கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையைப் போல மேலும் பல அணுகுண்டு பரிசோதனைகளை நிகழ்த்துமாறு வட கொரிய அணு விஞ்ஞானிகளிடம் அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் அறிவுறுத்தினார்.
மேலும் ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை மூலம் வட கொரியத் தலைவர்களுக்குப் பெருமை சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அணுகுண்டுகளைப் போல் பன்மடங்கு அழிவை ஏற்படுத்தும் ஹைட்ரஜன் குண்டை வட கொரியா கடந்த வாரம் பரிசோதித்தது. இதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
அந்தப் பரிசோதனை காரணமாக வட கொரியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் முடிவு செய்தது.
இந்தச் சூழலில், ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையைத் தனது வெற்றியாகக் காட்டும் பிரசாரங்கள் மூலம், தனது சர்வாதிகார ஆட்சியை அதிபர் கிம் ஜோங் உன் பலப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
பிரசாரத்தின் ஒரு பகுதியாக, ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் பங்கு பெற்ற அணு விஞ்ஞானிகளை திங்கள்கிழமை சந்தித்த கிம் ஜோங், அவர்களுடன் படம் எடுத்துக் கொண்டார்.
அந்தப் பரிசோதனை மூலம் வட கொரிய முன்னாள் சர்வாதிகாரிகளான தனது தாத்தா கிம் இல் சங், தந்தை கிம் ஜோங் இல் ஆகிய இருவருக்கும் அணு விஞ்ஞானிகள் பெருமை சேர்த்துள்ளதாக அவர் பாராட்டினார்.
விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியை மேம்படுத்தி, மேலும் அணுகுண்டு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.இதற்கிடையே, ஹைட்ரஜன் குண்டு பரிசோதனைக்குப் பதிலடியாக வட கொரிய எல்லையருகே அந்த நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தை தென் கொரியா திங்கள்கிழமையும் தொடர்ந்தது.
4