இரணைமடுக்குளம்
1902 ஆம் ஆண்டு நீர்ப்பாசன பகுதி பணிப்பாளர் திரு. H.T.S. வாட் (H.T.S.Ward) வட இலங்கையில் கனகராயன் ஆற்றை மறித்து குளம் ஒன்று கட்டுவதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இரண்டு மடுக்களை (குளங்களை) இணைத்து கட்டியதால் இரணைமடுக் குளம் என்று பெயரிடப்பட்டது. இரணைமடு குளத்தில் 26 அடி (8 மீற்றர்) உயரத்துக்கு நீரை சேமிக்காலாம் என்றும் 227 சதுர மைல் (588 சதுர கிலோமீற்றர்) வயல்களுக்கு தண்ணீர் வழங்கலாம் என்றும் கணிக்கப்பட்டது.
1902 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இரணைமடுக்குள கட்டுமானப்பணிகள் முதலாம் உலக மகா யுத்தம் (World War- 1) காரணமாக தாமதமாகி 1921 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குளம் நிரம்பி, தண்ணீர் பாயத்தொடங்கியது. அந்த நாளில் இரணைமடுக்குளப் பகுதி உல்லாசப் பயணிகள் வருவதற்கு ஏற்ற இடமாக கருதப்பட்டது. (It was ensured as a popular tourist destination)
இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டு வேலைகளுக்கு ஆளணியை வன்னியிலோ குடாநாட்டிலோ பெற முடியவில்லை. அதனால் அணைகள் கட்டுவதில் அனுபவம் உள்ளவர்களை இந்தியாவின் தமிழ்நாட்டின் எல்லையிலிருந்த ஒட்டாரம் என்ற ஊரிலிருந்து குடும்பங்களாக அழைத்து வந்தனர். அவர்களை நாலாம் வாய்க்காலில் காணிகளை கொடுத்து குடியமர்த்தினர்.
1951 ஆம் ஆண்டு குளக்கட்டு 30 அடி (9 மீற்றர்) உயர தண்ணீரை கொள்ளக்கூடியதாக உயர்த்தப்பட்டது. அப்போது குளத்தின் நீர் கொள்ளளவு 71,000 ஏக்கர் அடியாகவும் (87,577,210 கனமீற்றர்) இருந்தது. தொடர்ந்து உயர்த்தப்பட்ட குளக்கட்டு 32 அடி உயரத் தண்ணீரை (10 மீற்றர்) கொள்ளக்கூடியதாகவும் 82,000 ஏக்கர் அடி (101,145,511 கனமீற்றர்) தண்ணீரை கொள்ளக்கடியதாகவும் மாறியது. அண்மையில் பெரிய அளவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பொன்னம்மா தலைமையாசிரியர் வைத்தீஸ்வரக்குருக்களிடம் “நாதனுக்கு ஆங்கிலம் (English) படிப்பிக்க ஏதும் வழியிருக்கா?” என்று கேட்டா.
அதற்கு அவர் “பிள்ளை நான் கல்வி கந்தோருக்கு போகும் போது ஒவ்வொரு முறையும் கேட்கிறனான். பல முறை கடிதமும் எழுதியிருக்கிறன். அவங்கள் ஏதேதோ காரணங்கள் சொல்லி தட்டி கழிக்கிறான்கள்.” என்றார்.
பொன்னம்மா, மகாலிங்கத்திடம் “நாங்கள் மூத்தவனை யாழ்ப்பாணத்தில் விட்டு படிப்பிச்சாலென்ன? தவமும் கமலாவும் அவனைக் கவனமாய் பார்ப்பினம்” என்றா.
அதற்கு மகாலிங்கம் “எனக்கும் அந்த யோசனை இருக்குது. அவன் சின்னனாய் இருக்கிறான். தனிய போய் சமாளிப்பானோ என்று கவலையாய் இருக்குது. அடுத்த வருசம் சேர்த்தால் என்ன?” என்றார்.
