செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சுயதொழில் முயற்சி; பண்ணை அமைத்து சாதனைப் பயணம் தொடங்கிய பட்டதாரி

சுயதொழில் முயற்சி; பண்ணை அமைத்து சாதனைப் பயணம் தொடங்கிய பட்டதாரி

1 minutes read

கிளிநொச்சியில் நவீன கால்நடை வளர்ப்புடன் SJ Integrated Farm திறந்து வைப்பு

பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர் வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக, சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டு நவீன ஒருங்கிணைந்த பண்ணையொன்றை உருவாக்கியுள்ளார் முகாமைத்துவப் பட்டதாரி மா. சுவேந்திரன். கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் SJ Integrated Farm எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இப்பண்ணையின் உத்தியோகபூர்வ திறப்பு விழா நேற்று (30.10.2026) நடைபெற்றது.

நீண்டகால உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் எதிர்காலக் கனவுகளின் அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ள இப்பண்ணையானது, பாரம்பரிய விவசாயத்துடன் நவீன கால்நடை வளர்ப்புத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து முன்னெடுக்கப்படவுள்ளது.

நிலையான பால் உற்பத்தி, பசுந்தீவன உற்பத்தி, சைலேஜ் தயாரிப்பு மற்றும் எதிர்காலத்தில் பால் சார்ந்த பெறுமதிசேர் உற்பத்திகளை முன்னெடுத்தல் ஆகியவற்றை பிரதான நோக்கங்களாகக் கொண்டு இப்பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திறப்பு விழாவில் இலங்கை வங்கியின் வன்னி வடக்கு பிராந்திய முகாமையாளர், பரந்தன் கிளை முகாமையாளர், கால்நடைத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், அரச கால்நடை வைத்திய அதிகாரி, கால்நடை விவசாய போதனாசிரியர், கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர், Nestlé நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர், வடக்கு பிராந்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், முருகானந்தா கல்லூரியின் முதல்வர், இந்திரா குழுமத்தின் பணிப்பாளர், கிராமத்தின் முன்னாள் கிராம சேவகர் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இளைஞர்களுக்கு முன்னுதாரணமான சுயதொழில் முயற்சி

பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் சூழலில், விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் தொழில்முனைவாகக் கொண்டு முன்னேறுவதற்கான முயற்சியாக SJ Integrated Farm உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பண்ணையின் இலக்கு தனிப்பட்ட தொழில் வளர்ச்சியுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. கிளிநொச்சி மாவட்டத்தின், குறிப்பாக கண்டாவளை பிரதேசத்தின் பால் உற்பத்தியை அதிகரித்தல், இளைஞர்களை விவசாயத் தொழில்முனைவோராக உருவாக்குதல் மற்றும் கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் ஊடாக தேசியப் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்வதே இதன் நீண்டகால நோக்கமாகும்.

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் ஒருங்கிணைப்பதன் மூலம், கிராமியப் பொருளாதாரத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதற்கு இம்முயற்சி ஒரு எடுத்துக்காட்டாக அமைகின்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்திய அனைவருக்கும், நேரடியாகவும் மறைமுகமாகவும் இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் பண்ணை நிர்வாகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

மா. சுவேந்திரனால் சிறிய முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட இப்பயணம், எதிர்காலத்தில் ஒரு முன்மாதிரியான ஒருங்கிணைந்த பண்ணையாக வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கையுடன் SJ Integrated Farm தனது சாதனைப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.