“கிளி/ பரந்தன் இந்து மகா வித்தியாலயம். வைர விழா மலர்…..1954—2014 இல் பக்கம் 01 தொடக்கம் 11 ஆம் பக்கம் வரையான பாடசாலை வரலாற்றிலிருந்து பெற்ற விபரங்கள்”
1. 1954 ஆம் ஆண்டு குமரபுர கிராம விஸ்தரிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில்.
2. அக்காலத்தில் காரியாதிகாரியாக (D.R.O) கடமையாற்றிய திரு. முருகேசு அவர்களினால் குமரபுரம் கிராம விஸ்தரிப்புத் திட்டத்தின் கீழ் குமரபுரத்தின் நடுப்பகுதியில் 5 ஏக்கர் காணி பாடசாலைக்கென வழங்கப்பட்டது. (இங்கே திரு. முருகேசு எனக் குறிப்பிடப்படுபவர் திரு. முருகேசம்பிள்ளை அவர்களே ஆகும்.)
3. கிராமத்தின் நன்மை கருதி கரைச்சி சைவ வித்தியா விருத்தி சபையினரால் கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன. அவற்றில் ஒரு பள்ளியே குமரபுரப் பிரதேசத்தில் பரந்தன் இந்து ஆரம்பப்பாடசாலை எனும் பெயருடன் ஆரம்பிக்கப்பட்டது.
4. 1958 ஆம் ஆண்டு இரணைமடுக்குளம் உடைப்பெடுத்து பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பரந்தன், ஊரியான், முரசு மோட்டைப்பகுதி மக்கள் அனைவரும் எமது புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடம் உயரமாகவும் வளமானதாகவும் அமைக்கப்பட்டதன் காரணமாக தஞ்சம் புகுந்தார்கள். இதன் போது மக்களுக்கு ஏற்பட்ட இடர்களை துடைக்கும் முகமாக இந்திய அரசினால் விமானம் மூலம் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது. இவ் உணவுப்பொதிகளை பகிர்ந்தளிப்பதற்கு அக்காலத்தில் கிராம உத்தியோகத்தராக இருந்த த. க. மகாலிங்கம் என்பவரே முன்னின்று செயற்பட்டார்.
ஓய்வு பெற்ற முதலாவது அதிபர் (நிரந்தர அதிபர்) திருமதி முத்தம்மா செல்லையா அவர்களின் உள்ளத்திலிருந்து. கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலயம்…. வைர விழா மலர்…1954–2014
1954 ம் ஆண்டு அமரர் N. K. நல்லதம்பி, அமரர் இரங்கூன் சுப்பிரமணியம், அமரர் அ. சிவசுந்தரம் ஆகியோரின் பெருமுயற்சியின் காரணமாக கரைச்சி சைவ வித்தியாவிருத்தி சபையினரால் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
பச்சைவயல் கனவு நாவல்… தாமரைச்செல்வி பக்கம் 101
“அடுத்த விதைப்பு நேரத்தில் சிவத்துக்கு குமரபுரத்தில் காணி கிடைத்தது. கிளிநொச்சியில் நடந்த காணிக்கச்சேரியில் யாழ்ப்பாணத்திலிருந்து டி.ஆர்.ஓ முருகேசம்பிள்ளை வந்து இந்தக்காணிகளை பகிர்ந்து கொடுத்தார். காணி உத்தியோகத்தர்கள், சுற்று வட்டார விதானைமார் எல்லாரும் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு காணி காட்டுவதற்காக அந்தப்பகுதி விதானையாரும் காணி உத்தியோகத்தரும் வந்திருந்தார்கள்”
கள்ளத்தோணியில் வந்த தனுஷ்கோடி திருகோணமலைக்கு போக, சிறுவர்களான சுந்தரமும் சுப்பையாவும் தியாகர்வயலில் நின்றார்கள். பொன்னம்மா அடுத்தநாள் காலமை முடிதிருத்துபவரான பரமரைக் கூப்பிட்டு சிறுவர்களின் தலைமயிரை வெட்டச் செய்தா. முன்னர் இருந்த முடிதிருத்துபவர் வயது போனதால், தனது பொறுப்பை மகனான பரமரிடம் ஒப்படைத்தார்.
