September 22, 2023 3:58 am

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் கைதாகுவார்! – பொலிஸார் தெரிவிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் கைது செய்யப்படக் கூடும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு எதிராக நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

எனினும், முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின், அவர் நாடு திரும்புவதைப் புறக்கணித்தாலும் இன்டபோல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெரோம் பெர்னாண்டோ என்ற போதகர் ஆற்றிய பிரசங்கம் சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த அறிக்கைகளில், சமூகத்தின் பல்வேறு பிரிவுகள், பிற மத நம்பிக்கைகளை அவமதிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போதகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பல தரப்பினரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தனர்.

அத்துடன், போதகரின் வாக்குமூலங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் நாட்டை விட்டு வெளியேறினார் என்று அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்தனர்.

இதேவேளை, நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை வரவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்