இலங்கையில் ராஜபக்சே ஆட்சிக்காலத்தில், கொழும்பு துறைமுக நகர் திட்டத்தை சீனா 1.4 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் நிறைவேற்ற ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த திட்டத்தை கடந்த ஆண்டு சீன அதிபர் ஜின்பிங், இலங்கை சென்றிருந்தபோது தொடங்கி வைத்தார்.
ஆனால் இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்து, சிறிசேனா புதிய அதிபராக பதவி ஏற்றதைத் தொடர்ந்து, கொழும்பு துறைமுக நகர் திட்டத்துக்கு முறையான ஒப்புதலைப் பெறவில்லை என கூறி திட்டப்பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால், ‘ உள்நாட்டு சட்ட விதிகளின்படிதான் இந்த திட்டப்பணிகள் நடைபெற்றது; திட்டப்பணிகள் ரத்து செய்யப்பட்டால், அது வெளிநாட்டு முதலீட்டாளர்களை தடுத்து விடும்’ என சீனா கூறியது.
இந்த நிலையில் இலங்கை அதிபர் சிறிசேனா, சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பீஜிங்கில் அவர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது ஜின்பிங்கிடம், சிறிசேனா, “கொழும்பு துறைமுக நகர் திட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டபின்னர் பணிகள் மீண்டும் தொடரும்” என உறுதி அளித்தார். பீஜிங்கில், சீன வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரி நேற்று இந்த தகவலை வெளியிட்டார்.