பரமர் மட்டுவிலிலிருந்து மூன்று கிழமைகளுக்கு ஒருமுறை வந்து, நின்று தனது கடமையை செய்து விட்டு போவார். மீனாட்சி கணபதியாருடன் கிளிநொச்சிக்கு வண்டிலில் போய், சந்தையில் தைத்து தொங்கிய சாறங்களிலும் சேர்ட்டுகளிலும் ஒவ்வொன்றை சிறுவர்களுக்காக வாங்கி வந்தா. பேரம்பலத்தார் தான் சாவகச்சேரிக்கு போன போது சிறுவர்களுக்கு ஒவ்வொரு நாலுமுழ வேட்டிகளை வாங்கி வந்தார்.
பொன்னாத்தை இரண்டு பாய்களை கொண்டு வந்து சிறுவர்கள் படுப்பதற்காக கொடுத்தா. சிறுவர்கள் இருவரும் பெரிய பரந்தன் மக்களின் செல்லப்பிள்ளைகள் ஆனார்கள்.
சிறுவர்கள் பாடசாலைக்கு மழைக்கு கூட ஒதுங்காதவர்கள். பொன்னம்மா தனது ரீச்சராய் வரவேண்டும் என்ற ஆசையை சுந்தரத்திற்கும் சுப்பையாவிற்கும் படிப்பித்து தீர்த்துக் கொள்ள எண்ணினா.
இரண்டு பேருக்கும் சிலேற்றும் பென்சிலும் வாங்கி ‘அ’, ‘ஆ’ வும் ‘1’, ‘2’ உம் படிப்பிக்க தொடங்கினா.
மகாலிங்கம் “பொன்னம்மா, எண்ணும் எழுத்தும் படிப்பது சரி தான். அதுக்கு முதல் அவங்கள் கதைக்கும் பாஷையை திருத்து. அப்ப தான் அவங்கள் பிடி படாமல் தப்பலாம். அவங்களின் கதையே ஆட்களை காட்டி கொடுத்துவிடும்” என்றார்.
பொன்னம்மாவிற்கும் அது புரிந்தது. பேச்சு பழக்குவதில் தனது கவனத்தை செலுத்தினா. மூன்று மாதங்களின் பின் அவர்களைப் பார்த்தவர்கள், அவர்கள் கள்ளத்தோணியில் வந்தவர்கள் என்று நம்ப மாட்டார்கள்.
ஊர் மக்களின் உபசரிப்பில் சொக்கு எல்லாம் வைத்து, நடை உடை பாவனை எல்லாம் மாறி, இலங்கைத்தமிழையும் பேச ஆரம்பித்து விட்டனர். அதன் பின்னரே பொன்னம்மா எண்ணையும் எழுத்தையும் கற்பிக்கத் தொடங்கினா.
பெரிய பரந்தன் வளர்ச்சியுற்ற காலத்தில் பரந்தன் சந்தியில் ஒரு தபால் கத்தோர் வந்து விட்டது. மகாலிங்கம் விதானையாராக வந்த காலத்தில் குஞ்சுப்பரந்தனில் ஒரு உப தபாற்கந்தோரும் வந்தது.
குஞ்சுப்பரந்தனை சேர்ந்த கணபதிப்பிள்ளை என்பவர், தனது வீட்டில் சிறு மாற்றங்களைச் செய்து, ஒரு பகுதியில் உப தபாற்கந்தோரை நடத்தினார். வேறு பல கணபதிப்பிள்ளைகளும் இருந்த படியால் அவர் போஸ்மாஸ்டர் கணபதிப்பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.
பரந்தன் பெரிய தபாற்கந்தோரில் இருந்து ஐயாத்தம்பி, வைத்திலிங்கம், கிருஸ்ணபிள்ளை முதலியோர் மாறி மாறி வந்து காலை நேரத்தில் கடிதங்களை குஞ்சுப்பரந்தன், செருக்கன், பெரியபரந்தன், ஐந்தாம் வாய்க்கால் மக்களிடம் கொடுத்தார்கள். மாலையில் வந்து உப தபாற்கந்தோர், பாடசாலை முன்றல், எட்டாம் வாய்க்கால் சந்தி, ஓவசியர் சந்தி போன்ற இடங்களில் வைக்கப்பட்டிருந்த தபாற்பெட்டிகளில் போடப்படும் கடிதங்களை சேகரித்து செல்வார்கள். (மக்களின் வசதிக்காக கிராமத்தின் முக்கியமான இடங்களில் தபால் பெட்டிகளை வைப்பது வழக்கம்.)
