சென்னையை அடுத்த போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கோட்டீஸ்வரி (வயது 9) எனும் சிறுமி, ரத்த புற்றுநோய் பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். புற்றுநோய் முற்றிய நிலையில் சிறுமி இருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியிடன் ஏதாவது ஆசை உள்ளதா? என்று பெற்றோர் கண்ணீருடன் கேட்டு உள்ளனர். அதற்கு அந்த சிறுமி, ‘சினிமா நடிகர் தனுசை சந்திக்க ஆசைப்படுகிறேன்’, என்று தெரிவித்தார்.
இந்த தகவல் உடனடியாக நடிகர் தனுஷ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து நேற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமி கோட்டீஸ்வரியை, தனுஷ் நேரில் சந்தித்தார். அவரது உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தனது விருப்பமான நடிகரை நேரில் கண்டதும் சிறுமி ஆனந்தம் அடைந்தார். தனுசை கட்டி தழுவிக் கொண்டார். கோட்டீஸ்வரியுடன் நீண்ட நேரம் இருந்துவிட்டு, தனுஷ் அங்கிருந்து புறப்பட்டார்.
‘‘என் வாழ்நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்கு பிடித்த தனுசுடன் நான் நிறைய புகைப்படம் எடுத்துக் கொண்டேன். இதை என்றுமே மறக்கமுடியாது. அவருக்கு எனது நன்றிகள்’’, என்று சிறுமி கோட்டீஸ்வரி கூறியுள்ளார்.
நேற்று தான் தனது பிறந்தநாளை தனுஷ் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் படப்பிடிப்புகளுக்கு நடுவே சிறுமியின் ஆசையை தனுஷ் நிறைவேற்றி உள்ளார்.