மக்கள் போராட்டத்துக்குப் பொன்சேகா அறைகூவல்!

“மக்கள் தமது பிரதேசங்களில் இருந்து அரசுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அரசின் அடக்குமுறைக்கு மக்கள் அச்சமடையக்கூடாது. மக்கள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண ஸ்திரமான கொள்கை இல்லாமல் இந்த அரசு செயற்படுகின்றது. எதிர்காலத் தலைமுறையினரது எதிர்காலம் இல்லாமல் போகுகின்றது என்பதை நாட்டு மக்கள் இனியாவது விளங்கிக்கொள்ள வேண்டும்.

பாதுகாப்புத் தரப்பினரும் அரசின் முறையற்ற வகையில் செயற்பாடுகளுக்கு அகப்பட்டுள்ளார்கள். ஜனநாயகப் போராட்டத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும். மக்கள் போராட்டத்துக்கு ஊழல் அரசியல்வாதிகள் அச்சம் கொண்டுள்ளார்கள்.

காலிமுகத்திடலிலும்,கொழும்பிலும் போராட்டத்தில் ஈடுபட முடியாவிட்டால் பரவாயில்லை. பொதுமக்கள் தங்களில் பிரதேசங்களில் இருந்து போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

அரசின் அடக்குமுறைக்கு அச்சமடைய வேண்டாம். மக்கள் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்புடன் செயற்படவில்லை. புலனாய்வுப் பிரிவை மறுசீரமைக்க வேண்டும்.

அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு எதிரான அடக்குமுறையை அரசு தவிர்த்துக்கொள்ள வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை அரசு உடன் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” – என்றார்.

ஆசிரியர்