இங்கிலாந்தில் 39 பாடசாலைகளின் முக்கியமான தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டு, அவை சட்டவிரோத இணைய தளமான டார்க் வெப்பில் பதிவேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் மூலம் சுமார் 3 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோப்புகள் இணையத்தில் கசிந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பிரிஸ்டல் நகர நிர்வாகம் இந்தத் தகவல் திருட்டை உறுதிப்படுத்தியுள்ளது. தரவுக் கசிவு குறித்து பாதிக்கப்பட்ட அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் உடனடியாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ள திருடப்பட்ட கோப்புகளில் அடங்கியுள்ள விரிவான தகவல்கள் எவை என்பதை தற்போதைக்கு முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.