இலங்கையில் பல்வேறு சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தில் அவர் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத் தலைமையகத்தில் தமிழர்களைச் சந்தித்தபோது விக்ரமசிங்க கூறியதாவது:
நாட்டில் போர் முடிந்து விட்டது. ஆனால் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படவில்லை. நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான தங்கள் முனைப்பை தமிழர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழர்களுடன் அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது. நாட்டின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் அது அவசியமாகும். போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் பல்வேறு சமூகத்தினரையும் முன்னேற்றம் காணச் செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது. இங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர அரசு பாடுபடும்.
யாழ்ப்பாண தீபகற்பம் முழுவதிலும் மக்களுக்கு மின்சார வசதியையும் சுத்தமான குடிநீரையும் அரசு வழங்கும். அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக கல்வியிலும், சுகாதாரத்திலும் அரசு கவனம் செலுத்தும்.
போர் நடைபெற்றபோது அழிந்து போன அனைத்துத் தொழிற்சாலைகளையும் அரசு மீண்டும் திறக்கும். இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன்படி, காங்கேசன்துறையில் சிமெண்ட் ஆலை, ஆனையிறவில் உப்பளம், பராந்தனில் ரசாயனத் தொழிற்சாலை ஆகியவையும் பல்வேறு பெரிய ஆலைகளும் மீண்டும் கட்டப்படும். மக்களின் அன்றாட சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகளைத் தீர்க்க, தமிழ் நன்கு பேசத் தெரிந்த 400 இளைஞர்கள் காவல்துறை அதிகாரிகளாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார் விக்ரமசிங்க.