ஈரானின் அணு ஆராய்ச்சி தொடர்பாக ஏற்படவுள்ள இடைக்கால ஒப்பந்தத்தை மீறும் வகையில் அந்த நாடு செயல்பட்டால், கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வகை செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேறியது.
ஈரான் அணு ஒப்பந்தம் குறித்து இறுதிக்கட்டப் பேச்சு ஸ்விட்ஸர்லாந்தில் நடைபெற்று வருகிறது. கடும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு அணு ஆராய்ச்சியை அந்நாடு தொடர்ந்து மேற்கொள்ளலாம் எனப் பேச்சுவார்த்தையில் முடிவாகியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், ஆக்கபூர்வமான திட்டங்களுக்காக, குறைவான எண்ணிக்கையில் செறிவூட்டிகளை ஈரான் வைத்திருக்கலாம் எனும் வகையில் ஏற்பட்டுள்ள இடைக்கால ஒப்பந்தத்தை வல்லரசு நாடுகள் ஏற்றுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து, கடந்த பல ஆண்டுகளாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், அணு சக்தி ஒப்பந்தத்தை மீறும் விதத்தில் ஈரான் எந்தவொரு நடவடிக்கையில் ஈடுபட்டாலும், அந்நாட்டின் மீது கடுமையான, புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, குடியரசுக் கட்சி உறுப்பினர் மார்க் கிர்க் கொண்டு வந்த திருத்த மசோதாவை, அவையிலிருந்த 100 உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்றினர்.