பொன்னம்மா “யாழ்ப்பாணத்திலை மூன்றாம் வகுப்பிலையே ‘இங்கிலிஸ்’ படிப்பிக்க தொடங்குவினமாம். இவன் இங்கை நாலாம் வகுப்பிலையும் ‘இங்கிலிஸ்’ படிக்காமல் ஐந்தாம் வகுப்பிலை போய் படிக்க கஸ்டப்படுவான். எனக்கும் அவனை விட்டிட்டு இருக்கேலாது தான். என்ன செய்யிறது.. பிள்ளை படிச்சு நல்லாய் வர வேணும் தானே” என்றா.
மகாலிங்கமும் “சின்னம்மாவிற்கும் இப்ப வயது போய் விட்டது. பெரியாச்சியுடன் விடுவது தான் சரி” என்று கூறி சம்மதித்தார்.
கொட்டடியில் வசிப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை நமசிவாய வித்தியாலயத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பிப்பார்கள். பின்னர் வைத்தீஸ்வரா வித்தியாலயம், இந்துக்கல்லூரி, மத்திய கல்லூரி, வேம்படிமகளிர் கல்லூரி போன்ற பாடசாலைகளில் சேர்த்து விடுவார்கள்.
தவமும் கமலாவும் ஐந்தாம் வகுப்பு வரை நமசிவாய வித்தியாலயத்தில் தான் படித்தார்கள். பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பு வரை இருந்தது. ஆறாம் வகுப்பிற்கு மேல் குறைந்த எண்ணிக்கையான பிள்ளைகளே படித்தார்கள்.
1955 ஆம் ஆண்டு மகாலிங்கம் நாதனைக் கொண்டு போய் யாழ்ப்பாணத்தில் தனது பெரிய தாயார் வீட்டிற்கு அருகில் இருக்கும் ‘கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில்’ சேர்த்து விட்டார்.
அப்போது ‘நமசிவாய வித்தியாலயத்தில்’ சாவகச்சேரியைச் சேர்ந்த திரு. படைவீரசிங்கம் என்பவர் தலைமையாசிரியராக இருந்தார். அவரை மகாலிங்கத்திற்கு ஏற்கனவே தெரியும்.
சத்திரம் சந்தியில் சத்திரத்துக்கு குறுக்காக எதிரில் தேங்காய் எண்ணை ஊற்றும் பெரிய மில் (Mill) ஒன்று இருந்தது. அதன் உரிமையாளர்கள் சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்காக யா/நமசிவாய வித்தியாலயத்தை தொடங்கி, அரசினர் எடுக்கும் வரை நடத்தினார்கள்.
பாடசாலையின் பிரதான வாசல், ஆஸ்பத்திரி வீதியில் வில்லூன்றி பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் இருந்தது. பாடசாலைக்கு பின்புறமாக சீனிவாசகம் வீதியிலும் ஒரு சிறிய பாதை இருந்தது. அதை ஐந்து மணிக்கு பூட்டி விடுவார்கள்.
நாதனை பாடசாலைக்கு கூட்டிச் செல்லும் பொறுப்பை சின்னாச்சி ஏற்றா. பிள்ளைகள் தெய்வானையை பெரியாச்சி என்றும், சின்னத்தங்கச்சியை சின்னாச்சி என்றும் அழைத்தார்கள்.
மகாலிங்கமும் பொன்னம்மாவும் ஒரு வெள்ளிக்கிழமை மூன்று பிள்ளைகளுடனும் போய் சனி, ஞாயிறு கொட்டடி வீட்டில் தங்கி நின்றார்கள். திங்கள் காலை நாதனை பாடசாலைக்கு வெளிக்கிடுத்தி, மகாலிங்கமும் பொன்னம்மாவும் அவனை கட்டியணைத்து முத்தமிட்டனர்.