உருத்திரபுரம் குடியேற்றத்திட்டம் வந்த பின்பு அந்த மக்களுக்குரிய கடிதங்களையும் பரந்தன் தபால் ஊழியர்களே கொண்டு சென்று கொடுத்தார்கள். பின்னர் உருத்திரபுரத்திலும் ஒரு உப தபாற்கந்தோர் வந்து விட்டது.
உப தபாலதிபர் தனது வீட்டையே உப தபாற்கந்தோராக பாவித்தார். அங்கு வேலை பார்க்கும் தபால் ஊழியர் பரந்தன் தபாற்கந்தோருக்கு போய் உருத்திரபுரம் மக்களுக்கு வரும் கடிதங்களை கொண்டு வந்தார். உருத்திரபுரத்தில் சேர்ந்த கடிதங்களை கொண்டு போய் பரந்தனில் ஒப்படைத்தார்.
1954 ஆம் ஆண்டு கிராம விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண குடாநாட்டு மக்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு காணிக்கச்சேரியில் வைத்து குமரபுரம் என்னும் இடத்தில் ஒரு ஏக்கர் குடியிருப்பு காணியும் மூன்று ஏக்கர் வயல் காணியும் வழங்கப்பட்டன. டீ. ஆர். ஓ முருகேசம்பிள்ளையும் காணி உத்தியோகத்தரும் நேர்முகத் தேர்வு வைத்து தகுதியானவர்களை தெரிவு செய்தனர். அவர்களுக்கு உதவியாக பரந்தன் விதானையாரான மகாலிங்கமும் வந்திருந்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயரை முருகேசம்பிள்ளை முன்னிலையில் காணி உத்தியோகத்தர் வாசித்தார். ஏற்கனவே காணி இல்லாதவர்கள் அனைவருக்கும் காணிகள் கிடைத்தன.
குமரபுரம் காணி வழங்க முன்னர, 5 ஆம் வாய்க்காலில் வெட்டப்படாதிருந்த காணிகள் பத்து ஏக்கர் திட்டமாக நெற்செய்கைக்காக பகிர்ந்தளிக்கப்பட்டன. அதே போன்று பரந்தன் கண்டி வீதியில் மத்திய தர வகுப்பினருக்கு குடியிருக்க அரை ஏக்கர் வீதம் வழங்கப்பட்டது.
குமரபுரத்தில் காணியை பெற்றவர்களில் சுப்பிரமணியமும் ஒருவர். இவர் தனக்கு காணி பெற்றதுடன் பாடசாலை, கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம், கோவில் போன்ற பொது நிறுவனங்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
முதலே இவை பற்றி யோசித்திருந்த டீ. ஆர். ஓ. முருகேசம்பிள்ளை, தனக்கு மட்டும் காணியை பெற்றுக் கொண்டு போகாது, சமூகத்தைப்பற்றியும் அக்கறை காட்டும் இவரது ஆர்வத்தை மெச்சினார்.
ஐந்தாம் வாய்க்காலில் காணிகளை பெற்று பெரிய விவசாயிகளாக விளங்கிய ரங்கூன் மணியத்தார், மாணிக்க வாத்தியார், கிளாக்கர் என்பவர்களின் வரிசையில் புதிதாக வல்லிபுரம், செல்லையா என்பவர்களும் இணைந்து கொண்டனர். இந்த வல்லிபுரம், செல்லையா என்ற சகோதரர்களின் தம்பியார் தான் சுப்பிரமணியம் என்பதை மகாலிங்கம் விதானையார் முன்னரே அறிந்திருந்தார்.
சுப்பிரமணியத்தின் சமுதாயத்தின் மீதான அக்கறை மகாலிங்கத்திற்கு நன்கு பிடித்துக் கொண்டது. அதனால் அவரது கையை பிடித்து வாழ்த்து தெரிவித்தார். சுப்பிரமணியத்திற்கும் மகாலிங்கத்திற்கும் இடையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, சுயநலமற்ற நட்பு ஏற்பட்டது அன்று தான்.
