இந்தியாவுக்கான 03 நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்யும் முகமாக, இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்தரின் ஆகியோர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தனர்.
2022ஆம் ஆண்டுக்குப் பின்னர் இத்தம்பதியினர் மேற்கொண்ட முதலாவது சர்வதேசப் பயணத்தின் போது, தமது Earthshot Prize சுற்றுச்சூழல் விருது விழாவை இந்தியாவுக்குக் கொண்டு வந்தமைக்காக இளவரசர் வில்லியத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இளவரசர் வில்லியத்தால் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதும், அவரது தனிப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுமான இச்சுற்றுச்சூழல் விருது விழாவில் வெற்றியாளர்களுக்கு தலா ஒரு மில்லியன் பவுண்ட் பரிசுத் தொகை வழங்கப்பட்ட மறுநாளே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தமது பயணத்தின் இறுதிக் கட்டத்திற்காக வில்லியம் மற்றும் கேத்தரின் ஆகியோர் புதன்கிழமை மும்பையிலிருந்து தலைநகர் புதுடெல்லிக்குப் பயணமாகியிருந்தனர். பிரதமர் மோடியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளின் வலிமை மற்றும் முக்கியத்துவம் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாக கென்சிங்டன் மாளிகையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான மற்றும் நீண்டகாலப் பிணைப்புகளை நினைவுகூர்ந்த அவர்கள், எதிர்வரும் ஆண்டுகளில் இருதரப்புப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.
பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கு முன்னதாக, இளவரசர் வில்லியம் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமொன்றிற்கு விஜயம் செய்து திரையுலக நட்சத்திரங்களைச் சந்தித்திருந்தார். அதேவேளை, இளவரசி கேத்தரின் மும்பையிலுள்ள நவ்ரோஸ்ஜி வாடியா மகப்பேற்று வைத்தியசாலைக்கு (Nowrosjee Wadia Maternity Hospital) விஜயம் செய்திருந்தார்.

அங்கு குறைமாதத்தில் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பிரசவித்த நிலையில் ஒரு குழந்தையை இழந்த துயரத்திலிருந்த 29 வயதான ஜோதி கரண்டே என்ற தாய்க்கு இளவரசி ஆறுதல் கூறினார். அவரின் மற்றைய குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மகப்பேற்றுக்குப் பிந்தைய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அத்தாயிடம், “மன உறுதியுடன் இருங்கள், நன்றாகச் செய்துள்ளீர்கள், நீங்கள் மிகவும் தைரியமாக இருந்துள்ளீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது” என கேத்தரின் ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார்.
