செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா உக்ரைனுடன் உளவுத் தகவல்களை தொடர்ந்து பகிர்வதாக டிரம்ப் தெரிவிப்பு

உக்ரைனுடன் உளவுத் தகவல்களை தொடர்ந்து பகிர்வதாக டிரம்ப் தெரிவிப்பு

1 minutes read

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா புதிய ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலிலும், உக்ரைனுடன் உளவுத் தகவல்கள் தொடர்ந்தும் பரிமாறப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட எரிசக்தி போர்நிறுத்த உடன்படிக்கையை ரஷ்யா முற்றாக மீறிவிட்டதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.

தலைநகர் கீவ்வை இலக்கு வைத்து ரஷ்யப் படைகள் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அங்குள்ள அனல் மின் நிலையம் ஒன்றையும் தாக்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ உறுதிப்படுத்தியுள்ளார்.

வழமை போன்று இம்முறையும் தமது பங்காளிகளிடமிருந்து முன்கூட்டிய எச்சரிக்கைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனத் தனது உத்தியோகபூர்வ டெலிகிராம் பக்கத்தில் ஜெலென்ஸ்கி பதிவிட்டுள்ளார். தமக்குக் கிடைத்துள்ள புலனாய்வுத் தகவல்களின்படி ரஷ்யா மேலும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுக்கத் தயாராகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், டிரம்ப் அறிவித்த எரிசக்தி போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா கட்டுப்பட்டு நடக்கவில்லை என்பதையே இத்தாக்குதல்கள் வெளிப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர்நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்திருந்த போதிலும், போரில் ஈடுபட்டுள்ள இரு நாடுகளும் இதனை உத்தியோகபூர்வமாக இதுவரை உறுதிப்படுத்தவில்லை. அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக எரிபொருள் விலைகளைக் குறைக்கும் இலக்குடன், ரஷ்யாவின் டீசல் ஏற்றுமதி மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்க ஜனாதிபதி தளர்த்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஜெலென்ஸ்கிக்கு டிரம்ப் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருகிறார்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த டொனால்ட் டிரம்ப், வாஷிங்டன் உக்ரைனுடன் தொடர்ந்தும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து வருவதாகவும், போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கீவ் மற்றும் மொஸ்கோ ஆகிய இரு தரப்புடனும் அமெரிக்கா இணைந்து செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.