நாடளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமை (30) முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமது சங்கங்கள் பங்கேற்கப் போவதில்லை என தோட்டப்புற ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை அட்டன் நகர மண்டபத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் நுவரெலியா மாவட்டச் செயலாளர் ஏ. ஆர். ரோஹான், மலையக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஈ. மகேந்திரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆசிரியர் சங்கத்தின் ஹட்டன் வலயச் செயலாளர் ஆர். கனகமூர்த்தி மற்றும் அச்சங்கத்தின் பிரதேசச் செயலாளர்களான ஏ. நிரஞ்சனி, எல். விஜயசுந்தரம் ஆகிய தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, கருத்துத் தெரிவித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தமது சங்கங்களைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும் நாளை வழமைபோல் பணிக்கு சமூகமளித்து பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவித்தனர்.
அதற்கமைய, நாளை மலையகத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் வழமைபோல் இடம்பெறும் எனவும், எனவே அனைத்து மாணவர்களும் கட்டாயம் பாடசாலைகளுக்கு வருகை தர வேண்டும் எனவும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் கேட்டுக்கொண்டனர்.
