
இது
எங்கள் மூத்தோன்
செப்பனிட்ட பாதை.
மலைகளைத் தகர்த்து
குழிகளை நிரவி
வியர்வையும் உதிரமும்
வடித்தெடுத்த பாதை.
என் அப்பன் முட்புதர்களை அகற்றினான்
நாங்கள் கற்களை
அகற்றிக் கொண்டிருக்கிறோம்.
உழைப்பே உரமாகிப்போன
அந்தப் பாதையில்தான்
நாங்கள் நடக்கிறோம்.
ஒவ்வொரு
மாலைக் கருக்கலிலும்
தடைக்கற்களை
வீசியபடியேயிருக்கும் உங்களை
எந்த நம்பிக்கையுடன்
சேர்த்தழைத்துச்
செல்வது?
தடைகளை அகற்றிவிட்டு
சேர்ந்து நடக்க தயாராக இருக்கும்வரை
புதிய பாதை
அவசியமில்லையென
பீயுருட்டி வண்டுகூடச் சொல்கிறது.
-துவாரகன்