மகாலிங்கம் மகனிடம் “தம்பி உன்னை சின்னாச்சி கவனமாக பள்ளிக்கூடத்துக்கு கூட்டிப்போய், பள்ளிக்கூடம் முடிய கூட்டி வருவா. நீ கவனமாகப் படிக்கவேண்டும்” என்று சொல்ல, நாதன் கண்களில் கண்ணீர் நிரம்ப “ஓம்” என்று தலையாட்டினான். மகனிடம் சொல்லி விட்டு, அவர்கள் பரந்தன் போக காரில் ஏறி வெளிக்கிட்டார்கள்.
கார் வெளிக்கிட நாதன் கதறி அழத் தொடங்கினான். மகாலிங்கம் கண்களை கண்ணீர் மறைக்க துடைத்து துடைத்து காரை ஓட்டினார். தன்னை கட்டுப்படுத்தி வைத்திருந்த, பொன்னம்மா நாதன் கண்களிலிருந்து மறைய “நான் என்ரை பிள்ளையை விட்டிட்டு எப்படி இருக்கப் போறன்” என்று சத்தமிட்டு அழ, மற்ற இரண்டு பிள்ளைகளும் சேர்ந்து அழுதார்கள்.
மகாலிங்கமும் பொன்னம்மாவும் நாபன், மணியை (பத்மாசனியை மணி என்றே அழைத்தார்கள்) கூட்டிக்கொண்டு இரண்டு கிழமைகளுக்கொரு முறை நாதனைப் பார்க்க கொட்டடிக்குப் போவார்கள். போகும் போது அரிசி, அரிசி மா, தூள், உப்பு, இறைச்சி வத்தல் முதலியவற்றை கொண்டு போவார்கள். கட்டாடியார் வெளுத்து, பெட்டி போட்டு (Iron பண்ணி) தாற நாதனின் உடுப்புகளை கொண்டு போய் கொடுத்து விட்டு, நாதன் இரண்டு கிழமைகளுக்கு போட்ட உடுப்புகளை கொண்டு வருவார்கள்.
நாதனின் அழுகை ஓய்ந்த பாடில்லை. அதனால் மகாலிங்கம் யாழ்ப்பாணத்தை சொந்த ஊராக கொண்ட ஓவசியரிடம் நாதனைப் பார்த்து வருமாறு சொல்லி அனுப்புவார். ஓவசியரும் கொட்டடிக்குப் போய் நாதனுக்கு ‘சொக்கலேற்’ (Chocolate) வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்துவார்.
ஒரு நாள் “என்னை இப்பவே ஐயாட்டை கொண்டு போய் விடுங்கோ” என்று நாதன் அழ, அவர் அவனை சமாளிக்க சுற்றிவர விளிம்புள்ள, நாடியில் இழுத்துக்கொழுவிற தொப்பி ஒன்றை வாங்கி வந்து கொடுத்தார். தொப்பியின் மேல் உள்ள ஆசையால் நாதனின் அழுகை நின்றது.
மகாலிங்கத்தின் விதானை வேலை சுமுகமாக சென்று கொண்டிருந்தது. முன்பு கமக்காரனாக இருந்த போது இருந்த மாதிரி இப்போதும் முகத்தில் மயிர் வளர விட்டிட்டு இருக்க முடியாது. இரண்டு நாள், மூன்று நாளுக்கொரு முறை முகம் வழிக்க வேண்டும் (Shave பண்ணுதல்).
மகாலிங்கம் தனக்கென ஒரு பிளேட் பூட்டி வழிக்கும் கருவியால் (Razor) வழித்து கொள்வார். ஆனால் திருப்தி இருக்காது. அதனால் பரமரைக் கிழமைக்கொரு முறை வரும்படி கேட்டுக் கொண்டார். பரமரும் சந்தோசமாக வந்து, சவர்க்காரத்தை பூசிக்கொண்டு வந்து இருக்கும் விதானையாருக்கு முகம் வழிக்கத் தொடங்குவார்.
