பாக்தாத்,
ஈராக் நாட்டின் பிரதமராக முஸ்தபா அல் கதிமி (வயது 54) உள்ளார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் பதவிக்கு வந்தார். முன்னதாக அவர் அந்த நாட்டின் உளவுத்துறை தலைவராக பதவி வகித்தார். அவர் அமெரிக்காவுக்கு நெருக்கமானவர் என்று ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகள் கருதுகின்றனர்.
இதற்கிடையில் கடந்த மாதம் 10-ந் தேதி அங்கு நடந்த பொதுத்தேர்தலிலும், அதன் முடிவுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி ஈரான் ஆதரவு அரசியல் குழுக்களின் ஆதரவாளர்கள், பிரதமர் வீடு அமைந்துள்ள பசுமை மண்டலத்துக்கு அருகே ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், பிரதமர் முஸ்தபா அல் கதிமியை கொல்வதற்கு குறி வைத்து, பாக்தாத் பசுமை மண்டலத்தில் அமைந்துள்ள அவரது வீட்டின் மீது நேற்று வெடிபொருட்களை ஏந்திய டிரோன்களை கொண்டும், ராக்கெட்டை கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் பிரதமரின் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில், பிரதமர் முஸ்தபா அல் கதிமி காயமின்றி உயிர் தப்பினார்.
இந்த தாக்குதல்களுக்கு எந்தவொரு போராளி அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த கொலை முயற்சிக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது:-
ஈராக் அரசின் இதயத்தின் மீது (பிரதமர் இல்லத்தின்மீது) நடத்தப்பட்ட இந்த வெளிப்படையான பயங்கரவாத செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். ஈராக்கின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு பொறுப்பேற்றுள்ள அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையில் உதவுவதற்கு தயாராக இருக்கிறோம்.