பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்டு வரும் மாணவர் போராட்டங்கள் நியாயமானவை எனத் தெரிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், இந்த எதிர்ப்புகளை சில அரசியல் சக்திகள் தங்களது சுய ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து உரையாற்றிய அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.
அத்துடன், மாணவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மற்றும் இந்தப் போராட்டங்கள் தொடர்பில் அடுத்த சில வாரங்களுக்குள் திட்டவட்டமான தீர்வுகள் அல்லது உரிய பதில்களை முன்வைக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மக்ரோன் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, பாரிஸ் நகரில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பாரிய எதிர்ப்புப் போராட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 500 பேர் கலந்துகொண்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. தலைநகர் பாரிஸ் மற்றும் லியோன் ஆகிய நகரங்களில் இடம்பெற்ற பேரணிகளின்போது சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகின.
இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகப் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இடம்பெற்ற மோதல்களின்போது காயமடைந்த 11 பொலிஸார் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.