தேர்தலை நடத்தாவிடின் அரசுக்கு ஆபத்து! – தயாசிறி எச்சரிக்கை

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திப்போட்டால் சர்வதேச நாடுகள் இந்த அரசுக்கு எதிராகத் திரும்பும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“ஒருவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசால் ஒத்திப்போடக்கூடும் என்பதால்தான் வழக்கு ஒன்றைத் தாக்குதல் செய்துள்ளோம். எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளோம்.

இந்தத் தேர்தல் ஏற்கனவே ஒரு வருடம் ஒத்திப்போடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பை வழங்கப்போகின்றது என்று பார்ப்போம்.

தேர்தலை ஒத்திப்போட்டால் அது நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். வரலாற்றில் தேர்தலை ஒத்திப்போட்டதால் அப்படியான விளைவுகளுக்கு நாம் சந்தித்துள்ளோம். அப்படி நடந்தால் அதன் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும்.

தேர்தலை ஒத்திப்போட்டால் சர்வதேச நாடுகள் இந்த அரசுக்கு எதிராகத் திரும்பும். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில் சர்வதேச நாடுகளைப் பகைத்துக்கொள்வது நல்லதல்ல.

சர்வதேச நாடுகளின் உதவி நிச்சயம் தேவை. உதவி இல்லாமல், தனியாக எம்மால் எழுந்து நிற்க முடியாது. அந்த நாடுகள் கைகொடுக்க வேண்டும்” – என்றார்.

ஆசிரியர்