கல்வி அமைச்சின் பூரண அனுமதியுடன், இலங்கை பாடசாலைகள் வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இலங்கை பாடசாலைகள் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று நாட்கள் பொலன்னறுவை தேசிய விளையாட்டுத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
“30 ஆவது தடவையாக நெஸ்ட்லே லங்கா நிறுவனத்தின் மைலோவின் அனுசரணையுடன் நடத்தப்படும், இப்போட்டித் தொடரில் நாடு தழுவிய ரீதியில் 360 பாடசாலை வலைப்பந்தாட்ட அணிகள் பங்கேற்கவுள்ளதாக” இலங்கை பாடசாலைகள் வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவி நிரோதா அபேவிக்ரம தெரிவித்தார்.
“இம்முறை கடந்த முறை நடைபெற்ற போட்டித் தொடரரைக் காட்டியிலும் அதிக எண்ணிக்கையான அணிகள் பங்கேற்பதுடன், யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் அதிகளவிலான அணிகள் இம்முறை பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறித்தவொரு போட்டித் தொடரில் அதிகளவிலான அணிகள் பங்கேற்பதை அத்தொடருக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் ” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை பாடசாலைகள் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கு மைலோ அனுசரணை வழங்குகின்றமை மற்றும் இப்போட்டித் தொடர் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் ஊடகச் சந்திப்பு திங்கட்கிழமை (21) மாலை கொழும்பு சீ.ஆர். அண்ட் எப்.சீ. கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின்போது, நெஸ்ட்லே லங்கா நிறுவனத்தின் டெய்ரி – பணிப்பாளர் ருவான் வெலிக்கல அனுசரணைக்கான மாதிரிப் படிவத்தை இலங்கை பாடசாலைகள் வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவி நிரோதா அபேவிக்ரமவுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வுக்கு, இலங்கை பாடசாலைகள் வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர், ஷிரோமி குருப்பு, பொருளாளர் ஷியாமென் விதானவசம், போட்டித் தொடர் செயலாளர் கே.எஸ். காஞ்சன ஆகியோரும், நெஸ்ட்லே லங்கா நிறுவனத்தின் அதிகாரிகளான பந்துல எகொடகொட, சஞ்சீவ விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.