பிரான்ஸில் தேவாலயத்துக்குள் பிணைக் கைதிகளை பிடித்து வைத்திருந்த இரு நபர்கள், பாதிரியாரின் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்தனர்.
தாக்குதலுக்குள்ளான மற்றொரு பிணைக் கைதி உயிருக்குப் போராடி வருகிறார்.
தாக்குதல் நிகழ்த்திய இருவரையும் சிறப்புக் காவல் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிப்பதாவது:
பிரான்ஸின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த செயின்-எடியென்-டு-ரோரே என்ற ஊரில் அமைந்துள்ள தேவாலயத்துக்கு இரண்டு மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை வந்தனர்.
அப்போது அந்த தேவாலயத்தில் பாதிரியார் உள்பட ஐந்து பேர் இருந்தனர். அந்த ஐந்து பேரையும் கத்தி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த மர்ம நபர்கள், பாதிரியாரை கழுத்தை
அறுத்துக் கொன்றனர்.
தகவலறிந்ததும் சிறப்புக் காவல் படையினர் அந்த தேவாலயத்தை சுற்றி வளைத்து, மர்ம நபர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனர்.
பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த மூவரை காயங்கள் ஏதுமின்றி மீட்டனர்.
எனினும், மற்றொரு பிணைக் கைதி மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடி வருவதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் பியர்-ஹென்ரி பிரான்டே தெரிவித்தார்.
தேவாலயத்தில் தாக்குதல் நிகழ்த்திய மர்ம நபர்கள் குறித்த விவரங்களோ, அவர்களது நோக்கம் குறித்த விவரங்களோ வெளியிடப்படவில்லை.
இந்தத் தாக்குதலுக்கு கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்ஸிஸ், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் அண்மைக் காலமாக இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நிகழ்த்தி வரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.