மகாலிங்கத்திற்கு சேவைக்காலத்தில் பலரது அறிமுகங்கள் கிடைத்து, பல நண்பர்கள் ஏற்பட்டாலும் சுப்பிரமணியத்துடனும் மார்க்கண்டு விதானையாருடனும் ஏற்பட்ட நட்பு ஈடு, இணையற்றதாகவே இருந்தது.
மீனாட்சிக்கு, அக்காவும் தங்கையுமாக இரண்டு ஒன்றுவிட்ட சகோதரிகள் யாழ்ப்பாணத்தில், கொட்டடியில் வசித்தார்கள். மூத்தவரான தெய்வானையின் கணவர், வியாபாரம் செய்து வந்தவர், ஒரு பெண் குழந்தையுடன் தெய்வானையை தவிக்க விட்டு விட்டு இறந்துவிட்டார். பெண் குழந்தை கமலா தகப்பன் இறக்கும் போது வைத்தீஸ்வரவித்தியாலயத்தின் மாணவி.
இளையவரான சின்னத்தங்கச்சியின் கணவர் யாழ்ப்பாணத்தில் மருந்துக்கலவையாளராக வேலை பார்த்து வந்தார். மலேயாவில் மருந்துக்கலவையாளர்களுக்கு வேலையை சுலபமாக பெறலாம் என்றும், சம்பளமும் அங்கு அதிகம் என்றும் கேள்விப்பட்ட அவர், தனது மகள் தவத்தை வேம்படி மகளிர் பாடசாலையில் சேர்த்து விட்டு, போய் வருவதற்கு மாணவிகளை ஏற்றி இறக்கும் குதிரை வண்டில் ஒன்றை ஒழுங்கு படுத்தி விட்டு மலேயா போய் சேர்ந்தார்.
அங்கு உடனேயே வேலை கிடைத்து விட்டது. அவர் ஒழுங்காக தனது சம்பளக்காசில் பெரும் பகுதியை மனைவிக்கு அனுப்பி வந்தார். குடும்பத்தினர் மகிழ்ந்து போனார்கள். ஆனால் விதி அவர்கள் வாழ்விற்கு எதிராக சதி செய்ததோ தெரியாது, திடீரென நோய் வாய்ப்பட்டு அவர் இறந்து விட்டார்.
நண்பர்களால் அவரது உடலை, தாங்கள் எல்லாருமாகச் சேர்த்த ஒரு தொகை பணத்துடன் அனுப்பத்தான் முடிந்தது. வேலையில் சேர்ந்து ஒரு வருடம் முடியாத படியால், நண்பர்கள் எவ்வளவு முயற்சி செய்தும், அவரது பென்சனை மனைவிக்கு பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
கையிலிருந்த காசு முடிந்ததும் பிறரிடம் உதவி கேட்க விரும்பாத தெய்வானை, கடலையை வாங்கி, வறுத்து சனம் கூடும் இடங்களுக்கு கொண்டு சென்று விற்று வந்தார்.
தங்கையும் தனது நிலையை அடைந்த போது அவ தவித்துத் தான் போனா. உத்தியோகத்தரின் மனைவியாக வீட்டை விட்டு அதிகம் வெளிக்கிடாமல் தனது மகளின் வாழ்வே முக்கியம் என்று வாழ்ந்த சின்னத்தங்கச்சி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போனா.
தெய்வானை தங்கையிடம், “பிள்ளை எங்கடை நிலை இப்படி ஆகி போச்சுது. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேணும். பொய் களவு இல்லாமல் எந்த வேலையையும் செய்யலாம். நீ காலமைகளில் இடியப்பம், அப்பம், பிட்டு எதெண்டாலும் செய்து தா. நான் முஸ்லிம் தெருவில் கொண்டு போய் வித்து தாறன்” என்றா.
சொன்னது போல தங்கை செய்து கொடுக்கும் பலகாரங்களை முஸ்லிம் வீதிக்கு தலையில் சுமந்து சென்று வித்து கொடுத்தா. பெரும்பாலான முஸ்லிம் ஆண்கள் வர்த்தகர்களானபடியால், பெண்கள் காலை உணவை வேண்டுவது வழக்கம்.
