செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “மீண்டும் கூட்டமைப்பாக ஒன்றிணைவோம் வாரீர்”

“மீண்டும் கூட்டமைப்பாக ஒன்றிணைவோம் வாரீர்”

1 minutes read

“2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறிருந்ததோ அவ்வாறான நிலையை – தமிழ் மக்களின் அரசியல் ஏகப் பிரதிநிதிகள் என்ற நிலையை – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எய்த வேண்டும். எனவே, தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சகல தமிழ்க் கட்சிகளும், தம் கட்சிகளின் நலனை முன்னிறுத்தாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்த் தேசியத்தின் பாதையில் ஓரணியாக – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணையுமாறு அழைக்கின்றேன்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்த வேண்டும் என்பதே எனது பெரு விருப்பம். அதனை முன்னிறுத்தியே தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் நின்று, இப்போது தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். இந்தநிலையில் தமிழரசுக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் புத்துயிரூட்டுவதே என் முன்னுள்ள முதற்பணியென எண்ணுகின்றேன்.

தமிழ் மக்களின் உரிமைக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக குரல் கொடுத்த, மக்களுக்காக அரசியல் பணி செய்த சக தமிழ்த் தேசியக் கட்சிகள் சிலபல காரணங்களால் பிரிந்து தனிவழியே பயணிக்கின்றன. இது எமது பொது எதிரிக்கே சாதகமானது. அதன் விளைவை கடந்த தேர்தல்கள் எமக்கு உணர்த்தியிருந்தன. 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் கூட்டமைப்பு எப்படி தமிழ் மக்களின் அசைக்க முடியாத சக்தியாக மிளிர்ந்ததோ, அதே நிலையை மீண்டும் எட்ட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் பெருவிருப்பம். எனது விருப்பமும் அதுவே. இப்போது அதற்கான காலம் கனிந்துள்ளது. இதற்காக அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் கடந்தகால கசப்பான நினைவுகளைக் களைந்து ஒன்றிணையுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.

தமிழ் மக்களின் நலனுக்காகவும், தமிழ்த் தேசியத்தின் நலனுக்காகவும் ஓரணியில் ஒன்றித்திருப்பது எம் முன்னால் உள்ள பெரும் பொறுப்பு. அதற்காகத் தமிழரசுக் கட்சி மட்டுமல்லாது, சகல தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு உழைக்க வேண்டும். சகல தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டைத் துரித கதியில் முன்னெடுக்கவுள்ளேன். அதன் மூலம் மக்களின் உரிமைகளையும், மாவீரர்களின் கனவுகளையும் வென்றெடுப்போம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.