ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருக்க விருப்பமில்லை என்று தம்மிக்க பெரேரா, அக்கட்சியின் பொதுச்செயலாளருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படவுள்ள பின்னணியில் அக்கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பத்தரமுல்ல, நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று காலை அறிவிக்கப்படுவார் என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தீர்மானம் பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் அரசியல் குழு உறுப்பினர்கள் இன்று கட்சியின் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.