ரஷ்யாவுக்கு ஆதரவாக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த சிரேஷ்ட வீரர் ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலண்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 41 வயதான குறித்த அமெரிக்க இராணுவ வீரர், செவ்வாய்க்கிழமை க்ளூசெஸ்டர் (Gloucester) பகுதிக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இங்கிலாந்தின் 2023ஆம் ஆண்டின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரிவு 1 மற்றும் பிரிவு 3 ஆகியவற்றின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலண்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் பிரிவு 1 என்பது பாதுகாக்கப்பட்ட இரகசியத் தகவல்களைப் பெறுதல் அல்லது வெளியிடுதல் தொடர்பானது என்பதுடன், பிரிவு 3 என்பது வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுக்கு உதவுதல் தொடர்பானது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, க்ளூசெஸ்டர்ஷையரில் உள்ள இரண்டு இடங்களில் விசேட பொலிஸ் அதிகாரிகள் தீவிர சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட அமெரிக்க வீரர், க்ளூசெஸ்டர்ஷையரின் இன்ஸ்வொர்த் பகுதியில் அமைந்துள்ள இம்ஜின் பராக்ஸ் (Imjin Barracks) இராணுவத் தளத்தில் பணியாற்றியவர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இராணுவத் தளம் நேட்டோ (NATO) அமைப்பின் மிக முக்கியமான அவசர நடவடிக்கைப் பிரிவின் (ARRC) தலைமையகமாகவும், கூட்டமைப்பின் மூலோபாய செயற்பாட்டுத் தளமாகவும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஏனைய விசாரணைகளுடன் இந்த விவகாரத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அமெரிக்க எஃப்பிஐ (FBI) பணிப்பாளர் காஷ் படேல் இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்கையில், இந்த விசேட கைது நடவடிக்கையானது உளவு பார்த்தல் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியது எனவும், இது அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் மிகுந்த கவலையளிக்கும் விடயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவுக்கு வழங்கிய சத்தியப்பிரமாணத்தை மீறி, நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கும் நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களை எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ள முடியாது என்ற தெளிவான செய்தியை தாம் வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