தெய்வானை பகலில் வறுத்து வைக்கும் கடலையை மாலை நேரத்தில், முத்தவெளியில் இருந்த முனியப்பர் கோவிலின் அருகாமையில் வைத்து விற்பார். கோவிலுக்கு வரும் பக்தர்களும், றீகல் தியேட்டரில் படம் பார்க்க வருபவர்களும், முத்தவெளியில் விளையாட வருபவர்களும், மாநகர சபை ஊழியர்களும் அவரிடம் கடலையை வாங்குவார்கள்.
இருவரும் தங்களது வேலையைச் செய்து கொண்டு, இரவில் சந்தையில் பாக்கு விற்பவர் கொண்டு வந்து தரும் பாக்குகளை, ஒவ்வொரு பெரிய பாக்கு வெட்டியை வைத்து, நித்திரை வரும் வரை வெட்டிக்கொண்டே இருப்பார்கள். பாக்கு வெட்டி கொடுப்பதன் மூலமும் சிறு தொகை பணத்தை பெற்றார்கள்.
கமலாவும் தவமும் கவலை தெரியாமல் தமது படிப்பை தொடர்ந்தார்கள். “தவத்திற்கு ஒரு சைக்கிளை வாங்கிக் கொடு. குதிரை வண்டிலில் அனுப்ப காசு எங்காலை” என்று உறவினர்கள் தடுத்த போதும் தனது உழைப்பினால் வந்த பணத்தையும், கணவன் உழைத்து அனுப்பிய காசில் இருந்த சேமிப்பையும் வைத்துக் கொண்டு சின்னத்தங்கச்சி தொடர்ந்து தனது மகளை குதிரை வண்டிலில் தான் அனுப்பி வந்தார்.
இரண்டு சகோதரிகளும் மிகவும் ஒற்றுமையாக, யாழ்ப்பாணத்தில் மண் சுவர் வைத்து, கிடுகினால் வேய்ந்த வாடகை வீட்டில் வாழ்ந்தார்கள். தெய்வானை நயினாதீவு திருவிழா, நல்லூர் திருவிழா வரும் நாட்களில் கடலை வறுப்பதற்கும் பொதி செய்வதற்கும் இரண்டு பெண்களை உதவிக்கு வைத்துக் கொள்வார். திருவிழா நாட்களில் ஓரளவு பெரிய தொகை வருமானமாக வரும்.
மகாலிங்கம் யாழ்ப்பாணத்தில் படித்த போது பெரிய தாயையும் சிறிய தாயையும் தங்கச்சிமாரையும் போய் பார்த்து வருவார். அவர்களும் தாய்மாருக்கு ஒவ்வொரு பிள்ளைகள். மகாலிங்கமும் வீட்டில் ஒரே பிள்ளை. அதனால் கூடப்பிறக்காவிட்டாலும் தங்கைமார் மேல் அளவற்ற அன்பை வைத்திருந்தார்.
அவர்களும் “அண்ணை, அண்ணை” என்று உயிரை விடுவார்கள். அதனால் பாடசாலை விடுமுறை நாட்களிலும், பாலைப்பழ, ஈச்சம்பழக் காலங்களிலும், திருவிழா காலங்களிலும் பெரிய பரந்தனுக்கு வந்து விடுவார்கள். கமலாவும் தவமும் வந்து விட்டார்கள் என்பதை அறிந்ததும் மீசாலையிலிருந்து பொன்னம்மாவின் தங்கை நல்லம்மாவும் குஞ்சரின் வானில் ஏறி வந்து விடுவா.
கமலாவும் தவமும் பொன்னம்மாவை “மச்சாள்”, “மச்சாள்” என்று சுற்றி வருவார்கள். பகல் நேரங்களில் மீனாட்சியும் தியாகர் வயலுக்கு வந்து விட, தியாகர்வயல் கலகலத்து விடும்.
பொன்னம்மா விருந்தினர்களுக்கு விதம் விதமாக சமைத்துக் கொடுப்பா. பொன்னம்மாவிற்கு சமையலென்பது மிகவும் இலகுவானதும் விருப்பமானதுமாகும்.
தம்பியாரான வேலுப்பிள்ளை தேங்காய் துருவி, பால் பிழிந்து, மரக்கறிகளையும் வெட்டிக் கொடுப்பான். மகாலிங்கம் தியாகர்வயலில் வழமைப்படி விறகுகளை வெட்டி அடுக்கி வைத்திருப்பார்.