வழமை போல மிகவும் கூராக இருக்கும் கத்தியை பட்டையில் மேலும் கீழும் தடவி இன்னும் கூராக்கி கொண்டு வழிக்க ஆரம்பிப்பார். வழிக்கும் பொழுது விதானையாருடன் பல கதைகளையும் கதைப்பார். விதானையாரால் பரமர் கூரான கத்தியால் வழிக்கும்போது ஒன்றும் கதைக்க முடியாது. “உம்”, “உம்” என்று மட்டும் சொல்லுவார். கதைத்தால் கத்தி பதம் பார்த்து விடும்.
போகத்துக்கு போகம் வழங்கும் நெல்லின் அளவை விதானையார் கூட்டித் தந்தால், ஏனையவர்களும் கூட்டித் தருவார்கள் என்பது பராமருக்குத் தெரியும். முகம் வழித்துக் கொண்டு வந்து, விதானையாரின் தலையை நிமிர்த்தி, கழுத்தடியை கத்தியால் வழிக்கும் போது தொண்டைக்குழிக்கு அண்மையில் கத்தியை நிறுத்தி “ஐயா சாமானெல்லாம் விலை ஏறியிட்டுது. போகத்துக்கு போகம் தரும் நெல்லைக் கொஞ்சம் கூட்டிக் தாருங்கோ” என்று கேட்டார். விதானையாரால் அந்த சந்தர்ப்பத்திலும் “உம்” என்று முனகத்தானே முடியும். பரமர் மிகவும் சந்தோசப்பட்டார்.
இரண்டு வருடங்களும் நாதன் ஒழுங்காகப் படித்தான். இரவு ஒன்பது மணி வரை படிக்கும் படி கமலாவும் தவமும் கண்டிப்பாக இருப்பார்கள். மூன்றாம் வகுப்பில் படிக்காத ‘இங்கிலிஸ்’ பாடத்தையும் நாலாம் வகுப்பு ‘இங்கிலிஸ்’ பாடத்தோடு படிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டான். அப்போது இந்தியாவிலிருந்து வந்த ‘டீபக் றீடர்’ (Deepak Reader) 1, 2, 3…. என்ற புத்தகங்களை ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு பகுதியாக கற்பிப்பார்கள்.
விளையாட அதிகம் விருப்பமுள்ள நாதன் ஒரு நாள் நேரம் போவது தெரியாமல் நண்பர்களுடன் விளையாடினான். ஐந்து மணிக்கு சீனிவாசகம் வீதி கேற் மூடப்பட்டு விட்டது. அவன் ஆஸ்பத்திரி வீதியைச்சுற்றி வந்ததால் மேலும் நேரம் போய் விட்டது. தாங்கள் பொறுப்பெடுத்த பிள்ளையை காணவில்லை என்று தவமும் கமலாவும் ஆச்சிமாரும் பயந்து போய் விட்டனர். ஏனைய பிள்ளைகளை ஓடி ஓடி விசாரித்தனர்.
ஒருவரும் தாங்கள் நாதனைக் காணவில்லை என்றனர். அவர்கள் பதை பதைத்து தேட நாதன் நண்பர்களுடன் ஆடி ஆடி நடந்து வந்தான்.
அவனைக் கண்ட நிம்மதியில் அவர்கள் ஓடிச் சென்று மாறி மாறி கட்டி அணைத்து “தம்பி உன்னைக் காணாமல் நாங்கள் நல்லாய் பயந்திட்டம்” என்றார்கள். அவர்களின் அன்பை கண்ட நாதன் இனிமேல் விளையாடி மினைக்கெடுவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டான்.
நாபனும் மணியும் தொடர்ந்து பெரிய பரந்தனில் படித்தனர். லீவுக்கு வரும் தமயன் சப்பாத்து அணிந்து போய் வருவதைக் கண்டதாலும், அவன் சொல்லும் கதைகளை கேட்டதாலும் நாபனுக்கு தானும் யாழ்ப்பாணம் போய் படித்தாலென்ன என்ற எண்ணம் ஏற்பட்டது.
