புகழ்பெற்ற ஹாரி பாட்டர் நாவல்களின் அனைத்து அத்தியாயங்களையும் வரி விடாமல் ஒப்பிக்கும் அளவுக்கு அசாத்திய நினைவுத் திறன் கொண்ட பெண் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.
பெக்கி ஷராக் (26) என்ற அந்தப் பெண், தனது இரண்டு வயதுக்குள்ளாகவே உலக வரைபடத்தில் அனைத்து நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களையும் நினைவில் வைத்து, ஒன்று விடாமல் சொன்னாராம்!
இதுகுறித்து “சேனல் 9′ தொலைக்காட்சிக்காக பெக்கி ஷராக்கை பேட்டி கண்ட அலிஸன் லங்டன் கூறியதாவது:
பெக்கி ஷராக்குக்கு மிகவும் பிடித்த ஹாரி பாட்டர் நாவல்களை முழுவதுமாக ஒப்பிக்க முடியும் என்று அவர் கூறியதை பரிசோதிக்க விரும்பினேன்.
அதற்காக, ஒரு நாவலை எடுத்து, கைக்கு வந்த பக்கத்தைப் பிரித்து, அதிலிருந்த ஒரு வரியைப் படித்தேன்.
உடனடியாக அந்த எத்தனையாவது அத்தியாயம் என்பதையும், அத்தியாயத்தின் பெயரையும் கூறிய பெக்கி ஷராக், முதல் வரியிலிருந்து கடகடவென்று சொல்ல ஆரம்பித்தார்.
நான் “போதும்’ என்று சொல்லும்வரை ஒரு வரி விடாமல் அவர் ஒப்பித்துக் கொண்டிருந்தார்.
இந்த வகையில், 7 ஹாரி பாட்டர் நாவல்களிலும் இடம்பெற்றுள்ள அனைத்து வரிகளும் பெக்கி ஷராக்குக்கு அத்துபடி ஆகியுள்ளது என்றார் அலிஸன்.
பெக்கி ஷராக்கின் இந்த அசாத்திய நினைவுத் திறனுக்குக் காரணம், அவருக்குள்ள “ஹைலி சுப்பீரியர் ஆட்டோபயோகிராஃபிகல் மெமரி’ (ஹெச்.எஸ்.ஏ.எம்.) என்ற விநோத உடற்கூறு நிலையே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் ஹெச்.எஸ்.ஏ.எம். நிலை கண்டறியப்பட்ட ஒரே நபர் பெக்கி ஷராக்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஹெச்.எஸ்.ஏ.எம். மட்டுமின்றி “ஆட்டிஸம்’ குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டு, தற்போது வாழும் ஒரே நபர் இவர்தான்.
இந்த விநோத உடல் நிலை ஷராக்குக்கு ஒரு வகையில் வரம் என்றால், மற்றொரு வகையில் சாபம் என்று கூட சொல்லலாம் என்கிறார் அவரை பேட்டி கண்ட அலிஸன்.
“”இரவு நேரங்களில் மெல்லிய வெளிச்சத்தில் வானொலி கேட்டவாறு படுத்தால்தான் தூக்கம் வரும்.
கும்மிருட்டாகவும், நிசப்தமாகவும் இருந்தால் நினைவுகள் அலைமோதி தூக்கத்தைக் கெடுத்துவிடும்.
பழைய நினைவுகள், பழைய உணர்வுகளையும் கிளறிவிடும்.
குழந்தைப் பருவ நினைவுகள் வரும்போது மனம் இளமையாகவும், உணர்வு குழந்தையாகவும் மாறி அவஸ்தையைத் தரும்” என்று பெக்கி ஷராக் கூறியதை அலிஸன் குறிப்பிடுகிறார்.
ஞாபக மறதியால் பலர் அவதிப்படும் நிலையில், நினைவுகளை எவ்வாறு மறப்பது என்று தெரியாமல் பெக்கி ஷராக் தவிப்பதாகக் கூறுகிறார் அலிஸன்.