அமலாபால் சினிமாவில் நடிப்பதை தடுக்கவில்லை என்றும், அவரை பிரிந்ததற்கான காரணம் பற்றியும் டைரக்டர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
சினிமா டைரக்டர் விஜய் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
சில நாட்களாகவே நானும், அமலாவும் (அமலா பால்) பிரிந்தது பற்றி வெளிவரும் செய்திகளை நான் படித்து வருகிறேன். அவற்றில் வதந்திகள் தான் அதிகம். இந்த தருணத்தில் நான் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்தி கொள்ள விரும்புகிறேன்.
நானும், அமலாவும் பிரிகிறோம் என்ற செய்தி உண்மை தான். எங்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்பது? எனக்கு மட்டும் தான் தெரியும். என்னுடைய நெருங்கிய நண்பர்களும், சில ஊடக நண்பர்களும் இதைப்பற்றி வெளிப்படையாக பேசுமாறு கேட்டுக்கொண்டாலும், என் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.
ஒரு சராசரி தந்தையாக மகனின் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த பிரச்சினைகளால் நொந்து போன என் தந்தை தன் மனதில் சரி என்று பட்டதை ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது, இந்த பிரச்சினையை திசை திருப்பியது.
இயல்பாகவே சமுதாயத்தின் மீதும், பெண்கள் மீதும் அதிக அக்கறையும் மரியாதையும் கொண்டவன் நான். எனது இயக்கத்தில் வெளியான 9 படங்களும் பெண்களின் சுயமரியாதையை பிரதிபலிக்கும் வண்ணமாக தான் இருந்திருக்கிறது.
அமலா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால், திருமணத்துக்கு பிறகும் அவரின் விருப்பத்துக்கு என்னால் முடிந்த ஆதரவை கொடுத்து வந்தேன். அப்படி இருக்கும் போது, திருமணத்துக்கு பிறகு அமலா நடிப்பதால் தான் நாங்கள் விவாகரத்து பெறுகிறோம் என்று பரவும் செய்திகள் அனைத்தும் பொய்யே.
நம்பிக்கை, நேர்மை ஆகிய 2 குணங்களும் தான் ஒரு வலுவான திருமண வாழ்வுக்கு திறந்த பாலமாக செயல்படுகிறது. அந்த இரண்டும் உடைந்த பிறகு திருமண வாழ்வை தொடர்ந்தால் அதில் எந்தவித அர்த்தமும் இருக்காது.
நாங்கள் இருவரும் பிரிந்து விடுவோம் என கனவில் கூட நான் நினைத்தது இல்லை. ஆனால் இன்றைக்கு அது நடந்து விட்டது. மிகுந்த வலியை என் இதயத்தினுள் பூட்டிக்கொண்டு எனது வாழ்க்கையை கன்னியமான முறையில் தொடர நான் முடிவு செய்து விட்டேன்.
இனியாவது எங்களின் தனிப்பட்ட உணர்வுகளை மதித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகிறேன். இவ்வாறு அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.