பொன்னம்மாவிடம் “அம்மா, அவர் யாழ்ப்பாணத்திலை படிக்க, நான் மட்டும் இங்கை படிக்க வேணுமோ?” என்று கேட்டு ஆய்க்கினை செய்தான். பொன்னம்மா “பொறுடா, நாலாம் வகுப்பிலை நீயும் யாழ்ப்பாணத்திலை போய் படிக்கலாம்” என்று சொல்லி சமாதானப் படுத்துவா. யாழ்ப்பாணத்தில் படிப்பது தான் நினைப்பது போல சிறப்பானது என்றால், ‘ஒவ்வொரு முறையும் லீவு முடிந்து போகும் போது, அண்ணன் ஏன் அழுகிறான்’ என்று நாபன் சிந்திக்கவில்லை.
1957 ஆம் ஆண்டு மகாலிங்கம் நாபனை நமசிவாய வித்தியாலயத்தில் சேர்க்க கூட்டிச் சென்றார். தலைமையாசிரியர் அவனை நாலாம் வகுப்பில் சேர்க்க ஆயத்தப்படுத்தினார். வன்னியிருந்து வந்திருந்த, சிறிய தோற்றமுள்ள, நாபனது உடுப்பையும் தலைமயிர் வெட்டையும் பார்த்த சிரேஷ்ட உதவியாசிரியர் “ஐயா, இவனை மூன்றாம் வகுப்பில் ஒரு தவணை விட்டுப் பார்ப்பம். நல்ல புள்ளிகள் எடுத்தானெண்டால் இரண்டாம் தவணை நாலாம் வகுப்புக்கு ஏற்றி விடுவோம்” என்றார்.
நாபன் மூன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டான். அவனுக்கு ஒரு வகுப்பு இறக்கி விட்டார்கள் என்ற கவலை இல்லை. யாழ்ப்பாணத்தில் படிக்கப்போறன் என்று சந்தோசப்பட்டான். மூன்றாம் வகுப்பில் ‘இங்கிலிஸ்’ கற்பிக்க தொடங்கியதால் அவன் கவனமாக படித்தான். அவனுக்கு மூன்றாம் வகுப்பில் நல்ல சினேகிதர்கள் கிடைத்தார்கள்.
ஏனைய பாடங்களை அவன் முன்பு படித்தது வைத்தீஸ்வரக்குருக்களிடம். அவர் அவனை நாலாம் வகுப்பு தரத்திற்கு படிப்பித்திருந்தார். தவணைப் பரீட்சை வந்தது. நாபன் ‘இங்கிலிஸ் ‘ பாடத்தில் எண்பது புள்ளிகளும் ஏனைய பாடங்களில் நூற்றுக்கு நூறும் எடுத்திருந்தான்.
அடுத்த தவணை அவன் போய் வழமை போல மூன்றாம் வகுப்பில் போய் இருந்தான். தலைமை ஆசிரியர் படைவீரசிங்கம் அவனிடம் போய் “இங்கை ஏன் இருக்கிறாய்” என்று சொல்லி கையைப் பிடித்து கூட்டிச் சென்று நாலாம் வகுப்பில் விட்டார். பாடசாலையில் ஒரு பெரிய மண்டபத்தின் இரு கரையிலுமே மூன்றாம் வகுப்பு தொடக்கம் ஒன்பதாம் வகுப்பு வரை இருந்தன.
தலைமை ஆசிரியர் நாபனை கூட்டிச் சென்று நாலாம் வகுப்பில் விட்டதை எல்லா வகுப்பு ஆசிரியர்களும் மாணவர்களும் பார்த்தார்கள். ஏற்கனவே நாதன் வகுப்பில் முதலாம் பிள்ளையாக வருவது தெரிந்ததால், வன்னியிலும் நல்ல படிப்பு இருக்குது என்று எல்லாரும் நினைத்தார்கள். தன் மூன்றாம் வகுப்பு சினேகிதர்களை விட்டு வந்தது நாபனுக்கு கவலையாக இருந்தது.