மகாலிங்கம் வண்டில் பூட்டி எல்லாரையும் பாலைப்பழம் பிடுங்க காட்டிற்கு கூட்டிச் செல்வார். ஒரு வண்டில் காணாது என்று நல்லையர் தனது வண்டிலையும் கொண்டு வந்து விடுவார். பெரியபரந்தனைச் சேர்ந்த குஞ்சு குருமான் எல்லாம் வண்டிலில் ஏறி விடுவார்கள்.
பொன்னம்மா பிள்ளைகள் தண்ணீர் கேட்பார்கள் என்று இரண்டு மூன்று போத்தல்களில் தண்ணீர் கொண்டு வருவா. அவ ஏறுவதற்கு இடமிருக்காது, மகாலிங்கம் “பொன்னம்மா, இங்கை வாரும். முன்பக்கத்திலை ஏறலாம்” என்று கூப்பிடுவார். இடது பக்கத்திலை சிவப்பு காளை பூட்டியிருக்கும். அது சில வேளைகளில் பின்னம் காலால் உதைத்துவிடும் அதனால், பொன்னம்மா சிவப்புக்காளையின் பக்கம் போக மாட்டா. வலது பக்கம் போவா. வலது பக்கத்தில் மயிலைக்காளை (மயிலின் நிறமுள்ள காளை) பூட்டியிருக்கும். மயிலை சாதுவானது.
பொன்னம்மா அதை கைகளால் தள்ளி விட்டுப் போய் முன்பக்கம் மகாலிங்கத்தின் பக்கத்தில் ஏறி இருப்பா. மகாலிங்கம் வேட்டியை மடிச்சுக்கட்டி, வெறும் மேலுடன், சால்வையை தலைப்பாகையாக கட்டி சிவப்புக்காளையின் வாலை நோகாமல் முறுக்கி விடுவார். அது ஓடத்தொடங்க மயிலையும் அதே வேகத்தில் ஓடும்.
பொன்னம்மாவும் மகாலிங்கமும் அருகருகே இருந்து போவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். நல்லையர் தனது வண்டிலை பின்னால் ஓட்டி வருவார். அவருடன் அவர் மனைவியும் வருவா.
பிள்ளைகள் போதும் போதும் என்னும் அளவிற்கு பாலைப்பழங்களை பிடுங்கி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு எட்டக்கூடிய அளவிற்கு கிளைகள் இருக்கும். அதனால் “இதை விட இது ருசி கூட”, “இல்லை, இல்லை இது தான் ருசி” என்று ஓடி ஓடி பழங்களைப் பிடுங்குவார்கள்.
சிறிது நேரத்தில் பிள்ளைகளின் வாயெல்லாம் பாலைப்பழ பால் ஒட்டி கொண்டிருக்கும். பொன்னம்மா தயாராக கொண்டு வந்திருந்த தேங்காய் எண்ணையை ஒவ்வொருவரின் கைகளிலும் சிறிது ஊற்றி “வாயில் எண்ணைய நன்கு பூசி தடவி விடுங்கள் பால் கரைந்து போய்விடும்” என்று சொல்லுவா. ஆசை தீர பாலைப்பழங்களை சாப்பிட்டு விட்டு, கொஞ்சம் பழங்களுடன் வீடு திரும்புவார்கள்.
தவமும் கமலாவும் “மச்சாள் இஞ்சை மூன்றாம் வகுப்பில் படிக்கிற பத்மநாதனுக்கு இன்னும் A, B, C, D படிப்பிக்கேல்லை. யாழ்ப்பாணத்திலை மூன்றாம் வகுப்பிலை ‘இங்கிலீஷ்’ படிப்பிக்க தொடங்கி விடுவினம்.” என்றார்கள்.
அதற்கு பொன்னம்மா “இஞ்சை படிப்பிக்கிற இரண்டு பேரும் நல்ல கெட்டிக்கார ஆட்கள். பிள்ளைகளை அக்கறையாக படிப்பிக்கினம். எட்டு வகுப்புகளுக்கு இரண்டு ஆசிரியர்கள் படிப்பிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” என்று கேட்டா.
