துமிந்த நாகமுவ, விதர்ஷன கன்னங்கர, கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி போன்றவர்களிடம் வாக்குமூலம் பெறுகின்றனர்.

என்னைப் பற்றி பேசுவதற்கு முன், பகிடிவதைகளிலிருந்து பல்கலைக்கழக மாணவர்களைப் பாதுகாத்துத் தருமாறு நான் கூறுகின்றேன். பகிடிவதையை எதிர்க்க வேண்டும். அரசைப் போலவே எதிர்க்கட்சியும் இருக்க வேண்டும். நாம் ஒன்றுபட்டு இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என்றே நான் கூறுகின்றேன். அவ்வாறு செய்தால் மீண்டும் வீதிக்கு வந்து அரசைக் கவிழ்க்கச் சொல்ல முடியாது.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அரசைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு சேவையில் உள்ள அனைவருக்கும் உள்ளது. இந்த நிறுவனங்களைப் பாதுகாக்க கோப்ரல் முதல் பீல்ட் மார்ஷல் வரை அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More