வீட்டையும் பாடசாலையையும் நாபனுக்கு நன்கு பிடித்து விட்டது. பிடிக்காத விசயங்கள் பல யாழ்ப்பாணத்தில் இருந்தன. காலைக்கடன் கழித்தல் அவன் எதிர்கொண்ட முதலாவது பிரச்சினை. அவர்கள் இருந்தது என்னவோ தென்னை மரங்களும், புன்னை மரங்களும், இலுப்பை மரங்களும், இலந்தை மரங்களும் நிறைந்த ஒரு பெரிய காணியில் தான்.
காணி உரிமையாளர் ஒரு ஆழமான, சுற்றளவு கூடிய பெரிய கிணற்றை வளவின் மையத்தில் கட்டியிருந்தார். கிணற்றை சுற்றி ஐந்து கொட்டில் வீடுகளை கட்டி ஐந்து குடும்பங்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். ஆனால் ஐந்து குடும்பங்களுக்கும் ஒரே ஒரு வாளிக்கக்கூசு தான், அதற்குள் போவது நாபனுக்கு நரக லோகத்துக்குள் போவது போல இருக்கும். காணி உரிமையாளர் மாநகர சபைக்கு காசு கட்டி காலையும் மாலையும் அதனைச் சுத்திகரிக்கும் ஒழுங்கு செய்திருந்தார்.
சரியான மனிதராக இருந்தால் ஐந்து மலசலகூடங்களை கட்டியிருக்க வேணும். நாபன் பரந்த காட்டில் காற்றோட்டமாக ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பத்தை மறைவில் காலைக்கடன் கழிக்கப்போய், பாய்ந்தோடும் காட்டாற்றில் கை கால் அலம்பி பழக்கப்பட்டவன். அடைத்த சிறிய அறைக்குள் வாளியைப் பயன்படுத்த திணறித்தான் போனான். இது தான் யாழ்ப்பாணமா? என்று ஏங்கிப் போனான்.
பாடசாலை செல்லும் போது சிவன்பண்ணை வீதியால் மனிதர்கள் மனிதக்கழிவுகளை ஒருவர் பின் ஒருவராக, “கட, கட” எனச் சத்தம் போடும் வண்டில்களில் உருட்டிச் செல்வதைக் கண்டு “இதென்ன கொடுமையடா” என்று நடுங்கிப் போனான். அவர்கள் வண்டில்களை தள்ளிக்கொண்டு கிட்ட வர நாத்தம் குடலைப் பிடுங்கும்.
பாடசாலை செல்லும் வளர்ந்த மாணவிகள் நாத்தம் தாங்காமல் மூக்கை பொத்திப்பிடித்து கொள்வார்கள். தாங்கள் இவ்வளவு கஷ்டமான வேலையை செய்து பிழைக்க வேண்டியிருக்கிறதே என்று ஏற்கனவே கவலை கொண்டிருந்த அவர்கள், மூக்கைப் பொத்திய மாணவிகளைப் பார்த்து “இந்த வண்டில்லை உங்கடை கழிவும் தான் இருக்கு” என்று ஏளனமாக கூறுவார்கள்.
காணியின் மையத்தில் இருந்த பெரிய கிணத்தில் எல்லோரும் சுத்தி நின்று குளிப்பார்கள். ஆண், பெண் வித்தியாசம் எல்லாம் பார்க்கேலாது. மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல, பெரியவர்கள் வேலைகளுக்கு போக வேணும். ஒரு வாளி இரண்டு ரூபாய் விற்றது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வாளி வாங்க அவர்கள் காசுக்கு எங்கே போவார்கள்? பழைய போத்தல் கடைகளில் இருபது இருபத்தைந்து சதம் கொடுத்து பெயின்ற் அடித்த பின், கிடைக்கும் பெயின்ற் ‘ரின்னை’ வாங்கி, இளைக் கயிற்றை இரட்டைப்பட்டாய் கட்டி வாளியாகவும் பயன்படுத்தினார்கள்.
