செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தேர்தல் செயல்முறையைக் கேள்விக்குட்படுத்துவதற்கு முன் ராகுல் காந்தி பதவி விலக வேண்டும்: மத்திய அமைச்சர் சவால்

தேர்தல் செயல்முறையைக் கேள்விக்குட்படுத்துவதற்கு முன் ராகுல் காந்தி பதவி விலக வேண்டும்: மத்திய அமைச்சர் சவால்

1 minutes read

தேர்தல் செயல்முறைகளைக் கேள்விக்குட்படுத்துவதற்கு முன்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை முதலில் இராஜினாமா செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் சவால் விடுத்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிராக ராகுல் காந்தி முன்வைத்து வரும் தொடர்ச்சியான விமர்சனங்களை எதிர்கொள்ளும் வகையில், ராய்பரேலி தேர்தல் தொகுதியில் அவர் பெற்ற வெற்றியைச் சுட்டிக்காட்டி பஸ்வான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் விசேட திருத்த நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி தலைமைத் தேர்தல் ஆணையாளருக்கு எதிராக புதுடில்லியில் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொலிஸாரின் அதிகார வரம்புமீறலைக் கண்டிக்கும் அதேவேளையில், இத்தகைய மோதல்களை ஒரு பக்கச் சார்பாக மட்டுமே பார்க்கக் கூடாது என்றும், மாணவர் போராட்டங்களை முகமூடியாகப் பயன்படுத்தி சமூக விரோத சக்திகள் ஊடுருவி மோதல்களைத் தூண்டக்கூடும் என்றும் சிராக் பஸ்வான் எச்சரித்துள்ளார்.

பொலிஸாரின் வன்முறையைத் தாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், மாணவர்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ எதிராக இத்தகைய பலப்பிரயோகம் முன்னெடுக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பஸ்வான் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இருப்பினும், இந்தச் சம்பவம் எங்கு, எப்போது, எவ்வாறு இடம்பெற்றது என்ற சூழ்நிலையைப் புரிந்துகொள்வது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டினார். சில சந்தர்ப்பங்களில் சமூக விரோதக் குழுக்கள் மாணவர்களைத் தங்களுக்குப் பாதுகாப்புக் கேடயமாக முன்னிறுத்தி பொலிஸாருடன் மோதலில் ஈடுபடுகின்றன என்றும், பொலிஸாரும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போராட்டக்காரர்கள் அல்லது நிர்வாகத் தரப்பினர் பதற்றத்தை அதிகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது எனத் தெரிவித்த அவர், வன்முறைத் தூண்டுதல்களைக் காரணம் காட்டிப் பலப்பிரயோகம் செய்வதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றார்.

மேலும், ராகுல் காந்தி யதார்த்தமான விடயங்களை விடுத்து தொடர்ச்சியாக அரசியல் உள்நோக்கத்துடன் பேசி வருவதாக அவர் குற்றம் சுமத்தினார். ராய்பரேலி தொகுதியில் ராகுல் காந்தியும், வயநாடு தொகுதியில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவும் இதே தேர்தல் முறையின் ஊடாகவே வெற்றி பெற்றுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் பஸ்வான், அவ்வாறான தேர்தல் செயல்முறையையே தொடர்ந்தும் கேள்விக்குட்படுத்தும் ராகுல் காந்தி முதலில் தனது பாராளுமன்றப் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.