திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள் உள்பட மொத்தம் 300 பேர் உயிர் தப்பினார்கள்.
கேரள மாநிலத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருவதால் அங்குள்ள விமான நிறுவனங்கள் இங்கு தங்களின் சேவையை விரிவாக்கம் செய்துள்ளன.
அந்த வரிசையில் அமீரகத்தின் எமிரேட்ஸ் விமான நிறுவனம், துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கடந்த 2003– ம்ஆண்டு தனது சேவையை தொடங்கியது.
நேற்று காலை வழக்கம் போல் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்சின் போயிங் 777 ரக விமானம் 282 பயணிகளை ஏற்றிக்கொண்டு காலை 10.19 மணிக்கு புறப்பட்டது. பயணிகள் தவிர விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் 18 பேரும் ஆக மொத்தம் 300 பேர் விமானத்தில் இருந்தனர். சுமார் 4 மணி நேர பயணத்தில் அமீரக நேரப்படி மதியம் 12.50 மணிக்கு துபாயில் தரை இறங்க திட்டமிடப்பட்டு இருந்தது.
அமீரகத்தின் எல்லைப்பகுதியை விமானம் நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில் முன்சக்கரம் திறக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை தரையிறக்க திட்டமிட்டார்கள்.
இதைத் தொடர்ந்து துபாய் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதனை அடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. துபாயில் இருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. விமான நிலையம் மற்றும் ஓடு பாதைக்கு தீயணைப்பு மற்றும் ஆம்புலன்சுகள் விரைந்தன.
தரையில் மோதியது
இதனை அடுத்து விமானத்திலும் விமானிகள் அவசரநிலையை கொண்டுவந்தனர். விமான பயணிகள் அனைவருக்கும் அவசரகால வழியை பயன்படுத்தி வெளியேறுவது எப்படி என்பது குறித்து விமான பணிப்பெண்களால் சொல்லித்தரப்பட்டது. இதை கேட்டு பதறிப்போன பயணிகள், அடுத்து என்ன நிகழப்போகிறதோ என்ற அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
இதற்கிடையே விமானத்தை விமானிகள் சாதுர்யமாக இயக்கி, விமான நிலையத்தை நெருங்கி வந்து விட்டனர். விமானத்தின் முன்பகுதி சக்கரம் தீப்பிடித்து எரிவதை ஓடுதளத்தில் இருந்த மீட்புப் படையினர் கவனித்தனர். ஓடுதளத்தில் விமானம் தரை இறங்கியபோது, விமானத்தின் பின் பக்க சக்கரங்கள் தரையை முதலில் தொட்டன.
அதன் பின்னர் விமானத்தின் வேகம் உடனடியாக குறைக்கப்பட்டு முன் சக்கரத்தை இயக்க விமானிகள் முற்பட்டபோது அதை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியவில்லை. இதை அடுத்து பலத்த சத்தத்துடன் விமானத்தின் முன் பகுதி தரையில் மோதி வெடித்தது.
இதனால் விமானம் வேகமாக தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. விமானத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர். அந்த சமயத்தில் கரும்புகை வெளியேறியது என்றாலும் விமானத்தின் மேல்பகுதி சேதம் அடைந்தது.
300 பேர் உயிர் தப்பினர்
இதற்கிடையே விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த மீட்பு குழுவினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் உள்ளிட்ட 300 பேரையும் அவசரகால வழிகள் மூலம் பத்திரமாக வெளியேற்றினர்.
இந்த விபத்தில் நல்லவேளையாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் 10 பேர் மூச்சு திணறல் மற்றும் தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் வீடு திரும்பினார்கள். படுகாயம் அடைந்த ஒருவருக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முன்னதாக விமான பயணிகளை வரவேற்பதற்காக, விமான நிலையத்தில் காத்திருந்த உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் விமானம் தீப்பிடித்து எரிவதைப்பார்த்து கவலையில் ஆழ்ந்தனர். பின்னர் தங்கள் உறவினர்கள் பத்திரமாக வெளியே வந்ததை கண்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
226 இந்தியர்கள்
இந்த விபத்தினால் துபாய் விமான நிலையம் முழுவதும் பதற்றமான நிலை காணப்பட்டது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எந்த விமானமும் புறப்படவில்லை. அதே போல் வேறு எந்த விமானமும் தரை இறங்க அனுமதிக்கப்படவில்லை. சில மணி நேரத்துக்கு மூடப்பட்ட விமானநிலையம் இரவு 8 மணிக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது.
விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணம் செய்தவர்களில் இந்தியர்கள் 226 பேர், அமீரகத்தை சேர்ந்தவர்கள் 11 பேர், இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் 24 பேர், அமெரிக்கா, சவுதி அரேபியா, துருக்கி, அயர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்தவர்கள் 21 பேர் என்று தெரிய வந்துள்ளது.