நாதன் குளிக்கும் போது தம்பியாரை தனது அருகில் நிறுத்திக் கொள்வான். அதிகம் உயரமான கட்டு இல்லாத கிணத்தில் தம்பி விழுந்து விடுவானோ என்ற பயம். சிறிய பாரமில்லாத வாளி, கிணத்துக்குள் போட தண்ணீரில் மிதக்கும். இப்படியும் அப்படியும் ஆட்டி அள்ள வேண்டும்.
பொறுப்பில்லாத பொடியன்கள் ஒருவனின் வாளியை மற்றவன் தனது வாளியால் கொழுவி, இழுத்து விளையாடுவார்கள். ஒருத்தனின் வாளி அறுந்து விடும். அவன் பின்னேரம் வந்து பாதாளகரண்டியை போட்டு துளாவி தனது வாளியை மீட்டுக் கொள்வான்.
1958 ஆம் ஆண்டு நாதன் ஏழாம் வகுப்பிலும், நாபன் ஐந்தாம் வகுப்பிலும் படித்துக்கொண்டு இருக்கும் போது பெரும் மழை பெய்து எங்கும் வெள்ளக்காடாக மாறியது. அந்த மழை யாழ்ப்பாணத்தில் மட்டுமில்லை, இலங்கை முழுவதுமே பெய்தது.
இரணைமடுக்குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகமாம் என்றும், குளம் நிரம்பிவிட்டதாம் என்றும் சனங்கள் கதைப்பதை பொடியன்களும் கேட்டார்கள்.
இரண்டு நாள் அடைமழை பெய்ததால் “பரந்தனுக்கு ஒருக்கால் போய் பார்த்திட்டு வாறன்” என்று மகாலிங்கம் வெளிக்கிட, “நாங்களும் வாறம்” என்று பொன்னம்மாவும் மகளுடன் காரில் ஏறிவிட்டா. கணபதியார் “தம்பி, நீ போய் பரந்தன் சனத்தை பார்த்து வா. இஞ்சை வெள்ளம் வந்தால் நாங்கள் எல்லாரையும் எங்கடை பள்ளிக்கூடத்துக்கு கூட்டி வந்திடுவம்” என்று கூறி அனுப்பி வைத்தார்.
மகாலிங்கம் காரை பரந்தன் பாடசாலைக்கு முன்னால், வீடு கட்டி முடித்து மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த சுப்பிரமணியம் வீட்டிற்கு முன்னால் நிறுத்தினார். பதிவான பகுதியிலுள்ள சில மக்கள் பாடசாலையில் வந்திருப்பதைக் கண்டு அவர்களிடம் போய் ஆறுதல் கூறினார்.
பொன்னம்மாவும் மணியும் சுப்பிரமணியத்தின் வீட்டுக்குள் போய் இருந்து பாடசாலையை பார்க்க பொலிஸ் “ஜீப்” (Jeep) ஒன்றில் வந்த பொலிசார் விதானையாரை தேடினார்கள்.
விதானையார் வந்ததும் “விதானையார், இரணைமடுக்குளம் உடைப்பெடுத்து வெள்ளம் பாயுதாம். விதானைமார் எல்லாரும் பொலிஸ் ஸ்ரேசனிலை தான் நிக்கிறார்கள். உங்களையும் கூட்டி வரச் சொன்னார்கள். கடற்படை ‘போட்கள்’ (boats) வருமாம்.
ஒவ்வொரு விதானையும் ஒவ்வொரு பொலிசும் ஒவ்வொரு ‘போட்’ டில் ஏறி முரசுமோட்டை, பழையகமம், ஆனையிறவு, தட்டுவன்கொட்டி, கண்டாவளை, புளியம் பொக்கணை எல்லா இடமும் போய் பார்த்து சனத்தை காப்பாற்ற வேணுமாம்” என்றார்கள்.