அதற்கு அவர்கள் “மச்சாள் நாங்கள் வாத்திமாரை குறை சொல்லேல்லை. அவர்கள் நல்லாய் தான் படிப்பிக்கிறார்கள். நீங்கள் பத்மநாதனை எங்களுடன் கொண்டு வந்து விடுங்கள். நாங்கள் கவனமாக பார்ப்பம். அண்ணையும் யாழ்ப்பாணத்திலை படிச்சதாலை தானே இப்ப விதானையாராய் இருக்கிறார்.” என்று உசுப்பேத்தி விட்டார்கள். பொன்னம்மாவும் அடுத்த வருசம் மகனை யாழ்ப்பாணத்தில் படிக்க விட்டால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தா.
மீனாட்சியின் ஒரு செய்கையாலும் பரமரின் ஒரு செய்கையாலும் மகாலிங்கத்தின் இரண்டு பொடியங்களும் கஷ்டப்படப் போறாங்கள் என்று ஒருத்தரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
மீனாட்சி பேரப்பிள்ளைகள் பிறந்ததும் அவர்களுக்கு உடுப்பு வாங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டா. மகாலிங்கமோ பொன்னம்மாவோ வாங்கினால் அவவுக்கு கோபம் வந்து விடும். அதனால் மகாலிங்கமும் பொன்னம்மாவும் அதில் தலையிடுவதில்லை.
மீனாட்சி எப்பொழுதும் தேவையான அளவை விட கொஞ்சம் கூடத்துணிகளை வாங்குவா. சந்தையில் தையல் மெசினை வைத்து தைக்கும் ‘ரெயிலரிடம்’ (உடுப்பு தைப்பவர்) “இஞ்சை பார், இதிலை கூட துணி இருக்குது. பொடியன்களுக்கு வளரும் வயசு. வளர வளர போடக் கூடியதாக பெரிசாய் தைக்க வேணும்.” என்று கறாராக சொல்லி விடுவா. ரெயிலரும் பொடியங்களின் உயரம் அகலங்களை ஒரு நாடாவை வைத்து இப்படியும் அப்படியும் அளப்பார். மீனாட்சியின் நிபந்தனை தெரிந்தும் ஏன் தான் அளக்கிறாரோ? அவருக்குத் தான் வெளிச்சம்.
தைத்த பிறகு போட்டு பார்த்தால் கால்சட்டை முழங்காலுக்கு கீழே ஒரு சாண் நீளத்திற்கு தொங்கும். அதே நேரத்தில் கால்சட்டைகள் இடுப்பில் நிக்காமல் வழுக்கி வழுக்கி கீழே விழும். பிறகு இறுக்கமாக பிடித்துக் கொண்டு ஊசி குத்தி விட வேணும். முழுக்கை சேர்ட் கையை விட நீளமாய்த் தொங்கும். கையை மடித்து விடாமல் போட முடியாது. பொடியன்கள் வளருவதற்கிடையில் அவை நைந்து கிழிந்து விடும்.
மகள் மட்டும் தப்பி விட்டாள். பொன்னம்மாவிற்கு தையல் தெரியும் என்ற படியால் மகாலிங்கம் ஒரு ‘சிங்கர்’ தையல் மெஷினை வாங்கியிருந்தார். பொன்னம்மா மீனாட்சியிடம் “மாமி, தையல் மெஷினுமிருக்கு. எனக்கும் தைக்க தெரியும். பொம்பிளைப் பிள்ளைகளின்ரை உடுப்பை நான் தைப்பன் தானே. ஏன் காசை ரெயிலருக்கு வீணாய் கொடுப்பான்” என்று சொல்லி துணியை மாமியாரிடமிருந்து வாங்கி மகளுக்கு சரியான அளவில் சட்டை தைத்து கொடுப்பா. பொடியன்கள் தான் பாவம், தொள தொளவென்று போட்டுக் கொண்டு திரிவார்கள்.
பரமர் சில வேளைகளில் ஊரிலிருந்து வருவதற்கு ஒரு மாதம் சென்று விடும். ஊர் பொடியன்களுக்கு தலை மயிர் வளர்ந்து காதுகளை மூடி விடும். பெண்கள் பரமரிடம் “என்ன பரமர், ஒழுங்காய் வாறீரில்லை. தலை மயிர் காடாய் வளர்ந்து போய் விட்டது” என்று சொல்லி குறைபடுவார்கள்.
