March 24, 2023 3:56 am

13 இற்கு எதிராகப் பௌத்த தேரர்கள் கடிதம் போர்க்கொடி!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் எனக் கோரி எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

பொலிஸ், காணி அதிகாரங்கள் உள்ளிட்ட சில அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுமாயின் அது நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தம் இந்தியாவால் திணிக்கப்பட்டது என்றும், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மூலோபாயத் திட்டத்தின் ஒரு பகுதியாக அது இலங்கையின் நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 13 ஆவது திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் எனவும், உள்நாட்டு வளங்கள் மற்றும் சொத்துக்கள் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதை உடனடியாகத் தடுக்க வேண்டும் எனவும், கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் நாட்டுக்கு இழந்த செல்வம் மற்றும் வளங்களை மீட்டெடுக்க வேண்டும் எனவும் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைப் போக்குவதற்கு ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் அரச செலவீனங்களைக் குறைப்பது அவசியமானது என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி உட்பட அமைச்சரவையில் உள்ள எவரும் உள்ளூர் உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்கான எந்தவொரு மூலோபாயத் திட்டங்களையும் முன்வைக்கவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்