சுப்பிரமணியம் “விதானையார் நீர் போய் உம்முடைய அலுவல்களை பாரும். அவையள் இஞ்சை நிக்கட்டும்” என்றார். விதானையார் ஜீப்பில் ஏறி பொலிசாருடன் சென்றார். அங்கு பொலிசாருடன் விதானைமாரும் நின்றார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து அரசாங்க அதிபரும் டீ. ஆர். ஓ. வும் தாங்கள் ‘கெலிகொப்ரர்’ (Helicopter) கிடைத்ததும் வந்து விடுவதாகவும் அதற்கிடையில் குழுவாக சேர்ந்து மக்களை காப்பாற்றும் படியும் பொலிஸ் ஸ்ரேசனுக்கு தகவல் அனுப்பியிருந்தார்கள்.
உருத்திரபுரத்தைப் பார்க்க ஒரு குழு ஜீப்பில் சென்றது. மார்க்கண்டு விதானையாருக்கு ஆனையிறவு, தட்டுவன்கொட்டி மக்களை பார்க்கும் பொறுப்பு வந்தது. கண்டாவளை விதானையார் கண்டாவளை, புளியம்பொக்கணையைப் பார்க்க, மகாலிங்கம் விதானையாருக்கும் முரசுமோட்டை விதானையாருக்கும் மிகவும் கடுமையாக பாதித்த முரசுமோட்டை, பழையகமம் மக்களை காப்பாற்றும் பொறுப்பு வழங்கப்பட்டது.
பரந்தன் சந்திக்கு ஜீப்பில் வந்த விதானைமார் குழு, கடற்படையினரின் ‘போட்டை’ எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அவர்கள் பார்த்த போது முரசுமோட்டைப் பக்கம் கடல் போல வெள்ளக்காடாக காட்சியளித்தது. சனங்கள் என்ன பாடு படுவினமோ என்று கவலை கொண்டார்கள்.
இரணைமடுக்குளக் கட்டு உடைத்து விட்டதாம் என்று கேள்விப்பட்டதும் நாதன் “ஐயோ, குளம் உடைப்பெடுத்து வெள்ளமாம். ஐயாவும் அம்மாவும் உயரமான ஆக்கள் தப்பி விடுவினம். தங்கச்சியை வெள்ளம் கொண்டு போகப் போகுது.” என்று சாப்பிட மறுத்து றோட்டைப் பார்த்து அழுதான். தமயன் அழுவதைப் பார்த்த நாபனும் அழத் தொடங்கினான்.
.
தொடரும்..
.
.
.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
.
ஓவியம் : இந்து பரா – கனடா
.
முன்னைய பகுதிகள்:
பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/
பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/
பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/
பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/
பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/
பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/
பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/
பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/
பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/
பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/
பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/
பகுதி 12 – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/
பகுதி 13 – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/
பகுதி 14 – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/
பகுதி 15 – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/
பகுதி 16 – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/
பகுதி 17 – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/
பகுதி 18 – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/
பகுதி 19 – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/
பகுதி 20 – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/
பகுதி 21 – https://vanakkamlondon.com/stories/2021/01/99913/
பகுதி 22 – https://vanakkamlondon.com/stories/2021/02/100718/
பகுதி 23 – https://vanakkamlondon.com/stories/2021/02/101415/
பகுதி 24 – https://vanakkamlondon.com/stories/2021/02/101804/
பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/
பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/
பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/
பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/
பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/
பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/
பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/
பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/
பகுதி 33 – https://vanakkamlondon.com/stories/2021/04/109047/
பகுதி 34 – https://vanakkamlondon.com/stories/2021/04/109845/
பகுதி 35 – https://vanakkamlondon.com/stories/2021/05/110730/
பகுதி 36 – https://vanakkamlondon.com/stories/2021/05/111664/