பெண்களின் முறைப்பாட்டிலிருந்து தப்ப பரமர் ஒரு புதிய யுக்தியை கையாண்டார். எல்லாப் பொடியன்களுக்கும் தான் புதிதாய் வாங்கிய மெஷின் என்னும் கருவியால் காதிலிருந்து ஒரு அங்குல உயரத்துக்கு சுற்றிவர வெட்டி, அந்த இடைவெளியை கத்தியால் வழித்து விடுவார். இப்போது பொடியன்களின் தலையை பார்த்தால், தலையில் ஒரு கறுப்பு சட்டியால் மூடியது போலிருக்கும். தனது பரிசோதனை பொடியன்களில் சரி வந்ததால் பரமர் பெரியவர்களுக்கும் அதே முறையை பிரயோகித்தார்.
இப்போது பெண்களால் பரமரில் பிழை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் தலை மயிர் வெட்டிய முறையைப் பார்த்து மற்றவர்கள் எளிதில் மூன்று கிராமத்து ஆண்களை இனம் கண்டு விடுவார்கள்.
பரமர் புதிதாக வந்த மெஷின் என்ற கருவியை ஒழுங்காக கழுவி எண்ணை பூசி வைப்பதில்லை. அதனால் அது மயிரை வெட்டுவதற்குப் பதிலாக பிடித்து இழுத்து பிடுங்கும். பொடியன்கள் வேதனையில் கத்துவார்கள். தாய்மார் தலை மயிர் வெட்டக் கள்ளப்படுகிறார்கள் என்று தான் நினைத்தார்களே தவிர, அந்த வேதனையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
பரமரைக் கண்டதும் பொடியன்களெல்லாம் ஓடி ஒழிப்பார்கள். ஆனால் பரமர் ஒவ்வொருவரையும் காத்திருந்து பிடித்து தலை மயிரை வெட்டி விடுவார்.
கூடிய எண்ணிக்கையான உறுப்பினர்களின் தலை மயிரை வெட்டினால் தான் அவரால் போகத்துக்கு போகம் நெல்லை கூடுதலாக பேரம் பேசி வாங்க முடியும்.
பரமரிடம் பயப்பட வேண்டிய இன்னொரு விசயம் இருந்தது. அவரது வழிக்கும் கத்தி மிகவும் கூராகவே எப்போதும் இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் வழிக்க முன்னர் அவர் நீளமான தோலால் ஆன ஒரு நாடாவில் கத்தியை மேலும் கீழுமாக தேய்த்து இன்னும் கூராக்கி கொள்ளுவார். பரமர் கத்தியை மேலும் கூராக்குவதைக் கண்டு சிறுவர்களுக்கெல்லாம் பயத்தில் முழி பிதுங்கும்.
(பரமரின் கத்தி பற்றிய சரித்திரம் மேலும் தொடரும்)
.
தொடரும்..
.
.
.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
.
ஓவியம் : இந்து பரா – கனடா
.
முன்னைய பகுதிகள்:
பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/
பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/
பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/
பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/
பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/
பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/
பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/
பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/
பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/
பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/
பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/
பகுதி 12 – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/
பகுதி 13 – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/
பகுதி 14 – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/
பகுதி 15 – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/
பகுதி 16 – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/
பகுதி 17 – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/
பகுதி 18 – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/
பகுதி 19 – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/
பகுதி 20 – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/
பகுதி 21 – https://vanakkamlondon.com/stories/2021/01/99913/
பகுதி 22 – https://vanakkamlondon.com/stories/2021/02/100718/
பகுதி 23 – https://vanakkamlondon.com/stories/2021/02/101415/
பகுதி 24 – https://vanakkamlondon.com/stories/2021/02/101804/
பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/
பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/
பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/
பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/
பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/
பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/
பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/
பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/
பகுதி 33 – https://vanakkamlondon.com/stories/2021/04/109047/
பகுதி 34 – https://vanakkamlondon.com/stories/2021/04/109845/
பகுதி 35 – https://vanakkamlondon.com/stories/2021/05/110730/