அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் களம் தற்காலத்தில் பரபரப்பாக அவதானிக்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதியான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகினறனர்.
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான தனது பரப்புரையை கமலா ஹாரிஸ் தொடங்கினார். அவருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கமலா ஹாரிஸை ஜனாதிபதி வேட்பாளராக பலர் ஆதரிக்கத் தொடங்கியதும், அமெரிக்காவின் தேர்தல் களம் தலைகீழாக மாறியுள்ளது.
பிரசாரத்தை தொடங்கிய ஒருவார காலத்தில் கமலா ஹாரிஸ் தேர்தல் நிதியாக 200 மில்லியன் டொலர் நிதியைத் திரட்டியுள்ளார்.
இந்த நிதியை வழங்கியுள்ளவர்களில் 66 சதவீதம் பேர் முதல் முறையாக நன்கொடை அளிப்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கமலா ஹாரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு ஜனாதிபதி தேர்தல் குறித்து புதிய கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன.
குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை விட துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் 2 சதவீதம் அதிக புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருப்பதாக அந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கருத்துக் கணிப்பின்படி, கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவும் டிரம்ப் 42 சதவீத ஆதரவும் பெற்றுள்ளனர். நாளுக்கு நாள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
இந்தக் கருத்துக்கணிப்பு டொனால்ட் டிரம்புக்கு எதிரான அமெரிக்கர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது டிரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.