ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போரிட திட்டமிட்ட பிரிட்டன் பள்ளி ஆசிரியருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
போல்டான் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியாக பணியாற்றி வந்தவர் ஜாம்செட் ஜாவீத்(வயது 30). இவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்காக சிரியாவுக்கு செல்ல முயன்றதாக கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, ஜாவீதுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக அறிவித்தார். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி சிரியாவுக்கு செல்ல முயன்றதுடன், அங்கிருந்து திரும்பி வராமல் ஜிகாதிக்களுக்காக சண்டையிட நினைத்தது சட்டப்படி தீவிரவாத செயல் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பட்டுள்ளார். இதையடுத்து ஜாவீத் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிரியா மற்றும் ஈராக்கில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடு என்று அறிவித்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், தொடர்ந்து அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான படை சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.